ராஜத்தின் திருமணம் – ஏ.வி.பி.ஆசைத்தம்பி

2024 சிறுகதை மே 1-15, 2024

காலம் கெட்டுப் போய்விட்டதாகவே ஓலமிடுகிறார்கள். கலி வந்து விட்டானாம்! அதனால்தான் எல்லாம் தலை கீழாக நடக்கிறதாம்! பழையகால பத்தாம் பசலிகள் சமயம் கிடைத்த போதெல்லாம் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இதைப் போல் சொல்லத் தவறுவதில்லை.

சாஸ்திரங்களையும் பழைய சம்பிரதாயங்களையும் யாரும் மதிப்பதில்லையே என்று சாம்பசிவ அய்யருக்கு மிகவும் வருத்தம். சாஸ்திரிய சம்பிரதாயம் மறுபடியும் ஜனங்களிடையே பரவ, சில சங்கங்களைக்கூட அய்யர் ஸ்தாபித்தார். இந்தக் காலத்திலே இந்தச் சங்கங்களை யார் மதிப்பார்கள்? அய்யரின் பேச்சைக் கேட்க ஆட்களே இல்லை!
அய்யரின் மனைவியே அய்யர் பேச்சைக் கேட்பதில்லை. ‘‘கடவுளைத் தூக்கி உடைப்பிலே போடுங்க” என்று அந்த அம்மாள் கடுங்கோபத்துடன் பல தடவை கூறி இருக்கிறாள்.
குறையைத் தீர்த்து வைக்காத கடவுளுக்கு திட்டுத்தானே கிடைக்கும்? அய்யரின் பக்தியும் அதிக நாள் நீடிக்கவில்லை. கல்யாணமான பத்து வருடத்தில் அய்யருக்கு கடவுள் கசந்துவிட்டார். கடவுள் காரியத்திற்கு கால் துட்டுகூட செலவழிப்பதில்லை என்று கங்கணம் கட்டினார் அய்யர்.

சாம்பசிவ அய்யர் சாதாரண ஆளல்ல. பெரிய மிராசுதார். ஆகாகானுக்கும் அய்தராபாத் நிஜாமுக்கும் அடுத்தபடியாக உள்ள ஆஸ்திக்காரரோ என்று அனைவரும் நினைக்கக்கூடிய அளவுக்கு பெரிய பணக்காரர்.

அரண்மனை போன்ற பெரிய மாளிகையும், அய்யருக்கு ஒன்று. அம்மாவுக்கு ஒன்று. ஆபீசுக்கு ஒன்று என்று கால் டஜன் கார்கள் மட்டுமல்ல. சிவனாரின் மாட்டு வாகனமும் அர்ஜுனன் அமர்ந்து கிருஷ்ண பரமாத்மா ஓட்டிச் சென்றாரே அத்தகைய குதிரை வாகனமும், இன்னோரன்ன, இல்லை என்ற குறையின்றி அய்யரிடம் எல்லாம் இருந்தன.
ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் இல்லை. அய்யருக்குப் பின் அவர் பெயர் சொல்ல, கல்யாணமாகிப் பத்து வருடங்கள் ஓடியும் ஒரு பிள்ளைகூட இல்லை. பிள்ளை இல்லாத குறையை நீக்க அந்தக் கடவுள் கருணை காட்டாததாலேயே, அவர் மனைவியும் அவரும் கடவுளை வெறுங்கல்லாகவே கருதினர்.

பத்து வருடங்களுக்குப் பின் ராஜம் எப்படித்தான் பிறந்தாளோ? அவளுக்குப் பின் அய்யருக்கு எதுவுமே பிறக்கவில்லை. யாருக்காவது இரட்டைக் குழந்தைகள் பிறந்து இரண்டும் ஆண் என்று பத்திரிகையில் செய்தி வந்தால், “அட பகவானே! அதிலே எனக்கொன்றை அளித்திருக்கக் கூடாதா? என்று கேட்க நினைப்பாரே தவிர, கேட்டதே இல்லை!
கடவுளைக் கல்லாகக் கருதும் அய்யர் எப்படி கேட்க முடியும்? அடுத்து இருப்பவனை “அய்யா” என்று கூப்பிட்டால், என்ன என்று கேட்பான். செவிடனாக இருந்தால், கொஞ்சம் உரக்கக் கூப்பிட்டால் திரும்பிப் பார்த்துக் கேட்கத்தான் செய்வான். தூரத்திலே இருந்தால், ஒலி பெருக்கி அமைத்து அழைத்தால், அவசியம் இருக்குமிடத்திற்கு ஓடி வந்து கூப்பிட்டது எதற்கு என்று கேட்காமல் போகமாட்டான். எங்கும் இல்லாத ஒருவனை எப்படித்தான் கூப்பிட்டாலும் வருவானா? அப்படிப்பட்ட கடவுளிடம் “அப்பனே எனக்கொரு ஆண் பிள்ளை கொடு” என்று அனுபவப்பட்ட அய்யர் கேட்பாரா?

தன்னையும் தன் மனைவியையும் வைத்தியர்களிடம் நன்கு பரிசோதித்துப் பார்த்தார். அய்யர், ‘பீஸ் இவ்வளவு வேண்டும். அவ்வளவு வேண்டும்’ என்று வைத்தியர் கேட்கவேயில்லை.
அய்யர் அதிகமாகவே அள்ளி வீசுவார் என்று அவர்களுக்கு தெரியும்போது கேட்க வேண்டிய அவசியம் என்ன? ஏழைய எளியவர்களிடமென்றால் ‘பணம் இருக்கிறதா’ என்று வைத்தியர்கள் கேட்பார்கள்; கொடைவள்ளல் அய்யரிடம் கேட்பார்களா?

அய்யர் ஆயிரமாயிரமாகச் செலவு செய்தார்.

ஆனால், “மிஸ்டர் அய்யர்! உங்களுக்கு இந்தப் பெண் குழந்தை பிறந்ததே ஆச்சரியம்!” என்றனர் வைத்தியர்கள்.

இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளட்டுமா என்று அய்யர் கேட்கவேயில்லை. ஒரு கல்யாணமென்ன, ஒன்பது கல்யாணம் செய்து கொண்டாலும், பிள்ளை பெறும் தகுதி தன்னிடம் இல்லையென்பதை அய்யர் தெரிந்துகொண்டார். தன் மனைவிக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைத்தால் ஒரு வேளை பிள்ளை பிறக்கலாம் என்பதும் அய்யருக்குத் தெரியும்.
இந்நிலையில் மறு விவாகம் பற்றி அய்யர் நினைக்கவோ கேட்கவோ செய்வாரா? இன்னொரு கல்யாணத்திற்கு ஜோஸ்யன் எவ்வளவோ சிபாரிசு செய்தான். கல்யாணத் தரகன். அப்ரஸ் போன்ற அடுத்த பெண்களைக் காட்டியும் ஆசை ஊட்டிப் பார்த்தான். இருவர் பேச்சையும் அய்யர் கேட்கவேயில்லை.

அபூர்வமாக பிறந்த ராஜமாவது ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா என்று கவலை அய்யருக்கு இருக்கத்தான் செய்தது. பெண் இருந்து பயனென்ன? என்றாவது ஒரு நாள் இன்னொருவன் வீட்டுக்குப் போக வேண்டியவள்தானே பெண்? ‘போகக்கூடாது’ என்று பெண்ணுக்குக் கட்டளையிட்டால் புருஷன் ஒப்புக்கொள்வானா? சமூகம் பேசாமலிருக்குமா? பெண்தான் கேட்பாளா?
ஆண் பெண்ணாக மாறும் விந்தையைப் பத்திரிகையிலே படித்து அய்யர் ஆச்சர்யப்பட்டிருக்கிறார். அது எப்படி என் ராஜத்தை ஆணாக மாற்ற முடியுமா? என்றெல்லாம் எழுதிக் கேட்க அய்யர் நினைத்துது உண்டு. ஆனால், எழுதிக் கேட்கவே இல்லை. இந்த விசித்திர விஷப் பரீட்சைக்கு யார்தான் முன் வருவார்கள்? பெற்ற தாய்
சம்மதிப்பாளா? ஏதோ ஒரு பெண்ணாவது பிறந்ததே என்று ஆறுதலில் இருந்தார் சாம்பசிவ அய்யர்.

ராஜத்தைச் செல்லமாக வளர்த்து வந்தார். தரையில் நடந்தால் பாதம் தேய்ந்து விடுமென்று அய்யர் கருதினாரோ, அல்லது அந்தஸ்தை நினைத்தாரோ தெரியாது. ராஜத்தைக் கவனிப்பதற்கு மட்டும் அரை டஜன் ஆட்களை நியமித்திருந்தார்.

“அம்மா! பசிக்குது. சாப்பாடு வேண்டும்’ என்று ஒரு நாள்கூட குழந்தை ராஜம் கேட்டதே இல்லை. பழவர்க்கங்களும் பலகார தினுசுகளும், வேளை தவறாமல் குழந்தைக்கு திணித்துக்கொண்டே இருந்தால் பசி எடுக்குமா? ராஜம்தான் கேட்பாளா?
எனக்கு பொம்மை வேண்டும், பட்டாடை வேண்டும்

என்று ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகள் கேட்குமே தவிர, பணக்கார ராஜத்திற்கு கேட்க வேண்டிய அவசியமென்ன? விளையாட்டுச் சாமான்கள் கடைகளுக்கு வந்து இறங்கு முன் தன் கைகளிலே இருக்கும்போது ராஜம் கேட்பாளா? ராஜத் திற்கு பன்னீர் என்றால் நன்றாகத் தெரியும்; ஆனால் கண்ணீர் என்றால் அவளுக்குத் தெரியவே தெரியாது.
ராஜம் மேடு பள்ளம் தெரியாமல் வளர்ந்து வந்தாள். அய்ந்து வயதை ராஜம் அடைந்ததும் பள்ளிக் கடத்திற்குப் போக மாட்டேன் என்று பிடிவாதம் செய்தாள். படிப்பு விஷயத்தில் குழந்தைகளின் விருப்பப்படி பெற்றோர்கள் நடக்க முடியுமா? ராஜத்தின் பேச்சைப் பெற்றோர்கள் கேட்கவே இல்லை.

ராஜம் பள்ளியிலே சேர்க்கப்பட்டாள். தனி ஆசிரியர் ஒருவரும் ராஜத்திற்குத் தினசரி ‘டியூசன்’ எடுத்தார். ராஜம் நன்றாகப் படித்தாள். வகுப்பில் முதன்மையாகத் தேறி முன்னேறி வந்தாள். வளர்ச்சி – அதிலும் பெண்களின் வளர்ச்சி – ஆச்சரியமானது. பேபி ராஜம் குமரியாக வளர்ந்தாள்.

பணக்காரி என்ற செருக்கோ, உயர் ஜாதி என்ற திமிரோ ராஜத்திடம் இல்லவே இல்லை. படிப்பு அவளைப் பண்புள்ளவளாக்கியது. பலரோடு பழகி உலகத்தாரோடு ஒட்டி ஒழுகும் நல்ல ஒழுக்கத்தை ராஜம் கற்றுக் கொண்டிருந்தாள். ராஜம் எங்கும் செல்வாள்; எப்போது வருவாள். எவரும் கேட்கக் கூடாது; கேட்பதே இல்லை! ராஜம் வீட்டு ராணி மட்டுமல்ல, விவேகியும் கூட! யார் என்ன கேட்கமுடியும்?

ராஜம் பருவமடைந்தவுடன், கல்யாணம் செய்யலாமா என்று ராஜத்தைப் பெற்றோர்கள் கேட்கவே இல்லை. ஆனால், நல்ல வரனாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எந்த வரனும் ராஜத்தைக் கேட்டு வரவில்லை. பணக்கார வீட்டுப் பெண்ணைக் கேட்டால், கொடுப்பார்களோ இல்லையோ, கேட்டுக் கொடுக்காவிட்டால் அவமானமாச்சே, என்றெல்லாம் எண்ணி, எல்லோரும் மவுனமாக இருந்தனர்.

ஆனால், ராஜத்தின் மனம் சும்மா இருக்க வில்லை. காதல் புகுந்து கொண்டு களி நடனம் ஆடியது.
காதலை யார்தான் என்ன கேட்க முடியும்? யாரையும்
கேட்டுக் கொண்டா இதய வீட்டில் காதல் இடம் பெறுகிறது?

கல்லினுள் இருக்கும் தேரைக்கும் தெரியாமலே அந்த உள்ளத்திலே நுழையும் சக்தி காதலுக்கு உண்டு. ‘ராஜத்தின் உள்ளத்தில் காதல் புகுந்ததிலே அதிசயமென்ன? சூரியன் உதயமாகக் கூடாது என்று உலகமே கேட்டுக்கொண்டாலும் அவன் கேட்பானா? காதலும் அப்படிப்பட்டதுதானே?
ராஜம் தன் காதலை வெளியிடவேயில்லை. வெளியிட்டால் காதல் நிறைவேறாது என்று அவளுக்கு நன்கு தெரியும். தன் இஷ்டப்படி நடக்கும் தந்தை இந்தக் காதலை ஒரு போதும் ஏற்க மாட்டார் என்று நிச்சயமாக முடிவு செய்திருந்தாள்.

அவள் காதலன் பெயர் கந்தசாமி. பெயர் கந்தசாமியாக இருப்பதால் தந்தை கடுங்கோபம் கொள்வார் என்று அவள் முடிவு செய்யவில்லை. கந்தசாமி ஓர் ஆதி திராவிடன்.
பிராமணப் பெண், ஆதி திராவிடனை மணக்க ராஜத்தின் தந்தை எப்படிச் சம்மதிக்க முடியும்? கந்தக் கடவுள் குறத்திவள்ளியைக் கல்யாணம் செய்தார் என்ற கதை எல்லோருக்கும் தெரியத்தான் செய்யும். அதற்காக பிராமணப் பெண்ணுக்கும் ஆதிதிராவிடருக்கும் திருமணம் நடத்தி வைக்க சாம்பசிவ அய்யர் சம்மதிப்பாரா? பிராமண ருக்மணி தேவிக்கும் அருண்டேல் துரைக்கும் கலப்பு மணம் நடந்த வரலாறு உலகம் அறிந்ததுதான். ஆனால், ஆதி திராவிடக் கந்தன் அருண்டேல் துரை ஆக முடியுமா?

பிராமண லட்சுமியை மகாத்மா காந்தி மகன் கலப்பு மணம் செய்ததும் சரித்திரப் பிரசித்திப் பெற்றதுதான். ஆனால், கந்தன் காந்தியார் மகனாக முடியுமா? சாம்பசிவ அய்யர் சம்மதிப்பாரா? சமூகம்தான் சம்மதிக்குமா?

ராஜம் இதையெல்லாம் எண்ணிப் பார்த்தாள் பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள், பகலிரவு விழித்து கற்பனையுலகிலே நடமாடி யோசித்து யோசித்துப் பார்த்தாள். தந்தையைக் கேட்கக்கூடாது என்று முடிவுக்கு வந்தாள்.

சாம்பசிவ அய்யரும் ராஜத்தைக் கேட்கவே/யில்லை. வரன் தேட ஆள்மேல் ஆள் அனுப்பினார். இதை அறிந்த ராஜம் திடுக்கிட்டாள் என்றாலும், திட்டமும் தீட்டினாள்.
ராஜத்திற்கு நீ, நான் என்று வரன்கள் குவிந்து கொண்டிருந்ன. “உனக்கு எந்த மாப்பிள்ளையம்மா பிடிக்கிறது?” என்று ராஜத்தைச் சாம்பசிவ அய்யர் கேட்க நினைத்தார். ஆனால் அன்றுதான் ஜாதிப் பெரியவர்கள் சாம்பசிவ அய்யரிடம் பதறிக்கொண்டு ஓடிவந்து பத்திரிகைகளைக் காட்டினர்.

‘கலப்பு மணம்’ என்ற தலைப்புக் கொடுத்து ராஜத்திற்கும் கந்தனுக்கும் பதிவுத் திருமணம் நடந்துவிட்டதாகச் செய்தியைக் கண்டு அய்யர் ஆத்திரப்பட்டார். “துரோகி! என் சொத்தில் ஒரு பைசாக்கூட கிடையாது” என்றார். கட்டுடலும் கல்வியறிவும் நிரம்பிய கந்தன் என்ன கையாலாகாத
வனா? கருத்தொருமித்த காதலரிருவர் ஒன்று

பட்டபின் பொன்னும் பணமும் தேவையா? ராஜம் சாம்பசிவ அய்யரிடம் ஒரு செல்லாக்காசு கூடக் கேட்கவில்லை.

ராஜத்தின் தியாக உள்ளத்தைப் பாராட்டி முற்போக்குவாதிகள் வாழ்த்தினர்; சீர்திருத்தவாதிகள் பூரித்தனர். சாம்பசிவ அய்யர் சீறினார்.

ஆனால் பகுத்தறிவு சிரித்தது, ராஜம் – கந்தன் வாழக்கையிலே கேட்டிராத இன்பமெல்லாம் பெருக்கெடுத்தோடியது. 