மொழி பெயர்ப்புப் பணியில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் ! – முனைவர்.வா.நேரு

2024 ஏப்ரல் 16-30, 2024

இன்றைய யுகம் என்பது செயற்கை நுண்ணறிவு யுகம். கணினி யுகம், இணைய உலகம் எல்லாம் கடந்து செயற்கை நுண்ணறிவு உலகமாக இன்றைய உலகம் மாறியிருக்கிறது. 1955ஆம் ஆண்டில் ஜான் மெக்காதே என்பவர்தான் இந்தச் செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லைப் பயன்படுத்திய இவரே செயற்கை நுண்ணறிவின் தந்தை எனப்படுகிறார். 1955இல் முதன்முதல் இது பற்றி விளக்கிய அறிவியல் கருத்தரங்கத்திலேயே செயற்கை நுண்ணறிவின் நோக்கங்களில் ஒன்றாக ‘இயந்திரங்களை மொழியைப் பயன்படுத்தச்செய்வது’ என்பதைக் குறிப்பிடுகின்றார்.

2024, மார்ச் 31 அன்று இணையம் வழியாக நடைபெற்ற ‘செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழ்’ என்னும் சிறப்புரையைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘மக்கள் சிந்தனையாளர்’ தோழர் ஆழி.செந்தில்நாதன் அவர்கள் அச்சிறப்புரையை அளித்தார். பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்காவின் தலைவர் அய்யா மருத்துவர் சோம. இளங்கோவன் உள்ளிட்ட தமிழ் மொழி மீதும் அறிவியல் மீதும் ஆர்வம் உள்ள பலர் உலகின் பல பாகங்களில் இருந்தும் கலந்து கொண்டனர்.

இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழி என்ன செய்யும் என்பதைப் பற்றிய விளக்கத்தை ஆழி.செந்தில்நாதன் அவர்கள் கொடுத்தார். இனிமேல் எந்த மொழியும் மிக உயர்ந்த மொழி என்று சொந்தம் கொண்டாட முடியாது. ஒரு நாட்டிற்கு இணைப்பு மொழி இது, அல்லது உலகத்திற்கே இந்த மொழிதான் இணைப்பு மொழி என்பது எல்லாம் இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் காணாமல் போய்விடும். செயற்கை நுண்ணறிவுக்கு எல்லா மொழியும் ஒன்றுதான்” என்றார்.

மொழி பெயர்ப்பு முயற்சிகளை எல்லாம் தேவையற்றதாக செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் ஆக்கப் போகின்றன. ஆமாம் உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் 1330 திருக்குறளையும், சில நிமிடங்களில் மொழி பெயர்ப்புகளை, செயற்கை நுண்ணறிவு இயந்திரம் செய்து முடித்துவிடும்.

நாம் மார்க்சிம் கார்க்கியின் நாவலை – இரஷ்ய மொழியில் இருக்கும் ‘தாய்’ நாவலைத் தமிழ் மொழியின் வாயிலாக செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தின் வழி படிக்க முடியும். அதில் இருக்கும் ஒரு பாத்திரப் படைப்பைப் பற்றி நாம் தமிழ் மொழியில் விளக்கம் கேட்டால், இரஷ்ய மொழிக்காரர் இரஷ்ய மொழியில் சொல்லும் பதிலை மொழி பெயர்த்து அந்த இயந்திரம் நமக்குத் தமிழில் சொல்லும். உலகில் இனி நாம் தமிழ் மொழியில் பேசி எந்த மொழிக்காரரோடும் பேசமுடியும்.அதாவது நாம் டெல்லி தெருக்களில் போய் தமிழ் மொழியில் கேள்வி கேட்டால் அதனை அந்த இந்திக்காரருக்கு இந்தி மொழியில் அந்தக் கருவி சொல்லும். அவர் இந்தியில் சொல்லும் பதிலைத் தமிழில் மொழிபெயர்த்து நமக்கு அந்தச் செயற்கை நுண்ணறிவுக் கருவி சொல்லும்.

நாம் கைகளில் வைத்திருக்கும் மொபைல் போன்கள் மூலம் ‘ஜிபே’ (GPay) போன்ற செயலிகள் மூலம் பணம் அனுப்புகிறோம்.இரயில் டிக்கட் பதிவு செய்கிறோம். எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதனைப் போல இந்த செயற்கை நுண்ணறிவு மூலமாக நம் கைகளில் இருக்கப்போகும் ஒரு கருவி மூலமாக மொழிகளைக் கடந்து நாம் பேசுவோம்.மொழிகளைக் கடந்து நாம் இலக்கியங்களைப் படிப்போம். நாம் எழுதும் இலக்கியப் படைப்புகளும் இப்படி உலக மொழிகள் அனைத்திற்கும் போய்ச் சேரும். உலகில் இருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் போய்ச் சேரும்.’

நாத்திகம் பற்றி உலகில் இருந்த – இருக்கும் எழுத்தாளர்கள் யார் யாரெல்லாம் எழுதியிருக்கிறார்களோ, அதைத் தமிழில் கொடு என்று கேட்டால், உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இருக்கும் ‘நாத்திகம் ‘பற்றிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என அத்தனையையும் அந்தந்த மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து நமக்குச் சில நிமிடங்களில் கொடுத்துவிடும். இப்பொழுது கூகுள் மூலமாக ஆங்கிலத்தில் இருக்கும் ‘நாத்திகம்’ சம்பந்தப்பட்ட படைப்புகளை எடுக்க முடியும்.அந்தந்த மொழிகளைக் கொடுத்து அந்தந்தப் படைப்புகளை எடுக்கமுடியும். ஆனால் செயற்கை நுண்ணறிவு மூலமாக எந்த மொழியில் இருந்தாலும் அதனை எடுத்து மொழி மாற்றி நமக்குத் தமிழில் கொடுக்கும்,அல்லது எந்த மொழியில் கேட்கிறோமோ அந்த மொழியில் கொடுக்கும்.

“நம் நாடு அமெரிக்காபோல், அய்ரோப்பா போல், ரஷ்யா போல், ஜப்பான் போல் ஆக வேண்டும். ஒருவருக்கு 18 மொழிகள் தெரியும் என்று சொல்வதைவிட, நம் நாட்டு மொழியும், உலக மொழியும் தெரிந்திருந்தாலே போதுமானது என்று நான் கூறுவேன். 18 மொழிகள் பயின்ற பெருமையினால் மக்களுக்கு லாபம் என்ன? அஷ்டாவதனம்,சதாவதானம் போல் – படித்தவனுக்குப் பெருமையே தவிர, யாருக்கு லாபம்? சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் இலாபம் என்ன? அதைக் கவனித்தே நாம் மொழி விவகாரங்களில் கவனம் செலுத்தவேண்டும்” என்ற தந்தை பெரியார் அவர்கள் ‘மொழி என்பது ஒரு கருவி’ என்றார்.அந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு யுகம் ஒரு புதுப்பாதையைக் காட்டியிருக்கிறது.
அறிவு என்பது பொதுச்சொத்து. அந்த அறிவின் மூலமாகக் கிடைக்கும் பலன்கள், வாய்ப்புகள், வசதிகள் உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் கிடைக்கவேண்டும். கணினி உலகில் முதன்முதலில் பயனுக்கு வந்தபோது அதனைப் பயன்படுத்துவதில் இந்திய மொழிகளில் முந்திக் கொண்டது தமிழ்தான். 1973ஆம் ஆண்டிலேயே அதற்கான முன்னேற்பாட்டைத் திராவிட இயக்க அரசுகள் முன்னெடுத்தன. டாக்டர் கலைஞர் அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கணினிக் கல்விக்கு மிக முன்னுரிமை கொடுத்தார்.1990களில் அதனை விரிவுபடுத்தி பலரும் கணினி கற்க வசதிகள் செய்தார். அதனைப் பயின்றவர்கள் இன்றைக்கு உலகம் முழுவதும் உயர் வருவாய் பெறும் பல்வேறு வேலைகளில் இருக்கின்றனர்.

அதனைப் போல செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் தமிழர்களும், தமிழும் முந்திக் கொள்வதற்கான பல்வேறு செயல்பாடுகளைத் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசும், உலகின் பல பகுதிகளில் இருக்கும் தமிழர்களும் செய்து கொண்டுள்ளனர். திரு.ஆழி.செந்தில்நாதன் செயற்கை நுண்ணறிவின் மூலமாகச் செய்யப்படும் பன்மொழி பெயர்ப்புக்கான மென்பொருள் நிறுவனத்தை அய்லசா(Ailaysa) என்னும் பெயரில் ஆரம்பித்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவின் மூலமாக எழுதுதல், மொழி பெயர்த்தல், குரல் வழி எழுதுதல் – செயற்கை நுண்ணறிவு வழிப் படங்கள் உருவாக்குதல் போன்ற பல வேலைகளைச்செய்யும் ஒரு பொதுத்தளமாக, தமிழுக்கு இது உருவாக்கப்பட்டிருக்கிறது என இதன் அறிமுகத்தில் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ் இலக்கியமும் தமிழ் மொழியும் பல ஆயிரம் நூற்றாண்டுகள் பழமையுடையன. செம்மொழி இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டது தமிழ் மொழி. இந்தச் செம்மொழி இலக்கியங்களை உலகத்தில் உள்ள எந்த மொழிக்காரரும் தமிழ்மொழி அறியாமலேயே படிக்கமுடியும். அதற்கு நிறைய தமிழ்மொழி இலக்கியம் சார்ந்த தரவுகளைக் கணினியில் ஏற்றவேண்டும். அதனைத்தான் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் பயன்படுத்தும்.ஆங்கில மொழிச்சொற்கள் இணையத்தில் நிறைய இருக்கின்றன. ஆதலால் எந்த மொழியில் இருந்து மொழிபெயர்த்தாலும் அது எளிதாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவிடும். தமிழுக்கும் அதுபோல ஏராளமான சொற்களை நாம் இணையத்தில் தரவுகளாக ஏற்றவேண்டும். அதனைத் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் செய்திட முன்வரவேண்டும் எனத் திரு.ஆழி.செந்தில் நாதன் அவர்கள் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளை எப்படி உலகமெல்லாம் கொண்டு செல்வது என்ற அடிப்படையில் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி, இந்திய ஒன்றியத்திலே அமைய வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய 91 வயதிலும் தொடர் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் அய்யா ஆசிரியர் அவர்கள். இந்தியப் பொதுத்தேர்தல்,அமெரிக்கத் தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் இருக்கிறது என்று செய்திகள் கூறுகின்றன. இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் திராவிட இயக்கத்தின் நோக்கத்தை அடைய உழைத்திடுவோம். அதற்கு வரும் ஏப்ரல் 19 அன்று இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு நமது வாக்குகளை அளித்திடுவோம். 