இந்தியர்கள் மத்தியில் சகிப்புத் தன்மை குறைந்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவிக்கும் நியாயமான விவாதங்கள் நடப்பதில்லை. பெரும்பாலான பொதுவிவாதங் களில் பரபரப்பு செய்திக்காக எதைஎதையோ பேசுகிறார்கள். குறிப்பாக எதிர்வாதம் செய்பவர்கள் மற்றும் வழக்கமான நடைமுறைக்கு எதிராகப் பேசுபவர்களை மக்கள் சகித்துக் கொள்வதில்லை. மக்களின் குறுகிய மனப்பான்மை காரணமாக இளைஞர்களிடையே புதுமையான யோசனை படைப்புத்திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பேச்சு சுதந்திரத்தைப் புரிந்துகொண்டு அறிவியல் உணர்வுகளை இளைஞர்களிடையே தூண்டிவிட வேண்டும். இந்தியா இன்றைக்கு சந்திக்கும் பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாக தீர்வுகாண்பது அவசியம். குறைவாக உள்ள இயற்கை வளங்களை நாட்டின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை அறிவியல் உலகம்தான் கண்டுபிடித்துத் தரவேண்டும். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
நாங்கள் ஏன் ரேஷன் அரிசி மட்டுமே சாப்பிட வேண்டும், நாங்கள் ஏன் அரசாங்கம் அளிக்கும் சின்னச் சலுகைகளை மட்டுமே எதிர்பார்த்து வாழ வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நாங்களும் வழக்கறிஞர் களாக, மருத்துவர்களாக, தொழிலதிபர்களாக உருவாக வேண்டும். பெண்ணுரிமை பேசிய பெரியாரிடம் ஒருமுறை கேட்டார்களாம். பெண்களுக்கு உரிமை வேண்டும் என்கிறீர்களே, என்ன மாதிரியான உரிமை வேண்டும்? பெரியார் சொன்னாராம். ஆண்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அத்தனையும் பெண்களுக்கு வேண்டும் என்று! அதேபோலத்தான், ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அத்தனை உரிமைகளும் அரவாணிகளுக்கும் வேண்டும். ஒரே வரியில் சொல்வதானால், சமூக மதிப்பீடுகள் மாறவேண்டும்! – திருநங்கை ரேவதி
இங்கு சுதந்திரம் இல்லை. ஜனநாயகம் இல்லை. யாருக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை. உங்களைச் சர்வநேரமும் யாரோ கண்காணித்துக் கொண்டும் வேவு பார்த்துக் கொண்டும் உங்கள் உரையாடல் களை ஒட்டுக் கேட்டுக்கொண்டும் இருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம். ஊடகங்கள் முழுமையாக முடக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன. அரசு ஊடகங்கள் சொல்வதுதான் செய்தி. அரசுக்கு எதிராக யோசிப்பதுகூடக் குற்றம் என்று நினைக்கிறது அரசு. தான் ஆட்சியில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் ராஜபக்ஷே. எங்கள் நாட்டில் இப்போது சர்வ சுதந்திரத்துடனும் சகல வசதிகளுடனும் இருப்பது ஒரே ஒரு குடும்பம்தான். அது… ராஜபக்ஷேவின் குடும்பம். நாட்டைச் சூறையாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள். எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல்… மக்கள் வெறுத்துப் போய் இருக்கின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர்.
ராஜபக்ஷேவின் அடக்குமுறையும் ஊழலும் மிக்க இந்தக் காட்டாட்சி தொடர்ந்தால், விடுதலைப் புலிகள் மட்டுமா? இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். வடக்கில் இல்லை; தெற்கிலேயே அரசுக்கு எதிரான இளைஞர்களின் புரட்சி வெடித்தாலும்… ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. – இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்யும் போக்கு தேர்தலை வெளிப்படை யாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது; அதை தண்டனைக் குரிய குற்றமாக்கும் வகையில் தேர்தல் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். – ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி