“சங்கர மடத்தில் நடக்கும் ஊழல்கள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் பற்றியும் சங்கரராமன் தொடர்ந்து கடிதங் களை எழுதி ஜெயேந் திரருக்கு அனுப்பியது டன் அதன் நகலை இந்து அறநிலையத்துறைக்கும் அனுப்பி வந்தார்.
இதையடுத்து, சங்கரராமனிடம் பேசுவதற்காக சென்னை அருகில் உள்ள நசரத்பேட்டை ஆயுர்வேத கல்லூரியில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் சாம்பசிவம், ரிக்வேத வைத்தியநாதன், ரிசர்வ் பேங்க் வைத்தியநாதன், சிம்சன் வைத்தியநாதன், கோபாலபுரம் மணி அய்யர் ஆகியோருடன் நானும் சென்றேன்.
அப்போது, மடத்தில் நடக்கும் பிரச்னைகளுக்கு 3 மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று ஜெயேந்திரர் தெரிவித்தார்.
ஆனால், 3 மாதங்களுக்குள் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனால் கோபமடைந்த சங்கரராமன் சங்கர மடத்தின் அண்டர்கிரவுண்ட் நடவடிக்கைகளை சோமசேகர கணபாடிகள் என்ற பெயரில் கடிதமாக எழுதி மடத்தின் விசுவாசிகளுக்கு அனுப்பினார்.
இதனால் கலவரமடைந்த ஜெயேந்திரர் அந்த கடிதத்தை நான்தான் எழுதியதாக நினைத்து என் மீது கோபமடைந்தார். அதனால், என்னை வெட்டிக்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து, 2002 செப்டம்பர் 20ம் தேதி இரவு எங்கள் வீட்டுக்கு 2 ஆட்களை அனுப்பி எங்களை வெட்டச் செய்தார்.
அதற்கு முந்தைய நாள் (செப்டம்பர் 19) என்னுடன் தொலைபேசியில் பேசிய ஜெயேந்திரர், நீதான் சோமசேகர கணபாடிகள் என்ற பெயரில் கடிதம் எழுதுகிறாய். அதை உடனே நிறுத்து. இல்லையென்றால் தொலைத்து விடுவேன் என்று மிரட்டினார்.
காயமடைந்த நான் மருத்துவமனையில் இருந்தபோது, மடத்திலிருந்து பிரசாதத்தை ஸ்ரீகாரியம் நீலகண்டன் மூலம் எனக்கு அனுப்பியதுடன், ஆறுதல் சொல்லச் சொன்னார்.
ஜெயேந்திரர் தவிர என்னை வேறு ஒருவரும் எதிரியாக நினைக்கவில்லை என்று நீலகண்டனிடம் அப்போது கூறினேன். ஜெயேந்திரர்தான் என்னைக் கொலை செய்ய திட்டமிட்டார் என்று சங்கர மடம் தொடர்புடைய எல்லோருக்கும் தெரியும்.
அதனால் எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ ஏதாவது பிரச்னை வந்தால் அதற்கு ஜெயேந்திரர்தான் பொறுப்பு என்று பட்டினப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன்– _ இது ஏதோ சாலையில் போகும் ஒரு சாதாரண மனிதனின் குற்றச்சாட்டல்ல. ஜெகத்குரு, பரமஹம்சர், பெரியவா, அருளாசி வழங்கும் ஞானி என்றெல்லா அள்ளிவிடும் காஞ்சி சங்கர மட சங்கரச்சாரி ஜெயேந்திரர் மீதுதான் ஒரு ஆடிட்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை, மந்தை வெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜூன் 16 அன்று அளித்த வாக்குமூலம் இது. சூத்திர மடங்களின் சாமியார்கள் என்றால் மாய்ந்து மாய்ந்து எழுதும் பார்ப்பனப் பத்திரிகைகள் இந்தப் பார்ப்பன மடச் சாமியார் மீதான குற்றச்சாட்டைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
இந்த வாக்குமூலம் அளித்த சில நாட்களில் சென்னைக்கு சிருங்கேரி சாரதா பீடம் சங்கராச்சாரி வந்திருந்தார். கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதற்காக அவருக்கு வரவேற்பளித்து பதாகைகளை வைத்திருந்தனர். அதில் ஒரு பதாகையில் “பரமஹம்சர்களுள் உத்தமரே…வருக!என்று விளித்திருந்தார்கள். ஒரு வேளை இவர்கள் இப்படி எழுதியிருந்தது காஞ்சி சங்கராச்சாரியை நினைவில் வைத்துத்தானோ?