வேம்பு
பணி நிறைவு முடிந்து வீட்டிற்கு வந்தார் சதாசிவம் வாத்தியார். பத்துவட்டி வாத்தியார்னு பணியில் இருக்கும்போதே பெயர் பெற்றவர். பென்சன் பணத்தை வட்டிக்குக் கொடுத்துப் பார்த்தார். அலைந்து திரிந்து பணத்தை வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
சதாசிவம் வாத்தியாரின் பாரம்பரிய வீடு. வீட்டிற்கு முன்னே 100 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வேப்பமரம் ஒன்று வளர்ந்து நின்றது. காடுகளில் உள்ள சில்வர் வுட், ஓக், வேம்பு போன்ற மரங்கள் அறிவியல் ரீதியாக தன் கழிவுகளை பால் பிசின் போன்று வெளியிடுவது வழக்கம்.
100 ஆண்டுகள் கழிந்ததும் சதாசிவம் வாத்தியாரின் வேப்ப மரம் அன்று ஒரு நாள் பால் போன்ற திரவத்தை மரத்தின் ஒரு பகுதியில் அது வெளியேற்றி வடியத் தொடங்கியது.
சதாசிவம் வாத்தியாருக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. வேப்பமரத்திற்குப் பாவாடையைக் கட்டினார், சந்தனம் தெளித்து குங்குமம் வைத்து, மரத்தின் அடியில் சூட தீப ஆராதனையோடு பக்தி மேடையை அமைத்து மாரியாத்தா கண் தொறந்திட்டா அவ கண்ணில இருந்து பால் வடியுது என ஊர் மக்களுக்கு வதந்தியைப் பரப்பி உண்டியலைக் கட்டினார்.
பக்தர்கள் கூட்டம் படையெடுத்து இரவு பகலாக வந்துகொண்டே இருந்தது. அறிவியலை அறியாத மக்கள் உண்டியலில் காசை நிரப்பிக் கொண்டிருந்தனர்.
– அணு கலைமகள்-