நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும்,மத பண்டிகைகள் வந்து மக்களின் பணத்தை உரியும். அதேபோல மே மாதம் வந்தால் போதும் ஒவ்வொரு ஊரிலும் கோயில் திருவிழாக்களும் தேர்களும் மக்களை உறிஞ்ச ஆரம்பித்துவிடும். இதில் என்ன வேடிக்கை என்றால் போக்கு வரத்து சிக்னலில் 30 நொடிகள் கூட நிற்க பொறுமை இல்லாத வாகன ஓட்டிகள்கூட தேர் என்றால் போதும் இரண்டு மூன்று மணி நேரம் கூட போக்குவரத்து நெரிசலில் நிற்பார்கள். இந்த மே மாதமும் தேர் திருவிழாக்கள் வந்தன. ஆனால் அவை பக்தர்களின் உயிரைக் குடிக்கும் ஒரு ஆயுதமாகவே வந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவாக இந்த ஆண்டு 16 பேர் தேர்களினால் ஏற்பட்ட விபத்துகளினால் உயிர் இழந்துள்ளனர். மே ஒன்றாம் தேதி- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள கோட்டை அறம்வளர் நாயகி உடனுறை கயிலாயநாதர் சிவன்கோவில் திருவிழாவில் தேர் அச்சு முறிந்து விழுந்ததில் 5 பக்தர்கள் இடிபாடுகளில் சிக்கி பலியானார்கள். இரண்டாம் தேதி- நாகூர் சந்தன கூடு ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானார்கள். அதே நாள் (மே 2)- வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவின்போது தேர் மீது மின்சார கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி 5 பேர் இறந்தனர். அய்ந்தாம் தேதி- கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில் விழாவில் தேர்அச்சு முறிந்ததில் தேர் சக்கரத்துக்கு முட்டு கொடுத்தவர் பலியானார்.
ஆறாம் தேதி- தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜம்புலிபுத்தூரில் கதலி நரசிங்கபெருமாள் கோவில் திருவிழாவில் தேர் அச்சுமுறிந்து கவிழ்ந்தது. இதில் உயிர்ச்சேதம் இல்லை. ஒன்பதாம் தேதி- விருதுநகர் அருகே வெங்கடாஜலபதி கோவில் விழா ஊர்வலத்தில் பல்லக்கு மின்கம்பியில் உரசியதில் 3 பேர் பலியானார்கள். ஏதாவது நன்மை நடந்தால் அது கடவுள் சக்தி என்றும், அதே சமயம் ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அது விதி விட்ட வழி என்றும் இருக்கும் பக்தர்களுக்கு, வெறும் 10 கிலோ சிலையை ஏன் டன் கணக்கில் இருக்கும் தேரில் வைத்து தேவையில்லாமல் இழுக்க வேண்டும் என்று சிந்திக்கத் தோன்றாது. மத வேறுபாடு இல்லாமல் நடந்த இந்த விபத்துகளுக்குக் காரணம் மனிதர்களின் அறியாமையும் அஜாக்கிரதையும்தான் என்பது நம்மைப் போன்ற பகுத்தறிவாளர்களுக்குத் தெரியும். ஆனால் கடவுள் நம்மைக் காப்பாற்றும் என்று நம்பித் தேரிழுத்தவர்கள் தானே உயிரைவிட்டுள்ளார்கள். அவர்கள் நம்பிய கடவுள் அவர்களைக் காப்பாற்றவில்லையே என்பது குறித்து யோசிப்பார்களா?
– புருனோ