-விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
சென்ற இதழ் தொடர்ச்சி…
இந்த உரை மூலம் நாம் சொல்வது என்னவென்றால், இந்த விதை… விதை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். இந்த விதை இந்த நிமிடத்தில், இந்த நொடியில் விதைக்கப்பட்டாலும், அது இன்னொரு வீரமுத்துவேலாக
(அவையில் பல இடங்களைக் காட்டி) – இங்கே, இங்கே, இங்கேகூட விருட்சமாக வரும் என்பதற்காகச் சொல்கிறேன்.
அதற்காக எல்லோரும் விண்ணுக்குப் போகவேண்டும்; எல்லோரும் நிலவுக்குப் போகவேண்டும் என்கிற அவசியம் இல்லை.
எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், எந்த வாய்ப்புக் கிடைத்தாலும், நாம் அந்த உயரத்தை அடைய முடியும் என்பதற்கான ஒரு சிறிய உதாரணத்தைத்தான் இங்கே நிகழ்ச்சியாக நான் கொடுக்கிறேன்.
ஏனென்றால், இந்தப் பந்தயக் குதிரைகள் என்பது எல்லா இடத்திற்கும் வேண்டும் என்பதற்காகத்தான்.
இப்பொழுது அடுத்ததாக, பெரியார் சொன்னது, ‘‘யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், உன்னுடைய புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!’’ என்கிறார்.
ஆக, நான் சொல்வதைக் கூட நீ நம்பாமல் போகலாம். ஆனால், அதற்கான கேள்வியைக் கேட்டு, அதற்கானவிடையை நீங்கள் எடுத்துக் கொண்டு போகின்ற வகையில்,
இதை எப்படி நான் சொல்கிறேன் என்றால், இப்பொழுது நிலவை முன்னிறுத்திக் காட்டுகிறேன்.
‘பெரியாரும் -அறிவியலும்’ என்று சொல்லுகின்றபொழுது, அது பலவகைகளில் வருகிறது.
இந்த வார்த்தை எப்படி நிலவுப் பயணங்-களுக்கு ஒத்துவருகிறது என்பதை நான் சொல்ல முயற்சி செய்கிறேன்.
‘‘யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், உன்னுடைய புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே!’’ என்கிறார்.
அப்படியென்றால், உன்னுடைய புத்தியைப் பயன்படுத்து என்கிறார். ‘‘நீ யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், அது உன்னுடைய புத்திக்கு ஏற்புடையதாய் இருக்கவேண்டும்‘’ என்றார்.
அப்படி நாம் புத்தியைப் பயன்படுத்தி நிலவைப் பார்க்கின்றபொழுது ஒரு கேள்வி எழுகிறது.
அது என்ன கேள்வி என்றால், அறிவியலில் பல கேள்விகள் வருகின்றன. அந்தப் பல கேள்விகளுக்கு பதில், பல புத்தகங்களில் படித்திருக்கலாம்; பெரியவர்களிடம் கேட்டிருக்கலாம் என்று அறிவியல் ரீதியாகவும், அறிவியல் துறையிலும் சொல்வார்கள்.
ஆனால், பெரியார் என்ன சொல்கிறார் என்பதைப் பாருங்கள்; அங்கேதான் நான் ஒரு பெரிய மாற்றத்தைப் பார்க்கிறேன்.
‘‘உன் சாத்திரத்தைவிட, உன் முன்னோரைவிட, உன் வெங்காயம், வௌக்கமாத்தைவிட, உன் புத்தியை நம்பு’’ என்கிறார் பெரியார்!
கொஞ்சம் கடினமான வார்த்தைகளில் கடிதலின் உச்சபட்சமாகக் கூறுகிறார்.
ஆனால், இதை ஓர் அறிவியல் ரீதியாகவும்-கூட, கல்லூரியில் என்ன படிக்க வைக்கிறார்கள் என்பதைக்கூட கேள்விக் குறியாகச் சொல்கிறார்.
சாத்திரம் என்றால் என்ன?
உன்னுடைய அறிவியல் புத்தகமாக இருக்கலாம்; அல்லது ஒரு பெரிய ஆராய்ச்சியாளர் சொன்னதாகக்கூட இருக்கலாம். அதையும்கூட நீ அப்படியே நம்பவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்.
அதை வைத்து, நிலவுப் பயணம்_ – நான் இங்கே நிற்கிறேன் என்றால், நான் பல செயற்கைக்கோள்களை அனுப்புகின்ற பணியைச் செய்திருந்தாலும், ‘‘சந்திரயான்’’ என்கிற நிலவுப் பயணம்தான் எனக்கு
ஒரு முகவரியைக் கொடுத்தது; எனக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தது.
அதற்குப் பின்புலத்தில் இந்த வார்த்தை – இந்த வார்த்தை கொஞ்சம் கடினமாகவே குத்திக் காண்பித்தது அல்லவா! அதே வார்த்தைதான் அதற்கான விதையை விதைத்தது என்பதற்காகச் சொல்கிறேன்.
ஏன் அப்படியென்றால், பழசு ரொம்பப் பழசாக இருக்கவேண்டிய அவசியம்கூட இல்லை. நான் சிறுவனாக இருக்கும்பொழுது, ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கி, கல், மண்ணை எடுத்துக்கொண்டு வந்தார்.
அதற்குப் பிறகும் பல பயணங்கள் – 1950, 1960, 1970 ஆம் ஆண்டுகளில் நிறைய பயணங்கள் நிலவிற்கு. கிட்டத்தட்ட 99 முறை பயணங்கள். இவ்வளவு முயற்சி செய்தும்கூட நிலவில் நீர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
சாத்திரத்தில் எழுதப்பட்டுவிட்டது; அறிவியல் புத்தகங்களில் நிலவில் நீர் இல்லை என்று எழுதப்பட்டுவிட்டது.
இது சரியாக இருக்குமா? என்ற அந்தக் கேள்வி எழும்புகிறது, நிலவைப் பார்க்கின்றபொழுது! நான் பிறந்த வளர்ந்த ஊரில், கோதவாடி கிராமத்தில் என்னுடைய 10 வயது வரைக்கும் தெரு விளக்குகூட கிடையாது. அதனால், நிலவை நன்றாகப் பார்க்க முடியும்.
எங்கள் ஊர்க் குளத்தில் உள்ள நீர்ப்பரப்பின் மீது நிலவைப் பார்க்கின்றபொழுது, நிலவு அவ்வளவு பெரிய தூரத்தில் இல்லை, என்பதாகக் கூடத் தோன்றும்.
விண்வெளியில் பார்த்தால் தெரியும், பலப் பல கோடி மைல்கள் விரிந்திருக்கின்ற இந்த அண்டத்தில், வெறும் மூன்றரை லட்சம் கிலோ மீட்டரில் நிலவு இருக்கிறது. அது என்னைப் பொறுத்தவரையில் குறைந்த தூரமாகத்தான் தெரிகிறது.
இங்கே பூமியில் நீர் இருக்கும்பொழுது, நிலவில் நீர் இல்லாமல் இருக்க முடியுமா? என்கிற கேள்வி என்னுள் எழுந்தது.
ஆனால், சாத்திரப்படி, அமெரிக்காவும், ரஷ்யாவும் சொல்லிவிட்டன. இது இரண்டையும் பொருத்திப் பார்க்கின்றபொழுது, எங்கேயோ ஒரு முரண்பாடு இருக்கிறது என்று கேட்கவேண்டிய அவசியம் இருக்கிறது இப்பொழுது. இதைத்தான் வள்ளுவர் சொன்னார்,
‘‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.’’
என்னைப் பொறுத்த அளவிற்கு, நான் படித்த அளவிற்கு, பெரியார் அவர்கள், திருக்குறளைத் தவிர, எந்தவொரு தமிழ்ப் புத்தகத்தையோ, சாத்திரத்தையோ இலக்கியமாக ஒத்துக்கொள்ளவில்லை.
முழுக்க முழுக்க திருக்குறளைத்தான் சொன்னார்; திருவள்ளுவரும் அதைத்தான் சொல்கிறார்.
‘‘எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.’’
ஆக, இதையெல்லாம் கூட்டிக் கழித்துப்
பார்க்கின்றபொழுது, அதை எப்படி நாம் பார்ப்பது
என்கிறபொழுது, அப்பொழுதுதான் தெரிகிறது.
1950, 1960, 1970ஆம் ஆண்டுகளில் நிலவிற்குப் போனார்கள் _ 99 முறை போனார்கள். 1980, 1990ஆம் ஆண்டுகளிலும் நிலவிற்குப் போகவில்லை. ஏனென்றால், நிலவில் நீர் இல்லை என்பதை முடிவாக அறிவித்துவிட்டார்கள்.
ஏன் அப்படி நடந்து என்று பார்க்கின்றபொழுது, அவர்கள் நிலவில் இறங்கி நீரைத் தேடினார்கள். எந்தெந்த இடங்களில் இறங்கினார்கள் என்றால், பல இடங்களில் இறங்கியிருக்கிறார்கள்; அங்கே நீர் இருக்கிறதா? என்று பார்த்திருக்கிறார்கள். அங்கே இருந்து கல், மண்ணை எடுத்துக்கொண்டு வந்து
இங்கேயும் ஆராய்ச்சி செய்து பார்த்திருக்-கிறார்கள். அப்படி நம்முடைய ஆராய்ச்சி நிலையங்களில்கூட, நிலவில் இருந்து கொண்டு வந்த கல்லிலோ, மண்ணிலோ நீர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
ஆகவே, அதற்குப் பிறகு நிலவிற்குப் போகவேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்துவிட்டார்கள்.
இது சரியா? என்கிற கேள்வி எழுகிறது.
ஏனென்றால், நிலவில் இறங்கி நீரைத் தேடுகிறீர்களே, இது சரியா? என்பதுதான் கேள்வி.
அதனுடைய வெளிப்பாட்டினை அடுத்ததாகச் சொல்கிறேன்.
இப்பொழுது, அவர்கள் சொல்லிவிட்டார்கள். அவர்கள் தவறாகச் சொல்லிவிட்டார்களோ என்கிற கேள்வி எழுகிறது.
இருந்தாலும், நாம் வெறும் வாயில் அதனைச் சொல்ல முடியாது அல்லவா!
ஆகவே, நாமே நிலவிற்குப் போனால் என்ன? என்கிற கேள்வி எழுந்தது.
நிலவிற்குப் போகவேண்டிய வசதி நம்மிடம் என்ன இருக்கிறது?
அவர்கள் நிலவிற்குப் போகும்பொழுது, அவர்களிடமிருந்த பெரிய ராக்கெட் _ நம்மிடம் இருந்த, இந்தியாவில் இருந்த பி.எஸ்.எல்.வி. இரண்டையும் ஒப்பிட்டால், நம்மிடம் இருப்பது மிகமிகச் சிறியதாகும். அதாவது பி.எஸ்.எல்.வி. அளவிலும் சரி, எடையிலும் சரி மிகச் சிறியது. 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதையில், பூமியை விட்டு எந்த எடை அனுப்ப முடிந்தது என்றால், அவர்களுடைய சட்டர்ன் என்பதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கிலோ கிராம் அனுப்ப முடியும். ஆனால், நாம் வெறும் 4 டன்னைக்கூட அனுப்ப முடியாது. 3,800 கிலோதான் அனுப்ப முடியும்.
இதை வைத்துக்கொண்டு, நிலவுக்குச் சென்று இறங்கிப் பார்த்து அவர்கள் சொல்வது தவறு என்று சொல்லிவிட முடியாது.
அவர்கள் சொல்வது சரியா? தவறா? என்று கூட பார்க்க முடியாது.
அப்படியென்றால் என்ன செய்வது?
அவர்கள் பெரிய ராக்கெட்டை ஏவலாம். ஆனால், நம்மால் அவ்வளவு பெரிய ராக்கெட்டை அனுப்ப முடியுமா?
மீண்டும் ஒரு கேள்வி எழுகிறது.
அந்தக் கேள்வியைக் கேட்கும்பொழுது, அவர்கள், இங்கிருந்து அவ்வளவு பெரிய ஏவுகணையை வைத்து, ஒரே முயற்சியில் நிலவிற்குப் போனார்கள் அய்ந்து நாளில் – அமெரிக்காவும்,
ரஷ்யாவும்.
(தொடரும்)