உலகின் ஆகச்சிறந்த – பரிணாமத்தின் உச்சநிலை உயிராக இருக்கும் இனம் மனித இனமாகும்.அம்மனித இனம் தோன்றிய காலம்முதல் இன்றுவரை மனித இனத்திலும் – உலக இயற்கையிடத்தும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எண்ணற்றவை. உலகில் அனைத்தும் மாற்றத்திற்குட்பட்டவை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அறிவியல் உண்மைக்கு அறிவும் – உழைப்பும் அடிப்படை என்றால் அது மிகையில்லை.
அறிவார்ந்த உழைப்பே ஆக்கம் தரும். அயரா உழைப்பே அறிவை விரிவு செய்யும். அறிவின் உயர் எல்லையான பகுத்தறிவுதான் இன்றைய உலகின் கற்பனைக்கு எட்டா வளர்ச்சிக்கு அடிப்படை. அந்த அறிவை மனிதன் தன் உழைப்பால்தான் மிளிர வைக்கிறான் – ஒளிர வைக்கிறான்_ உயர வைக்கிறான்.
உழைப்பிற்கு இருக்கும் இந்தச் சிறப்பை மய்யப்படுத்திதான் பல சொலவடைகள் – பொன்மொழிகள் பிறந்துள்ளது.
உழைப்பே உயர்வு தரும்
உழைத்தால் தான் உயர்வு
உழைப்பால் உயர்ந்தோர்
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
– எனப் பல குறிப்பிடலாம். இந்தப் பெருஞ்சிறப்புக்குரிய உழைப்புக்கு ஊனம் ஏற்படுத்த, சுரண்டல் முறை தனது வீரியத்தைக் காட்டத் துணிந்தது. உலகை உருவாக்கும் – உன்னத வடிவமைக்கும் – உவமைக்கடங்கா நிலைக்கு உயர்த்திச் செல்லும் உழைப்பாளிகளையும் அவர்களின் உழைப்பாற்றலையும், முதலாளித்துவம் சுரண்டத் தொடங்கியது. உழைக்காமல் உடல் வளையாமல் உழைப்பாளரை கசக்கிப் பிழிந்து – வாட்டி வதைத்துச் சேர்த்த பொருளால் உல்லாச வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் முதலாளித்துவம் உண்டு கொழுத்துத் திளைத்தது. உழைப்பாளிகள் ஓடாய் மெலிந்தனர். உண்ண உணவின்றி நலிந்தனர்.
“சித்திரச் சோலைகளே! உமை நன்கு
திருத்த இப் பாரினிலே- _ முன்னர்
எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே”
-என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.
உழைப்பாளிகள், உழைப்பினால் வியர்வையைச் சிந்துவதால்தான் உலகெங்கும் உள்ள கவிஞர்கள் –
எழுத்தாளர்கள் – புரட்சியாளர்கள் பதிவிட்டுள்ளார்கள்.
பகுத்தறிவு நெறியில் சிந்தித்த கவிஞர், பெரியாரால் புரட்சிக்கவிஞர் என்று பாராட்டப்பட்ட கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மட்டும்தான் ‘சிந்தினர்’ என்ற சொல்லுக்கு மேலான ‘சொரிந்தனர்’ என்ற சொல்லால் பாராட்டியுள்ளார்.
உலக உழைப்பாளி வர்க்கத்தின் உழைப்பு சுரண்டப்படுவதை எதிர்த்து, 8 மணி நேரம் உழைப்பு-8 மணி நேரம் குடும்பத்தோடு குதூகலம் – 8 மணி நேரம் ஓய்வு என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 1886 மே, 1ஆம் நாள் அமெரிக்க நாட்டில் சிகாகோவில் முதல் வேலை நிறுத்தம் நடைபெற்றது. சிகாகோ, நியுயார்க், பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, லூயிஸ்வேலி, பால்டிமோர் என அமெரிக்காவின் பல நகரங்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். இதில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம் வெகு சிறப்போடு வெற்றிகரமாக நடைபெற்றது.
1886 மே, 3ஆம் நாள் “மெக்கார்மிம்” நிறுவன வாயிலில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தொழிலாளர்கள் பலி, 50 பேர்கள் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சிகாகோ நகரில் “ஹேமார்க்கெட்” சதுக்கத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கையே தெரியவில்லை.
நிறுவனங்களின் அதிபர்கள் (முதலாளிகள்) தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் ஏழு பேருக்குத் தூக்கு தண்டனையும், ஒருவருக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.
இந்நிகழ்வு உலகத்தையே உலுக்கியது. அமெரிக்கத் தொழிலாளர்கள் தொடங்கிய 8 மணி நேர உழைப்பு எனும் போராட்டம், அப்போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர்நீத்த சிகாகோ தொழிலாளர்களின் உயிர்த் தியாகம் உலகெங்கும் காட்டுத்தீயாய் பரவியது. 8 மணி நேர உழைப்பு என்ற தொழிலாளர்களின் உரிமை முழக்கம் வென்றது. அதன் காரணமாகத்தான் இன்று உலகமெங்கும் மே 1 தொழிலாளர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் முதன்முதல் மே நாள் கொண்டாடியவர் ம.சிங்காரவேலர். 1923 மே 1ஆம் நாள் மே தினக் கூட்டம் நடத்திய பெருமைக்குரியவரும் இவரே ஆவார்.
தமிழ்நாட்டில் முதன்முதல் மே நாள் விழா கொண்டாடிய கட்சி பெரியாரின் சுயமரியாதை இயக்கம். மே 23, 1933இல் சமதர்ம ஊர்வலம், சமதர்ம சங்கீதங்களுடன் கொண்டாட வேண்டும் என்று தந்தை பெரியார் அறிவித்தார்.
திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில்தான் மே நாள் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதேபோல், மே தினப் பூங்கா தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகரத்தில் அமைக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் – “உலகத் தொழிலாளர்களே ஒன்றிணைவோம்” என்கிற ஒற்றை வரித் தத்துவத்தினை உணர்த்திடும் உழைப்பாளர் சிலையும் நிறுவப் பட்டுள்ளது.
போராடிப் பெற்றிட்ட உழைப் பாளர் உரிமை – உலகை உலுக்கிய உழைப்பாளர் உரிமைக்குரல் அன்று வங்கி மற்றும் பேருந்துகள், தேசிய உடைமையாக்கல் எனும் கொள்கைத் தளத்தில் பல புரட்சிகளை நடத்தியது. இன்றோ ஆளும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு அனைத்து அரசுத்துறைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்கும் பணியில், பொதுத்துறையை அம்பானி, அதானி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பு செய்வதால், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டி- சமூகநீதியை ஆழக்குழி தோண்டிப் புதைக்கும் ஆபத்தைச் செய்துவருகிறது.
உழைக்கும் வர்க்கம்- அறிவை வளர்க்கும் அணியினர்கள் அயர்ந்தால் ஆபத்து வென்றுவிடும். இந்தியாவில் மே நாள் ‘மேனாள்’ ஆனது என்று எழுதும் நிலை ஆகிவிடும். விழிப்புடன் இருப்போம். உழைப்பாளர் விழுமியம் காப்போம், உழைப்பாளர்களே ! ஒன்று கூடுங்கள் !
மே நாள் வாழ்த்துகள்.