– அன்பன்
மதத் தீவிரவாதம்
மதம் தன் உயிரைத் தானே அழித்துக் கொள்ளும் அளவுக்குக் கொண்டு செல்கிறது என்பதற்கு அண்மையில் ஓர் உதாரணம் இந்த செய்தி. தன்னைத்தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஒரு மதப் பிரிவு ரஷ்யாவில் இருக்கிறதாம்.அதன் பெயர் ஜெஹோவாவின் சாட்சிகள். சுமார் 70இலட்சம் உறுப்பினர்கள் கொண்ட இந்த மதப் பிரிவினர் ரஷ்யாவில் இரண்டு இலட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களில் 43 வயதான ஒருவர் மாஸ்கோ அருகிலுள்ள நகாபினோ கிராமத்தில் தன் மீதே எரிபொருளை ஊற்றி எரித்துக் கொண்டார். காவலர்காளால் காப்பாற்றப்பட்டு தற்போது உயிருக்குப் போராடிவருகிறாராம்.
மதத் தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்தப்பட்டு இவர்களில் சிலர் ரஷ்ய அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது நடவடிக்கைகளைத் தடை செய்வது குறித்தும் ரஷ்ய அரசு பரிசீலித்துவருகிறதாம். இந்த மதம் சோவியத் அரசு இருந்தபோது தடை செய்யப்பட்டிருந்தது. இந்தியாவிலும் கூட நானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சமயத்தவர் உள்ளனர். அதாவது அகம் பிரம்மாஸ்மி என்று சொல்லிக்கொள்பவர்கள்.இவர்கள் ஆதி சங்கரரின் வழி வந்தவர்கள்.இவர்களில் சிலர் மீது இன்னொருவரைக் கொலை செய்ததாகக்கூட வழக்கு நடந்து வருகிறது.
பெண்ணுரிமைச் சட்டம்
திருமண ரத்துரிமை பெற்றவர்களாக இருந்தாலும் பெண்ணுக்குக் கணவனின் சொத்தில் பங்கு உண்டு என்ற புதிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மாநிலங்களவையில் மே 2-அன்று திருமணச் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான முன் வரைவை மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தாக்கல் செய்தார். திருமண ரத்து என்பது பெண்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்ற அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தப் புதிய திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதன்படி, ஒருவருக்கொருவர் விருப்பத்துடன் திருமண ரத்து கேட்டாலும், 6 மாத காலம் பொறுத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தொடர்ந்து கடைப்பிடிக்கவும், மேலும், திருமண ரத்து ஆன பெண்களுக்கும், அவருடைய குழந்தைகளுக்கும் கணவரின் அசையா குடியிருப்பு சொத்துகளில் தெளிவாக வரையறுக்கப்பட்ட பங்கு உண்டு என்றும் இந்த புதிய திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பங்கைப் பெற, திருமண ரத்து பெற்ற பிறகு, இணையர் தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இந்தியப் பெண்ணுரிமைப் போராட்டத்தில் ஒரு முக்கிய நிகழ்வு என்றே சொல்லவேண்டும்.
ஏழுமலையானின் கறுப்புப்பணம்
இந்திய தேர்தல் ஆணையம் தனக்கு வேண்டப்பட்டவர்களை ஆட்சியில் அமர்த்த திடீரென நியாயமெல்லாம் பேசும்.ரொம்ப நடுநிலைபோலக் காட்டிக்கொள்ளும். அப்படித்தான் கடந்த 2011 தேர்தலின்போது வாகனத் தணிக்கை முறை கொண்டு வரப்பட்டது.அப்போது பல்வேறு தொழில் செய்வோரின் கணக்கில் இல்லாத பணம் கைப்பற்றப்பட்ட்து. இந்த முறை அதன் பின் ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் கடைபிடிக்கப்படுகிறது. கணக்கில்லாமல் பணத்தை வைத்திருக்கும் ஏழுமலையானின் திருப்பதியிலும் இடைத்தேர்தல் நடக்கப்போகிறது. அதனால் அங்கும் வாகனத் தணிக்கையில் காவல்துறை ஈடுபட்டுவருகிறது. இதனால் ஏழுமலையானுக்கு காணிக்கையும் குறைந்துவிட்டதாம். கோயில் உண்டியல் காணிக்கை வசூல் கடந்த ஆண்டை விட ரூ.14 கோடி குறைந்துள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒரு இலட்சத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், அதற்கு உரிய கணக்குகளை அவர்கள் வைத்திருக்க வேண்டும். இதனால் தேவையில்லாமல் பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் பக்தர்கள் பணம் கொண்டு வருவதை குறைத்துள்ளனர் என்கின்றனர் ஆந்திரக் காவல்துறையினர். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தும் பணமெல்லாம் கணக்கில் இல்லாத பணம்; அதாவது கறுப்புப்பணம். கறுப்புப்பணம் கொண்டு போவோரைக் காவல்துறை பிடிக்கிறது. கறுப்புப் பணம் வாங்கி வைத்திருக்கும் ஏழுமலையானை வருமான வரித்துறை பிடிக்குமா?
புகழ் பெரும் புத்தர் சுற்றுலா
உலகில் சண்டைகள் அதிகமாகும் சூழலில் மக்களுக்கு புத்தர் மீது கவனம் திரும்பியிருக்கிறது போல. பிகாரில் உள்ள புத்த சுற்றுலாத்தலங்களுக்கு வரும் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறதாம்.தென்கிழக்கு ஆசியா,ஜப்பான்,இலங்கை உள்ளிட்ட நாட்டினர் போதி கயாவுக்கு வந்துபோகிறார்கள். ஆண்டுக்கு 5 இலட்சம் பேர் வருவதாக ஒரு கனக்கெடுப்பு கூறுகிறது. பிகாரை அடுத்து குஜராத்தின் வத் நகருக்கு இப்போது புத்த சமயத்தினர் அதிகமாக வருகிறார்கள். கி.பி.6 ஆம் நூற்றாண்டில் சீனப்பயணி யுவான் சுவாங் வந்து சென்ற நகரம் வத் நகர். அந்நகரை அவர் அனந்தபூர் என்று குறித்திருக்கிறார்2009 ஆம் ஆண்டில் இந்நகரில் அகழ்வாய்வு மேற்கொண்டபோது கி.பி.2 ஆம் நூற்றாண்டின் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.இந்தச் செய்திகளால் இப்போது வத் நகர் புத்த சுற்றுலாத் தலமாகிவிட்டது.இவ்வளவு சிறப்புள்ள இந்த வத் நகருக்கு ஒரு இழுக்கும் உள்ளது. மனித மாமிச விரும்பி நரேந்திர மோடி இந்நகரில் பிறந்தவர்.
2020ல் டல்லரசு
இந்தியாவின் 25 விழுக்காடு மாவட்டங்களில் தண்ணீர் உப்பாகி விட்டது. இதில் பெரும் பகுதி புளோரைடு அளவு அதிகமாக உள்ளது. உலக மக்கள் தொகையில் 16 விழுக்காட்டைக் கொண்ட இந்தியா, நீர் வளத்தில் 4 விழுக்காடே கொண்டுள்ளது. நிலத்தடி நீர் ஏற்கெனவே குறைந்துவிட்ட நிலையில் இப்போது மேற்பரப்பு நீரும் குறைந்து வருகிறதாம்.இந்நிலை நீடித்தால் 2020 ல் பெரும் தண்ணீர் பஞ்சத்தை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வல்லரசுக் கனவெல்லாம் காணாமல் போய் டல்லரசாகிவிடும் என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள்.