சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களைச் சரிசமமாக நடத்துவது என்பதும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதும் ஓர் அரசின் ஜனநாயகக் கடமை ஆகும். கடந்த பத்து ஆண்டுகளில் பி.ஜே.பி. ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி நிற்கிறது. பச்சிளம் குழந்தைகள் தொடங்கி பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் என்று வயதைக் கடந்த அனைத்து பெண்களும் ஏதாவது ஒரு வகையான பாலியல் சீண்டல்கள், வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள். பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் மட்டுமா இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன? எல்லா பகுதிகளிலும் தானே பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகமாகின்றன? என்ற கேள்வி நியாயம்போல் தோன்றும். அதற்கான பதில் மிக ஆழமானது. இந்தியாவில் பி.ஜே.பி. ஆட்சி செய்யாத எந்த மாநிலத்தில் வன்கொடுமைகள் நடப்பினும் பாதிக்கப்பட்ட மக்களால் அதை எதிர்த்துக் குரல் எழுப்ப முடியும்; போராட்டங்கள் நடத்த முடியும்; நீதி கேட்க முடியும்; ஆனால், பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் அரசின் துணையுடன்,பாசிசவாதிகளின் பாதுகாப்புடன் குற்றங்கள் அரங்கேறுவதுதான் கொடுமையிலும் கொடுமை !
ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கிய பல வன்கொடுமைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பா.ஜ.கவின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் துணையுடன் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா பகுதியில் வசித்த எட்டு வயது சிறுமி ஆசிபா, கோவிலுக்குள்ளேயே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். நம் வீட்டில் நடந்த கொடுமை போல் இந்தியா முழுவதும் உள்ள மனித நேயர்கள் துடித்தனர். அந்தக் குழந்தைக்காக நாடு முழுவதும் ஆதரவுக் கரம் நீண்டது. நீதி கேட்டுப் போராட்டங்கள் நடந்தன. ஆனால், ஒரு பிரிவினர் மட்டும் தேசியக் கொடியோடு ஊர்வலம் நடத்தினர். அப்போராட்டம்
அந்தக் குழந்தைக்கு ஆதரவாக அல்ல; மாறாக, குற்றவாளிகளுக்கு ஆதரவாக! அதில் மற்றுமோர்அதிர்ச்சி என்னவென்றால், அந்தப் பேரணியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பங்கேற்றனர் என்பதுதான் !
பாசிச பி.ஜே.பியின் பெண்கள் விரோதப் போக்கில் இந்தச் சம்பவம் தொடக்கமும் இல்லை; முடிவும் இல்லை. 2002ஆம் ஆண்டு
மோடி ஆண்ட குஜராத் மாநிலத்தில் இந்துத்துவா
வாதிகளால் அரங்கேற்றப்பட்ட கலவரத்தில், கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற இஸ்லாமிய பெண், இந்துத்துவ குண்டர்
களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, தன் குடும்பத்தையும் வாழ்வையும் இழந்து நின்றார். தாயின் கண் முன்னே பச்சிளம் குழந்தையின் தலையைப் பாறையில் அடித்துக் கொலை செய்தனர். (வாசிக்கும்போதே உள்ளம் நடுங்குகிறதல்லவா? இதுதான் மதவாதத்தின் கோர முகம்) எப்படியும் இத்தகைய கொடுமையைச் செய்தவர்களுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்ற உறுதியுடன் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, மகாராஷ்டிரா நீதிமன்றம் குற்றவாளிகளுக்குத் தண்டனை விதித்தது. குற்றவாளிகளின் பக்கம் நின்ற குஜராத் பா.ஜ.க. அரசு, ஒன்றிய அரசின் ஒப்புதலோடு தண்டனையைக் குறைத்து குற்றவாளிகளை விடுவித்தது. வெளியே வந்த கொடூரர்களுக்கு , இந்துத்துவ கூட்டம் மாலை போட்டு வரவேற்றது. மகாராஷ்டிரா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தலையிட குஜராத் அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுகிறதா? நடப்பது பி.ஜே.பி ஆட்சி. எனவே அவர்களால் தாங்கள் நினைத்த அனைத்து அட்டூழியங்களையும் செய்ய முடியும். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, குஜராத் அரசின் அதிகார மீறலைக் கண்டித்து, சட்டத்திற்கு எதிரான போக்கைக் கடைபிடித்த ஒன்றிய அரசின் தலையிலும் குட்டு வைத்ததால் குற்றவாளிகள் இப்போது சரணடைந்துள்ளனர்.
மேற்சொன்னவை மட்டுமல்ல, 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்
கப்பட்ட சிறுமியின் நிலைக்கு யார் காரணம் தெரியுமா? பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர். இந்தக் குற்றவாளியைக் காப்பாற்ற முயற்சித்த பி.ஜே.பியின் துடிப்பு என்னவென்பதை இந்தியாவுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது, இதன்மூலம் பெண்களைப் பாதுகாக்கும் இவர் களின் லட்சணம் பளிச்சென்று வெளிப் பட்டது! பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்திலேயே கொலை செய்யப்படும் கொடுமை உலகில் எங்காவது நடக்குமா? பி.ஜே.பி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நடந்தது !
இப்படியாக, ஆசிபா தொடங்கி பில்கிஸ் பானு, உன்னாவ் என்று தொடரும் பட்டியலில் இந்தியாவின் மல்யுத்த வீராங்கனைகளும் விதிவிலக்கல்ல! இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பா.ஜ.க. எம்.பி. பிரஜ் பூஷண் மீது வீராங்கனைகள் ஒன்றிணைந்து பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தி, ஒருமித்த கருத்தோடு புகார் செய்தும் பலன் இல்லை. டெல்லியில் பெரும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் பி.ஜே.பி.அரசின் மீதான வரலாற்றில் படிந்த கறை. அவர்கள் பதக்கம் பெற்று வந்தபோது “நீங்கள் இந்தியாவின் மகள்கள்” என்று பெருமையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவோ ஒரு சொல் கூட பேசவில்லை.
மணிப்பூர் வரை இவர்கள் நடத்தும் அவலங்கள் தொடர்கிறது. “டபுள் இன்ஜின் சர்க்கார்”, மாநிலத்திலும் ஒன்றியத்திலும் நாங்கள் ஆட்சியில் இருந்தால், வளமிக்க இந்தியா உருவாகும் என்று சொன்னார்கள். பி.ஜே.பி. ஆளும் மணிப்பூரைப் பார்த்து யாராவது இந்தக் கூற்றை இனி நம்புவார்களா ? பி.ஜே.பி ஆளும் மாநிலம் என்றால் , பெண்கள் வாழத் தகுதியற்ற பகுதி என்பதுதான் நிதர்சனமான உண்மை. காரணம், அந்த மாநிலங்களில் குற்றங்கள் நடைபெறும் போது ‘சவு(சௌ)கிதார்’ (Chowkidar) உறங்கச் சென்று விடுவார்.
அவர் மட்டுமல்ல; ஒட்டுமொத்த பாசிசவாதிகளும், அரசியலில் இருந்து விடுபட்டு வீட்டிலேயே உறங்க 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் இவர்களுக்குத் தோல்வியைத் தருவார்கள்.