நடைபெற இருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, இந்தியா கூட்டணிக்குத் தலைமையேற்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
1947க்குப் பிறகு எத்தனையோ தேர்தல்களை இந்திய ஒன்றியம் சந்தித்திருந்தாலும், இந்தத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்று சொல்லப்படுகிற அளவிற்கு சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டை ஆளும் பா.ஜ.க., ஜனநாயகத்தை முற்றிலுமாக அழித்து ஒழித்து ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டது.
காலம் காலமாய்ப் போராடிப் பெற்ற சமூக நீதியை சவக்குழிக்கு அனுப்பும் முயற்சியில் கங்கணம் கட்டி காரியமாற்றி வருகிறது காவிக் கூட்டம்.
ஏழை எளிய ஒடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து, முதல், இரண்டாம் தலைமுறையாக கல்லூரிகளில் காலடி வைக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது. நீட், கியூட் என சூழ்ச்சித் தடைகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. தற்போது ஆக்டோபஸ் கரங்களை அகல விரித்து அடித்தட்டு மக்களின் கல்வி உரிமையை அடியோடு விழுங்கப் பார்க்கிறது. இட ஒதுக்கீட்டை எப்படியும் ஒழித்தே தீருவது என்பதில் தீவிரமாக இருக்கிறது பா.ஜ.க.
மாநில உரிமைகள் ஒவ்வொன்றாய்ப் பறிக்கப்பட்டு ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்திற்கும் அதிபர் ஆட்சியைக் கொண்டுவரும் ஆசையில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறது ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கூட்டம்.
பா.ஜ.க. மீண்டும் அரியணை ஏறுமானால் இது தான் இந்தியாவின் கடைசித் தேர்தல் என்று ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து அமைப்புகளும் அபாயச் சங்கு ஊதுகின்றன!
அபாயகரமான இந்தச் சூழலில் அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்று சொல்வதுண்டு. இங்கே ஒவ்வொரு அறிவிப்பும் மக்கள் மனம் அறிந்து நலன் கருதிச் செய்யப்பட்டிருக்கிறது.
1925ஆம் ஆண்டில் இட ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் காங்கிரசை விட்டே வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார் பெரியார்! இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதில் அன்று காங்கிரஸில் இருந்த பார்ப்பனர்களால் எவ்வளவு தடைகள்? சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை அடுத்த ஆண்டு தமிழ்நாடே கொண்டாட இருக்கிறது. பெரியார் இயக்கம் கடந்த நூறாண்டில் சமூக நீதியைக் காப்பதற்காகக் கண்ட களங்கள் எத்தனை எத்தனை?
அதே காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, இன்று இட ஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பை நீக்க சட்டம் கொண்டு வருவோம் என்று சொல்கிறது!
எவ்வளவு பெரிய மாற்றம்? இந்த ஒன்றுக்காகவே இந்த அறிக்கையை நாம் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும்.
சமூக – பொருளாதார – ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படும்! பா.ஜ.க. கொண்டு வந்த பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான
10 சதவிகித இட ஒதுக்கீடு அனைத்து ஜாதிகளுக்குமானதாக விரிவுபடுத்தப்படும்!
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்ஜாதியினருக்கு மட்டுமே வழங்கப்பட்ட பொருளாதார அடிப்படையிலான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை
எதிர்த்து தமிழ்நாடு அரசும் திராவிடர் கழகமும்
தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. ஒட்டு மொத்த இந்துக்களுக்கும் நாங்கள்தான்
பாதுகாவலர்கள் என்று கூறும் சங்பரிவார் கும்பலுக்கு ஒடுக்கப்பட்ட ஏழை மக்கள் கண்ணுக்குத் தெரியவில்லையே ஏன்? என்ற கேள்விக்கு அவர்களிடமிருந்து பதிலே இல்லை!
காங்கிரஸ் கொடுத்த இந்த அறிக்கை மூலம் உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் என்ற வரம்பு இனி ஒழிக்கப்பட இருக்கிறது.
திராவிடர் கழகத்தின் நீண்ட நெடுநாளைய கோரிக்கையில் மிக முக்கியமான ஒன்று – ‘தனியார்
துறையில் இட ஒதுக்கீடு!’ அனைத்துத் துறைகளும் அவசர அவசரமாக தனியார் துறைக்குத் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் மிக அவசியமான இந்தக் கோரிக்கையை மனதில் கொண்டு தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொல்லியிருப்பது பாராட்டத் தகுந்ததாகும்.
நீட், கியூட் உள்ளிட்ட தகுதித் தேர்வுகள் தேவையா? இல்லையா? என்பதை முடிவெடுக்கும்
உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்படும்! பட்டயப் படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் பயிற்சி
கட்டணம்! கல்விக் கடன் ரத்து! இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் தீவிரமாக அமலாக்கப் படும்! தேசிய கல்விக் கொள்கை மாநிலங்களின் ஒப்புதலோடு மறு ஆய்வு செய்யப்படும் என
சமூக நீதி காக்கும் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!
வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களின் வயதான பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்! சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு! ஒன்றிய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவிகித ஒதுக்கீடு! என பெண்ணுரிமை காக்கும் வாக்குறுதிகள்!
இந்தியாவின் ஒற்றுமைக்கு அடித்தளமாக
விளங்கும் கூட்டாட்சி முறை வலுப்படுத்தப்படும். பொதுப்பட்டியலில் உள்ள துறைகள் மாநிலப்பட்டி
யலுக்கு மாற்றப்படும். மாநிலங்களுக்குத் தரப்படும்
வரி பகிர்வு நேர்மையானதாகவும் வெளிப்படையானதாகவும் மாற்றப்படும். டெல்லி, புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்கப்படும்! என உறுதி அளிக்கிறது காங்கிரஸ் அறிக்கை.
தி.மு.க. நடத்திய பெண்கள் உரிமை மாநாட்டில் தந்தை பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தைக் காட்டி பெரியாரின் தொண்டை நினைவு கூர்ந்தார் திருமதி பிரியங்கா காந்தி!
“தேர்தலில் பா.ஜ.கவைத் தோற்கடிப்பது மட்டுமே தீர்வாகாது. சமூக கட்டமைப்புகளைச் சிதைக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை அழிப்பதே
இறுதி இலக்காக இருக்க வேண்டும்!” என்றார் ராகுல் காந்தி!
இவையெல்லாம் வெறும் வெற்று வார்த்தைகள் அல்ல! என்பதை நமக்கு உறுதி செய்துள்ளது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சமூக நீதி பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை!
இந்த அறிக்கையிலுள்ள அறிவிப்புகளைச் செயல்படுத்த முடியுமா? நிதி ஆதாரம் இருக்கிறதா? என்றெல்லாம் அய்யமும், வினாவும் எழுப்பி மக்களை அவநம்பிக்கை கொள்ளும்படி செய்து அரசியல் ஆதாயம் அடையப் பாடுபடுகின்றனர்.
ஆனால், மேனாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், தமது பழுத்த அனுபவத்தின் அடிப்படையில் பக்குவமாய்ப் பதில் அளித்து, முடியும் என்று நம்பிக்கையூட்டி, சங்கிகளின் சதியை முறியடித்துள்ளார்.
இந்தியா கூட்டணி நிச்சயம் செய்யும் என்கிற நம்பிக்கை மக்களிடம் முழுமையாகவுள்ளது என்பது அவர்களின் கருத்துகள் மூலம் வெளிப்படுகிறது. எனவே, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, இத்தேர்தலில் ஒரு பெரும் மாற்றத்தை, இந்தியா கூட்டணிக்கு ஓர் ஏற்றத்தை உருவாக்கும் என்பது உறுதி !