குடிஅரசு’ நூற்றாண்டைக் கொண்டாடுவோம்! -… முனைவர் கடவூர் மணிமாறன் ..

2024 கவிதைகள் மே16-31,2024

குடிஅரசாம் இதழ்தொடங்கி நூறாம் ஆண்டைக்
கொண்டாடித் தமிழர்நாம் மகிழு கின்றோம்!
தடியாக விளங்கியது; பெரியா ருக்கோ
தன்மதிப்புப் பேரியக்க வாளா யிற்று!
இடஒதுக்கீட் டுரிமையினை எழுப்பி வந்த
இனமானப் போர்முரசம் இதுவே ஆகும்!
அடிமையென வாழ்ந்திட்ட தமிழர் எல்லாம்
ஆர்த்தெழவே செய்திட்ட ஏடும் ஆகும்!

பெரியார்மண் திராவிடமண் இதுவே என்று
பேசவைத்த குடிஅரசாம் இதழின் மூலம்
அறிவுக்குத் தடையாக மனித நேய
அன்புக்குத் தடையாக இருந்த வற்றைச்
சரியாக ஏற்புடனே முறிய டித்தார்!
சழக்கினராம் பார்ப்பனரின் புரட்டை யெல்லாம்
விரிவாக எடுத்துரைத்தே தமிழர் நெஞ்சில்
விழிப்புணர்வை வளர்த்ததனை மறப்போர் யாரே!

மக்களுக்குள் தன்மதிப்பும் சமன்மை நோக்கும்
மலர்ந்திடவே புரட்சிவிதை ஊன்றி நாளும்
சிக்கலினை வளர்க்கின்ற சாதிச் சண்டை
சிறிதளவும் தலைகாட்ட இடமே இன்றித்
தக்காங்கே ஒற்றுமையாய்த் துணிவு கொண்டு
தமிழரெலாம் பகுத்தறிவுக் கொள்கை ஏற்று
மிக்கபயன் விளைந்திடவே தமிழர் வாழ்வின்
மேன்மைக்கே உழைத்ததுவும் இதுவே அன்றோ !

‘எல்லார்க்கும் எல்லாமும்’ என்னும் நோக்கை
இலக்காகக் கொண்டுள்ள இனிய ஆட்சி
நல்லோர்தம் வாழ்த்தாலே நான்காம் ஆண்டில்
நடைபோடும் மாட்சியினை நாடே போற்றும்!
இல்லாமை அறியாமை நீங்கி இங்கே
ஏற்றத்தாழ் வில்லாத குமுகம் தோன்றிப்
பொல்லாத சாதிமதப் புரட்டை வீழ்த்தும்
பொறுப்போடு ”குடிஅரசை” நினைப்போம் நாமே!