செய்யாத குற்றத்திற்குப் பழி சுமத்தப்பட்டுள்ளார் ஆ.ராசா

பிப்ரவரி 16-28

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் தி.மு.க.வின் சார்பில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசா அவர்கள், தனது ஆட்சிக்காலத்தில் செய்த மிகப்பெரிய சாதனை, ஏழை- எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் (20, 30 காசு) தொலைப்பேசியில் பேசிடும் வாய்ப்பை ஏற்படுத்தி வரலாறு படைத்ததாகும்.

60 விழுக்காடு அலைக்கற்றைகள் இராணுவத்தால் பயன்படுத்தப்படாமல் இருந்தது அறிந்து, அவைகளைப் பெற்று வெகுஜனப் பயன்பாட்டிற்குப் பயன்படும்படிச் செய்தார்.

ஏலத்தின்மூலம் சுமார் 90 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு கஜானாவுக்கு வருவாய் தேடிக் கொடுத்தார். இப்படிப்பட்டவர் பல பழிகள் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளார்! மத்திய அரசின் கொள்கை முடிவினை (றிஷீறீவீநீஹ் ஞிமீநீவீவீஷீஸீ) அமல்படுத்தியதால், அனுமானம் – கற்பனையான கணக்காகச் சொல்லப்பட்ட இழப்புதான் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று இன்றைய தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராலும், பல தரப்பாலும் சொல்லப்பட்ட பிறகும், குற்றத்தைச் சுமந்தவராக்கப்பட்டுள்ள விசித்திரத்தை நாடு பார்க்கிறது!

செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி! சி(ற)லப்பதிகாரத்தால்…

குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டுள்ள இராசாவையும் பார்க்கிறது!

இது பார்ப்பன சக்திகள், ஊடகங்கள் மற்றும் தேர்தல் கால அரசியல் மூலதனம் தேடி ஆதாயம் காணும் அரசியல் கட்சிகள் – இவைகளுக்குக் கிடைத்துள்ள தற்காலிக வெற்றி என்றாலும் அது நிரந்தரமல்ல, இறுதி வெற்றி உண்மைக்குத்தான்! அது உறுதி!! நெருக்கடி காலத்துச் சோதனைகளையும், வேதனைகளையும் வடுக்களாக, விழுப்புண்களாகப் பெற்ற கட்சி தி.மு.க.வும், அதன் தலைமையும்! தனது உறுதிமிக்க லட்சிய உணர்வாலும், ஏழை, எளிய சாமானிய மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்றுள்ள உண்மைச் சாதனைகளாலும், வருகின்ற தேர்தலில் பொய்ப் பிரச்சாரத் திரையைக் கிழித்தெறிந்து, புதுப்பொலிவுடன் வெற்றி வாகையை 1971 ஆம் ஆண்டு தேர்தல் முடிவினைப் போலவே 2011-லும் பெறும் என்பது உறுதி! இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகளால் கரைந்துவிட தி.மு.க. ஒன்றும் மெழுகு பொம்மை அல்ல; தங்கக்கட்டி போன்றது.

நெருப்பில் போடப்போட அது தகத்தகாய ஒளியோடு மெருகேறி நிற்கும்! காரணம், அதன் ஆற்றல்மிகு தலைவர் கலைஞர் அய்யா – அண்ணா வழியில் வந்த வைர நெஞ்சம் பாய்ந்தவர். அதன் தொண்டர்கள் கொள்கை உணர்வைக் கட்டுப்பாட்டோடு காக்கும் தோழர்கள்; அது இனி பேருரு (விஸ்வரூபம்) எடுக்கும் என்பது உறுதி.

–  கி.வீரமணி, ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *