ஊதியமில்லா உழைப்பை மட்டுமே தன் உடைமையாக்கிக் கொண்டு 50க்கும் 100க்கும் ஆண்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்த பெண்களையும், பக்கம் உள்ள கடைக்குப் போய் சிறு மளிகைச் செலவு வாங்கவும் சில்லரையின்றி அல்லல்பட்டிருந்த பெண்களையும், தான் பசியோடு இருக்கும் போதும் சிக்கனம் கருதி ஒரு பிஸ்கட் பாக்கெட் தன் குழந்தைக்கு மட்டும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் பெண்களையும் கேட்டால் தெரியும் – திராவிட மாடல் அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாயின் அருமை! கேட்டுத்தான் பார்ப்போமே…
அய்ந்து ரூபாய் என்றாலும் அதில் அய்ந்து பைசா மட்டுமாவது சேமித்து அதையும் எதிர்காலத்தில் எதிர்பாராத செலவினங்களுக்கு எடுத்துப் பயன்படுத்தும் நிருவாகத் திறன் நம் பெண்களுக்கு நிரம்ப உண்டு. அப்படிப்பட்டவர்கள் கலைஞர் உரிமைத் தொகையை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று அவர்களிடமே கேட்டதில் நாம் பெற்ற உணர்வுப்பூர்வமான பதில்கள் இவை!
‘‘2023 ஆகஸ்ட் 5ஆம் தேதி எங்கள் விண்ணப்பம் பெறப்பட்டது என்ற குறுஞ்செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று ஆயிரம் ரூபாய் எங்கள் கணக்கிற்கு அனுப்பப்பட்டது’’ என்ற தகவலோடு முதலமைச்சர் அவர்கள் “இது உங்களுக்கான உரிமைத் தொகை”யென்று எங்கள் காதுகள் அதுவரை கேட்டிராத ஒரு சொல்லைச் சொன்ன அந்த அலைப்பேசி அழைப்பும், கூடவே பணமும் எங்கள் கணக்கிற்கு வந்து சேர்ந்தது. இதுவரை இப்படியெல்லாம் எங்கள் கணக்கில் யார் பணம் போட்டு நாங்கள் பார்த்தோ’’மென்று கூட்டாகச் சொல்கிறார்கள் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சாமியார் கொட்டாயைச் சேர்ந்த பெண்கள்.
“இந்த ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை நான் எங்கள் பகுதியிலுள்ள ஒரு பெரிய மளிகைக் கடையில் நடத்தப்படும் மாதாந்திர சீட்டுக்காகப் பயன்படுத்துகிறேன். ஆண்டு முழுவதும் இந்தத் தொகையைக் கட்டிக் கொண்டு வரும்போது ஏழு சிப்பம் அரிசி, (ஒருசிப்பம் என்பது 26 கிலோ) பத்து கிலோ உளுத்தம் பருப்பு, 10 கிலோ துவரம் பருப்பு, 15 லிட்டர் எண்ணெய், 5 கிலோ பிரியாணி அரிசி, 5 கிலோ கோதுமை மாவு ஆகியவை மொத்தமாகச் சேர்த்துத் தருவார்கள். அதற்காக நான் இதைப் பயன்படுத்திக் கொள்கிறேன்… என்னுடைய கணவர் கட்டடவேலை செய்கிறார்… நான் வீட்டில் சமையல் பணிக்குச் செல்கிறேன். அப்படியிருக்கும் எங்கள் குடும்பத்தில் இந்தத் தொகையென்பது ஆண்டு முழுவதும் எங்கள் குடும்பத்தின் மளிகைச் செலவைப் பூர்த்தி செய்துவிடும் என்பதால் அரசு கொடுக்கும் இந்தத் தொகை எங்கள் வாழ்க்கைக்கு மிகப்பெரிய ஆதாரமாக இருக்கிறது. எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது ” என்கிறார் சித்ரா.
“என் கணவர் தேங்காய் மண்டியில் வேலை செய்கிறார். எங்கள் வீட்டில் மூன்று பெண்கள் இருக்கிறோம். எங்கள் அம்மா விதவைகளுக்கான உதவித்தொகை மூலம் இதுவரை ஆயிரம் ரூபாய் பெற்று வந்தார். இப்போது 1200 ஆக உயர்த்திக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் நானும் என் அக்காவும் கலைஞர் உரிமைத்தொகை பெறுகிறோம். இதுவரை ஒவ்வொருவரும் 7000 ரூபாய் பெற்றிருக்கிறோம். நானும் மளிகைக்குச் சீட்டுப் போட்டிருக்கிறேன். மளிகைச் செலவு தன்னிறைவு பெறுவதால் இதுவரை இருந்தது போல் சிறு சிறு பொருள்களை வாங்குவதற்கும் முடியாமல் ஏக்கப்படாமல் இனிமேல் எங்கள் வீட்டுக்குத் தேவையான, எங்கள் வேலையை எளிதாக்கும் மிக்ஸி குக்கர் போன்ற பொருள்களை நாங்களே வாங்கிக் கொள்வோம். இது எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தருகிறது” என்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த சுகந்தி.
அடுத்ததாக, “என் பெயர் பண்பரசி. நான் நாட்றம்பள்ளி ஊரைச் சேர்ந்தவள். என் கணவர் ரோடு வேலைக்குச் செல்கிறார். நாங்கள் விவசாயமும் பார்க்கிறோம். நான் தினக் கூலியாக வேலைக்குச் செல்கிறேன். ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை இல்லாமல் தினமும் தான் உழைக்கிறோம், பிள்ளையோ புருஷனோ கூட இந்தா வைத்துக்கொள் என்று 500, 1000 கொடுப்பதில்லை… எனக்கு அப்பாவும் இல்லை – வரும்போது போகும்போது கையில் ஏதாவது கொடுக்க… இந்த மாதிரி சூழலில் தாயாகத் தந்தையாக இருந்து இந்த ஆயிரம் ரூபாயை எனக்கு முதலமைச்சர் கொடுக்கிறார். நான் சிலிண்டர் வாங்குவது, லோன் கட்டுவது என்று எந்த வேலை செய்தாலும் பத்தியும் பத்தாததுமாக கடன் வாங்கி அதற்கு வட்டி கட்டிக் கொண்டிருப்பேன். இந்தத் தொகை எனக்கு வட்டிக்கு வாங்குகிற வேலை இல்லாமல் செய்து விட்டது. நான் மிகவும் நன்றி சொல்கிறேன் ஸ்டாலின் அய்யாவுக்கு” என்று மனம் நெகிழ்ந்து சொல்கிறார்.
அதுபோல், திருப்பத்தூர் சந்தைப் பகுதியில் குடியிருக்கும் சித்ரா,
“நான் அன்றாடம் ஒரு கடைக்கு வேலைக்குப் போகிறேன். என் வருமானத்தை என் குடும்பச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன். எனக்கென்று எதுவும் வாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இப்போது இந்தப் பணத்தை அப்படியே சேமித்து வைத்து எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் நான் பயன்படுத்திக் கொள்வேன்” என்று நாளைய நம்பிக்கையாக இப்பணத்தைப் பார்க்கிறார்.
“நாங்கள் பூத் தோட்டம் வைத்திருக்கிறோம், மாடுகள் இருக்கிறது… வீட்டில் நான் அதையெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்.
என் கணவர் வெளியூரில் மேஸ்திரி வேலைக்குப் போகிறார். திடீரென்று பிள்ளைகள் பேனா வேணும் என்கிறார்கள், நோட்டு வேணும் என்கிறார்கள்… எதற்கும் அவர் வரும் வரை காத்திருக்க வேண்டியதாக இருக்கும். இதுவரை என் பேரில் ஒரு கணக்கு புக் சும்மாதான் வைத்திருந்தேன். அதில் பணம் இல்லை… ஆனால் இப்போதெல்லாம் அரசு கொடுக்கிற பணம் இருப்பதால் நானே பிள்ளைகளுக்குக் கொடுத்து விடுகிறேன். ஒரு முறை என் கணவர் கையில் எதுவுமில்லாமல் புறப்படும் போது ‘இந்தாப்பா என்னிடம் இருக்கிறது’ என்று அவருக்குக் கொடுத்தனுப்பினேன். எங்கள் ஊரில் நிறைய வயதான பெண்கள் உடம்பு பிரச்சினைகளால் வெளியில் நிலத்து வேலைக்குச் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். இந்தப் பணம் அவர்களுக்கு பேராதரவாக இருக்கிறது. இது பணம் என்று சொல்வதை விட மிகப்பெரிய திருப்தி, நிம்மதி என்று தான் சொல்ல வேண்டும். எதிர்பாராத திடீர் செலவுகளுக்கு வெளியில் போகிற ஆண்கள் வீட்டுக்கு வரும் வரை காத்துக் கிடக்காமல் நம்மிடமே இருக்கிறது என்ற நம்பிக்கையை இந்தப் பணம் கொடுக்கிறது” என்று உணர்வுபூர்வமாகத் தன் மன நிறைவைத் தெரிவிக்கிறார் ராவுத்தம்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி.
இவையெல்லாம் வெறும் உரையாடல்கள் அல்ல…
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் உரிமைகள் மறுக்கப்பட்டு அழுத்தப்பட்டுக் கொண்டிருந்த பெண்ணினம் விடுதலை பெற்று வெளிவரத் தொடங்கி விட்டோம் என்று விடும் அழுத்தம் தளர்ந்த பெருமூச்சாகும்.
மக்கள் தொகையில் சரி பகுதியான பெண்களை அடிமைகளாக ஆக்கி வைத்துக் கொண்டுள்ள மதக் கருத்துகளை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாசிச அரசு ஒருபுறம்; பெண்களைக் கண்களாக மதிக்கும் திராவிட மாடல் அரசு மறுபுறம். மனுதர்மத்தை அமல்படுத்த முடியாத அரசியல் சூழல் அவர்களுக்கு அதிர்ச்சியளிப்பதால், ஆயிரம் ரூபாய் உதவியைப் ‘பிச்சை’யென்று கொச்சைப்படுத்தி ஆறுதல் பெறுகின்றனர். பிச்சை பெற்றே பிழைத்த கூட்டம், பிச்சை பற்றி பேசுவதுதான் கேவலம்!
மக்கள் நல உதவிகளுக்கும் பிச்சைக்கும் வேறுபாடு உணராத மனித விரோதிகளிடம் நாம் எச்சரிக்கையாய் இத்தேர்தலை எதிர்கொண்டு விடிவு காண வேண்டியது கட்டாயக் கடமையாகும்!