பேராசிரியர் இராமநாதன் நினைவுக் கூடம் திறப்பு
செய்யாறு மாவட்ட திராவிடர் கழகப் பொருளாளரும், சீரிய பொதுநலத் தொண்டரும், தந்தை பெரியார் மீதும் எம்மீதும் நீங்காத பாசமிக்கவருமான டாக்டர் ஜெயராமன் 79ஆவது பிறந்த நாள் விழாவும், அவருடைய தாயார் மு. மங்கையர்க்கரசி அம்மையாரின் சிலை, திருவள்ளுவர் சிலை, 1330 குறட்பாக்களைச் சலவைக் கல்லில் பதித்த கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழாவும் 3.9.2004 அன்று மிகச் சிறப்பாக ஆரணியில் நடைபெற்றது.
மண்டபத்தின் நுழைவு வாயிலின் வலப்புறம் அமைக்கப்பட்ட டாக்டர் ஜெயராமன் அவர்களின் தாயார் மு. மங்கையர்க்கரசி அவர்களது முழு உருவச்சிலையை நாம் திறந்து வைத்தோம். பின்னர் திருமணக் கூடத்தின் உள்புறம் சிறப்பாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையினையும் அதற்கென அமைக்கப்பட்ட சுற்று சலவைக்கல் மண்டபத்தில் 1330 குறள்களையும் பதித்திருந்ததையும் திறந்து வைத்தோம்.
விழாவிற்கு மனிதநேய நண்பர்கள் குழுவின் தலைவர் இரா. செழியன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நாம் உரையாற்றுகையில்,
சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு இவை எல்லாமே திருக்குறளில் இருக்கிறது. வள்ளுவருடைய குறளில் ஜாதி இல்லை. எந்தக் குறளில் தேடினாலும் ஜாதி கண்டுபிடிக்க முடியாது. மதம் இல்லை. அதில் கடவுள் என்கிற வார்த்தையே கிடையாது.
இரயில்வே அமைச்சர் லாலுவை தமிழர் தலைவர் சந்தித்தார்
வள்ளுவருடைய திருக்குறள் என்று சொன்னால், இந்தச் சமுதாயத்திலே இருக்க வேண்டிய எல்லா மக்களுக்கும் பயன்பட வேண்டிய ஒரு பொது நூல்.
திருக்குறள் இந்தியாவின் “தேசிய நூல்” என்று ஆக்கப்பட வேண்டும். ஏனென்றால், திருக்குறள் எந்த மதத்திற்கும் சம்பந்தமில்லை. எந்த ஜாதிக்கும் சம்பந்தமில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்திற்கும், மக்களுக்கும் மட்டும் சம்பந்தமில்லை.
அடுத்தது நாம் எல்லா இடங்களிலும் இன்னொரு கருத்தை உருவாக்க வேண்டும். நீதிமன்றங்களில் கீதையை வைத்துச் சத்தியம் செய்வது, குரானை வைத்துச் சத்தியம் செய்வது, பைபிளை வைத்துச் சத்தியம் செய்வது என்று இன்று வரை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அப்படியானால் பகுத்தறிவுவாதிகள் எதை வைத்துச் சத்தியம் செய்வது? மதத்தை ஏற்காதவன் எதை வைத்துச் சொல்வது? மனிதநேயத்தைப் பின்பற்றுகின்றவர்கள் எதை வைத்து நீதிமன்றங்களில் சொல்வது? எனவே, எல்லோருக்கும் உடன்பாடான ஒரு நூல் தேவை. முஸ்லிமாக இருக்கலாம். கிறிஸ்துவராக இருன் கலாம். இந்துவாக இருக்கலாம் அல்லது மதமற்றவராக இருக்கலாம். யாராக இருந்தாலும், எல்லோருக்கும் உடன்பாடான நூல் ஒன்று உண்டு என்றால், அது திருக்குறள்தான் என்று சொல்லும் பொழுது, திருக்குறளை நீதிமன்றங்களிலே பிரமாணம் செய்யக்கூடிய நூல் என்று அறிவிக்கப்பட வேண்டும் என்று தீர்மானங்களை எங்கு பார்த்தாலும், நாம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ் அமைப்புகள் எல்லாம் ஒருங்கிணைந்து கட்சி வேறுபாடு இல்லாமல், தமிழ் அமைப்புகள் எல்லம் ஒருங்கிணைந்து கட்சி வேறுபாடு இல்லாமல், கருத்து மாறுபாடு இல்லாமல் நாம் செய்ய வேண்டும்” என்று கூறினோம்.
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் அடையாறு கோ. அரங்கநாதன் அவர்களின் துணைவியார். திராவிடர் கழக மகளிரணியைச் சேர்ந்த இரா. இராசேசுவரி அம்மையார் M.A. அவர்கள் 3.9.2004 காலை 11 மணியளவில் மறைவுற்றார். அவரது உடலுக்கு 4.9.2004 அன்று காலை 8 மணிக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினோம். அவரின் இறுதி நிகழ்ச்சிகள் எவ்விதச் சடங்குகளுமின்றி நடைபெற்றது.
அன்று பிற்பகல் அவரது வீட்டில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் இரங்கல் உரை ஆற்றினர்.
தந்தை பெரியார் மீதும் நம் மீதும் நீங்காத பற்றுக் கொண்டவரும் கழகத்திற்கு மிகுந்த உறுதுணையாகத் திகழ்ந்தவரும், ஓய்வு பெற்ற துணை ஆட்சியாளருமான திருச்சி சங்க. நல்லுசாமி _ நல். அழகுமணி ஆகியோரின் மகள் அ.ந. சுனிதாவுக்கும்_ பெரம்பலூர் வட்டம் சிறுவாச்சூர் கிராமம் சோ. ஜோதி_ சோலையம்மாள் ஆகியோரின் மகன் ஜோ. செந்தில்குமாருக்கும் திருச்சி அரிஸ்டோ டைமண்ட் திருமண அரங்கில், 5.9.2004 அன்று நடைபெற்ற இணையேற்பு நிகழ்விற்குத் தலைமையேற்று நடத்தி வைத்து விளக்கவுரையாற்றினோம்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகிலுள்ள மேலவாளாடியைச் சேர்ந்த, தந்தை பெரியாரின் போர்வாள் மறைந்த பெ. காத்தபெருமாள் மகனும், பெரியார் பெருந்தொண்டருமான மே.கா. தமிழரசன் இயற்கை எய்தினார். அவரின் படத்திறப்பு செப்டம்பர் 5ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் மேலவாளாடி கிராமத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. லால்குடி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் உடுக்கடி அட்டலிங்கம் தலைமையில் மறைந்த மே.கா.தமிழரசன் படத்தினை திறந்துவைத்து, அன்னாரின் சிறப்பான கழகச் செயல்பாடுகளையும், கட்டுப்பாட்டுடன் உழைத்த தொண்டினையும் எடுத்துக்கூறி உரையாற்றினோம்.
சுயமரியாதைச் சுடரொளி சிங்கப்பூர் சு.தெ.மூர்த்தி
குடந்தை, கே.ஆர்ஜி. பால் _ விஜயா இவர்களின் மகன், கும்பகோணம் திராவிடர் கழக நகர இளைஞரணி துணைச் செயலாளர் பா. மனோகரனுக்கும், தாராசுரம் வாணி நகர் ரெ.இராமசாமி _ சரோஜா இவர்களின் மகள் இரா. அபிராமிக்கும் வாழ்க்கை இணை ஏற்பு விழா (9.9.2004) செப்டம்பர் 9ஆம் நாள் வியாழக்கிழமை அன்று காலை குடந்தை நகரத்தார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடந்தது. இணையர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து மணவிழாவினை நடத்திவைத்து கொள்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினோம்.
செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு, கழக துணைப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு, கழக முன்னணித் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
திராவிடர் கழக கோவில்பட்டி மாவட்ட செயலாளர் ஆசிரியர் சே. சீவகன் _ சீ. அமராவதி ஆகியோரின் மகன் மகேந்திரனுக்கும், கோவில்பட்டி நகரைச் சேர்ந்த எம்எஸ். மாணிக்கம் _ எம். தெய்வானை கலாவதி ஆகியோரின் மகள் சகாயராணிக்கும் 12.9.2004 அன்று காலை 10 மணியளவில் கோவில்பட்டி நந்தினி மகால் திருமண மண்டபத்தில் இணையேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இணையர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து விழாவை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினோம். சே. சீவகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சென்னைக்கு 16.9.2004 அன்று வருகை புரிந்து சென்ட்ரல் ரயில்வே நிலையத்திலிருந்து திருப்பதி எக்ஸ்பிரஸ் இரயில் மூலம் திருப்பதி செல்லவிருந்த மாண்புமிகு மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் லாலு பிரசாத் அவர்களை, பிற்பகல் 2 மணி அளவில், அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த தனிச்சிறப்புப் பெட்டியில் சந்தித்தோம். லாலு அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி இயக்க சார்பில் வெளியிடப்பட்ட ஆங்கில நூல்களையும் வழங்கினோம்.
சிறிது நேரம் அவருடன் உரையாடிவிட்டு விடை பெற்றோம்.
எம்முடன் கழகத் துணைப்பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணியின் மாநிலத் தலைவர் பெரியார் பேருரையாளர் அ. இறையன், பெரியார் பயிலக இயக்குநர் பேராசிரியர் மு.நீ. சிவராசன், மேலாளர் ப. சீதாராமன் ஆகியோர் வந்திருந்தனர்.
சிங்கப்பூரில் பெரியார் கொள்கை பரப்பிய பேரொளி சு.தெ. மூர்த்தி அவர்கள் 16.9.2004 அன்று மாலை 5 மணிக்கு (சிங்கப்பூர் நேரம்) சிங்கை பொது மருத்துவமனையில் இயற்கை எய்தினார். என்ற நெஞ்சைப் பதறவைக்கும் செய்தியால் மிகவும் தாக்குண்டோம்! அவர் பழைய தலைமுறையின் வரிசையில் வாழ்ந்த மூத்த தளபதிகளில் ஒருவர்.
அவரது திருமணத்தை நான்தான் உள்ளிக்கோட்டையில் நடத்தி வைத்தேன். அந்நாள் முதல் அவரிடம் கொண்ட பாசமும் என்னால் _ என் குடும்பத்தாரால்_ (கழகக் குடும்பத்தையும் சேர்த்தே தான் சொல்லுகிறேன்) வார்த்தைகளால் வர்ணிக்கப்பட முடியாதது!
நோயால் உடல் தளர்வுற்ற போதும், உள்ளத்தில் உரமூட்டத்தான் அவரைச் சென்னை மாநாட்டிற்குச் சில ஆண்டுகளுக்குமுன் அழைத்துப் பெருமைப்படுத்தினோம் என்பதைவிட பலமூட்டினோம் என்பதே உண்மை.
சிங்கப்பூரில் அவரது 75ஆம் ஆண்டு விழாவில் கலந்து பாராட்டினோம்; அவர் எழுதிய நூலை வெளியிட்டு மகிழ்ந்தோம்; ஊக்கப்படுத்தினோம்.
“கி. வீரமணி சமூகநீதி விருது” என்ற விருதினைப் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் டாக்டர் சோம. இளங்கோவன், மூர்த்தி அவர்களின் உடல் நிலை கருதி, சிங்கப்பூருக்கே சென்று வழங்கினார்_ இரண்டாண்டுகளுக்கு முன். “பெரியார் பெருந்தொண்டர் பெரியார் விருதினை”யும் திராவிடர் கழகம் வழங்கியது.
கொண்ட, கொள்கை_ இயக்கம் _ பெரியார் _ கட்டுப்பாடு _ இவைதாம் அவரது மூச்சும் குருதி ஓட்டமும் ஆகும்.
தோழர் மானமிகு சு.தெ. மூர்த்தி அவர்கள் இல்லம்தான் தமிழ்நாட்டிலிருந்தும் மலேசியா மற்ற வெளிநாடுகளிலிருந்தும் வரும் கழகக் குடும்பத்தவர்களுக்கு விருந்தினர் மாளிகைபோல் இருக்கும்.
அவரை இழந்து வாடும் அவரது அன்புத் துணைவியார் எனதருமைத் தங்கை திருமதி சுசீலா அம்மையார் அவர்களுக்கும், அவரது அன்புச் செல்வங்கள் மதி, அவரது துணைவியார், மகள்கள் குமுதா, அமுதா மற்றும் குடும்பத்தவர் அனைவருக்கும் திராவிடர் கழகம் தனது ஆறுதலையும் இரங்கலையும் கனத்த இதயத்தோடு தெரிவித்தோம். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்கு நமது வீரவணக்கத்தைத் தெரிவித்தோம்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கோட்டூர் பாலசுப்பிரமணியம் (வயது 82) அவர்கள் 16.9.2004 அன்று கோட்டூரில் அவரது இல்லத்தில் மறைந்தார் என்ற துயரச் செய்தியும், சிங்கப்பூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தோழர் சு.தெ.மூர்த்தி அவர்களது மறைவுச் செய்தியை அடுத்து துயரத்தில் தள்ளிய மற்றொரு துன்பச் செய்தியாக நமக்குக் கிடைத்து மிகவும் வேதனை அடைந்தோம்!
முதுபெரும்
பெரியார் பெருந்தொண்டர் மானமிகு கோட்டூர் தோழர் பாலசுப்பிரமணியம்
அந்த முதுபெரும் பெரியார் தொண்டர்கள் தஞ்சை மாவட்டம் தந்த அரிய கொள்கை வீரர்கள்; அஞ்சாத நெஞ்சினர்.
பெருநிலக் கிழாரான கோட்டூர் பாலசுப்பிரமணியம்
அவர்கள் போட்ட கருப்புச் சட்டையை மாற்றியதில்லை; கொண்ட கொள்கையைத் துறந்ததில்லை; ஏற்ற இயக்கத்தை என்றும் தூற்றிடாதவர் என்பது மட்டுமல்ல; மானமிகு மூர்த்தியைப் போலவே, தூற்றித் திரிவோரைத் துச்சமாகக் கருதிப் பேசிடும் துணிவுமிக்க சிங்கம் அவர்!
ஜாதி மறுப்பைத் தனது வாழ்வில், செயலில் காட்டியவர்; சுயமரியாதை வாழ்வு சுக வாழ்வாக அமைவது எப்படி என்பதை தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தவறாது கூறி வாழ்ந்திட்ட தகைமையாளர்!
அவர் எனக்கு (சம்பந்தி) உறவுக்காரர்; எனது அந்த உறவுகூட கொள்கை சம்பந்த உறவால் ஏற்பட்ட ஒன்று; ஆனால், கொள்கை உறவுதான் எங்கள் இருவரையும் பிணைத்த பாசப்பிணைப்பு. குடும்ப உறவு எல்லாம் பிறகு ஏற்பட்டதுதானே!
தான்இறந்த பிறகு தனது உடலை கொடையாக மருத்துவக் கல்லூரிக்குத் தரவேண்டும் என்று எழுதி வைத்த நெஞ்சுரம்மிக்க லட்சிய வீரர்!
அவருடைய இணையர், மகன்கள், மகள்கள், மருமக்கள் மற்றும் உறவுக் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் கூறி, நம் இரங்கலை இயக்கத்தின் சார்பில் தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம்.
சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலகம்_ ஆய்வகத்தின் மேல் மாடிக்கு பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களின் பெயர் சூட்டப்பட்டு, அதன் திறப்பு விழா, தந்தை பெரியார் 126ஆம் ஆண்டு பிறந்த நாளான 17.9.2004 அன்று பேராசிரியர் ந. இராமநாதன் அவர்களின் மாணவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான புலவர் அண்ணாமலை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
புலவர் இராமநாதன் அவர்களின் மாணவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன் ரிப்பனைக் கத்தரித்து நினைவுக் கூடத்தைத் திறந்து வைத்தார்.
கூடத்திற்குள் புலவர் ந. இராமநாதன் அவர்களின் வண்ணப்படம் பெரிய அளவில் மாட்டப்பட்டிருந்தது.
புலவர் அண்ணாமலை அவர்களும், கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களும், மறைந்த பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களின் சிறப்புகளைப் பலபட எடுத்துரைத்தனர்.
எமது உரையில், பெரியார் பேருரையாளர் இராமநாதன் அவர்கள் பெரியார் திடலில் ஆற்றிய தொண்டினைப்பற்றி எடுத்துரைத்து, அஞ்சல் வழிக்கல்லூரியில் பேராசிரியர் இராமநாதன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுப்பு நூலாக வெளிவரும் என்றும் அறிவித்தோம்.
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற தலைவர், திறப்பாளர், புலவர் ந. இராமநாதன் அவர்களின் தம்பி புலவர் பழநிநாதன், அவருடைய மகன் பேராசிரியர் டாக்டர் கண்ணன் ஆகியோருக்கு சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தோம்.
நிகழ்ச்சியில் புலவர் இராமநாதன் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
மாலை 6 மணிக்கு உரையரங்கம் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர், விழாக்குழு செயலாளர் திருமகள் இறையன் வரவேற்றுப் பேசினார்.
17.9.2004 அன்று தந்தை பெரியார் 126ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா – பெரியார் திடல், சென்னை.
விழா குழுத் தலைவரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான க. பார்வதி தலைமை வகித்தார். இக்கருத்தரங்கிற்கு விஜயலட்சுமி, நாகவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்சென்னை மாவட்ட மகளிரணி தலைவர் நீலாவதி நடராசன் அடுத்து உரையாற்றினார். தொடர்ந்து டெய்சி மணியம்மை, சரசுவதி, அண்ணாமலை, முனைவர் வளர்மதி, பேராசிரியர் டாக்டர் அரங்கமல்லிகா, கழக தகவல் தொடர்பு அமைப்பாளர் வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர்.
பேராசிரியர் இராமநாதன் நினைவுக்கூடம் திறப்பு
-அடுத்து நாம் உரையாற்றுகையில்,தந்தை பெரியார் அவர்களுடைய பணி ஜாதி ஒழிப்புப்பணி_ பெண்ணடிமை ஒழிப்புப் பணி. தந்தை பெரியார் அவர்கள் செய்த பணி ஈடு இணையற்ற பணி. தந்தை பெரியார் அவர்கள் தொடாத துறைகளே கிடையாது.
பாரதியார் சொல்லுகிறார்_ அரசியலில் பெண்கள் வர நினைக்கவே கூடாது என்று. பாரதியார் என்ன எழுதியிருக்கின்றார் என்றால் ராஜ்ய விசயத்தில் பெண்கள் வரக்கூடாது” என்று எழுதியிருக்கின்றார். பாரதி எழுதிய கட்டுரைகள் தொகுப்பில் இந்தச் செய்தி உள்ளது.
இன்றைக்கு பெண்கள் 50 சதவிகிதம் கேட்டு 30 சதவிகிதமாவது கிடைக்கக் கூடிய அளவிற்கு நிலைமை உள்ளது.
ஜாதி என்பது பிறப்பினால் வரக்கூடிய பேதம்; பெண்ணடிமை என்பது பிறப்பினால் வரக்கூடிய பேதம்.
ஆகவேதான் தந்தை பெரியார் அவர்கள் பிறவியினால் பேதம் கூடாது என்று சொன்னபொழுது, பெண்ணடிமையும் இருக்கக்கூடாது என்று சொன்னார் ஜாதியும் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.”
குடந்தை நகர இளைஞரணி துணைச் செயலாளர்
பா. மனோகரன் – இரா.அபிராமி ஆகியோர் வாழ்க்கை ஒப்பந்த விழா
இவ்விழாவின் முத்தாய்ப்பாக கழக மகளிர் அனைவரும் ஒன்று சேர்ந்து வாளைக் கையிலேந்திய ஒரு வீரரின் சிலையை எம்மிடம் வழங்கினர்.
(நினைவுகள் நீளும்)