ஜெயலலிதா பேசியது…
குடும்பம் நடத்த போதுமான அளவுக்கு தனது கணவன் சம்பாதிக்கிறார். குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் கணவன் பூர்த்தி செய்கிறார். சமையலுக்குத் தேவையான அனைத்தையும் வாங்கித் தருகிறார் என்கிற எதிர்பார்ப்பும், உரிமையும் மனைவிக்கு உண்டு.
அதேபோல, மனைவியிடமிருந்து சில கடமைகளைக் கணவன் எதிர்பார்க்கிறார். வீட்டைச் சுத்தமாக வைப்பது, குடும்பச் செலவுகளை நிர்வகிப்பது என்பது மனைவியின் கடமையாகும்.
(நாமக்கல் கூட்டத்தில் ஜெயலலிதா, தினமணி, 17.7.2003)
விஜயகாந்த் பேசியது …
பெண்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அரசியல் பணியைவிட குடும்பப் பணிக்குக் கூடுதல் நேரம் செலவிட வேண்டும் என்று மகளிர் அணி மாவட்டச் செயலாளர்களுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அறிவுரை வழங்கினார்.
சென்னை – கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிர் அணி நிருவாகிகள் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களின் மகளிரணிச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் 175 பேர் பங்கேற்றனர். மாலையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. விஜயகாந்த் பேசியதாவது: பெண்கள் முழுநேர அரசியலில் ஈடுபட்டால் அவர்களின் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அதனால் அரசியல் பணியைவிட குடும்பப் பணிக்கு நீங்கள் கூடுதல் நேரம் செலவிடவேண்டும். உங்கள் குழந்தைகளின் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு வறுமை ஒழிப்பு உள்ளிட்ட கட்சிக் கொள்கைகள் பெண்களிடம் சென்று சேரும் வகையில் பிரச்சாரம் செய்யுங்கள். – இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்ற மகளிரணி நிருவாகிகளுக்கு தடபுடல் மதிய விருந்து வழங்கப்பட்டது. புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் அசைவ உணவு தவிர்க்கப்பட்டது.
-தினமலர், 23.9.2007
பெண்கள் வேலை வீட்டைக் கூட்டிப் பெருக்குவது என்கிறார் ஜெயலலிதா. பெண்கள் அரசியலில் ஈடுபட்டால் குழப்பம் ஏற்படும். எனவே, வீட்டு வேலைகளைப் பார்க்கட்டும் பெண்கள் என்கிறார் விஜயகாந்த்.
21 ஆம் நூற்றாண்டில் வாழும் பெண்களே, வீராங்கனைகளே!
இந்தப் பிற்போக்குவாதிகள் பொருத்தமாகவே கூட்டுச் சேர்ந்துள்ளனர்.
வரும் தேர்தலில் இவர்களை நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டாமா?
குடிபற்றி குடுமிப்பிடி!
கேள்வி: உங்களைக் குடிகாரர் என்று ஜெயலலிதா கடுமையாக விமர்சித்திருக்கிறாரே?
விஜயகாந்த் : ஜெயலலிதா விமர்சனம் பண்ணுவதற்கு முன்பு அவங்களுக்குத் தகுதி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டுதான் விமர்சனம் செய்யவேண்டும். நான் அவங்களைப் போல் கடுமையாக விமர்சனம் பண்ண விரும்பவில்லை. அவர் கட்சிக்கு எப்படி வந்தார், தலைமைப் பொறுப்புக்கு எப்படி வந்தார் என்பதெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். கட்சிக்கு வருவதற்கு முன்பு உலகத் தமிழ் மாநாட்டில் நாட்டியம் ஆடிய விஷயமும் எனக்குத் தெரியும். அ.தி.மு.க.விற்கு வருவதற்கு முன்பு ஜெயலலிதா வாழ்ந்த அந்த இடைக்கால வாழ்க்கையைப் பற்றிப் பேசினால் அசிங்கமாகிவிடும்.
கேள்வி: எம்.ஜி.ஆர். பற்றிப் பேச உங்களுக்கு அருகதை இல்லை என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
விஜயகாந்த் : அவருக்கு மட்டும் என்ன அருகதை இருக்கிறதாம்? எம்.ஜி.ஆர். ஸ்கூலுக்கு ஏதாவது நன்கொடை கொடுத்திருக்கிறாரா? நான்தான் 1992 ஆம் ஆண்டிலிருந்து நன்கொடை கொடுத்து வருகிறேன். ஜானகி அம்மா பெருந்தன்மையாக கட்சியை இவரிடம் விட்டுக் கொடுத்தார். இவர் கட்சியைக் கைப்பற்றி எம்.ஜி.ஆரின் விசுவாசிகளை ஓரங்கட்டி ஆட்சியைப் பிடித்துக் கொள்ளையடித்தார். ஆட்சியில் இருக்கும்போது எம்.ஜி.ஆர். பெயரை இருட்டடிப்புச் செய்வது, தேர்தல் வரும்போது எம்.ஜி.ஆர். பெயரைப் பயன்படுத்துவது என ஜெயலலிதா இரட்டை வேடம் போடுகிறார். இவர்களையெல்லாம்விட எம்.ஜி.ஆரை எனக்கு நன்றாகத் தெரியும்.
-இந்தியா டுடே, 8.11.2006, பக்கம் 18
குடிபற்றிக் குடுமிப்பிடி சண்டை போட்டவர்கள்தான் இன்று கூட்டாளிகளாம். யோசியுங்கள் வாக்காளர்களே!