எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (113)

2022 எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை டிசம்பர் 16-31 2022

வேதத்தில் தமிழ்க் கடவுளா?
நேயன்

ரவிந்தன் நீலகண்டன், வேதத்தில் தமிழ்க் கடவுள் பற்றிய குறிப்பு இருப்பதாக கீழ்க்கண்டவற்றைக் கூறியுள்ளார்.
தமிழ்க் கடவுள் என்றாலே அது முருகன் தான். முருகன் குறித்த மிகப் பழமையான தொன்மங்களிலேயே, அவன் சிவந்த மேனியுடையவனாகக் காட்டப்படுகிறான். கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், மொழியியல் அறிஞருமான ராமச்சந்திரன், ‘கழகக் கந்தனும் பரிஷத் முருகனும்’ எனும் தனது முக்கியமான கட்டுரையில் இவ்வாறு கூறுகிறார் – சேயோன், சிவன் இரண்டுமே சிவந்த நிறத் தெய்வம் என்ற பொருளுடைய சொற்களாகும். நிறத்தில் மட்டுமின்றி, சீற்றம் என்ற தன்மையில் இவ்விரு தெய்வங்களும் ஒத்த தன்மையுடையவர்களாவர்.
(‘முருகற் சீற்றத்து உருகெழு குரிசில்’ பொருநராற்றுப்படை, 131; ‘கூற்றொத்தீயே மாற்றருஞ் சீற்றம் (புறநானூறு, 56:11). இந்திரன் என்ற தேவர்கள் அரசனின் படைகளான மருதகணங்களின் தலைவனாக ருத்ரன், வேதங்களில் குறிப்பிடப்படுவது போன்றே வடமொழிப் புராணங்களில் தேவசேனாபதியாக முருகன் (ஸ்கந்தன்) குறிப்பிடப்படுகிறான். இந்த ஏற்புத்தன்மை இருந்ததால், சங்ககாலத் தமிழகத்தில் வைதிக ருத்ர வழிபாட்டினர் (கடியலூர் உருத்திரங்கண்ணனார், நல்லுத்திரனார் போன்றோர்) முருகனைச் சிவனது ஓர் அம்சமாகவே ஏற்றிருக்க வாய்ப்புண்டு.

உண்மையில், இந்த ‘ஏற்புத்தன்மை’ ஓர் அடிப்படை ஒற்றுமையில் இருந்து உருவாகும் ஒன்று என்றே கூற வேண்டும். முருகனின் மிக முக்கியமான அடிப்படையான குமாரக் கடவுள் எனும் கருத்தாக்கத்தை, முதன்முதலாக நாம் ரிக் வேதத்திலேயே காண்கிறோம். ரிக் வேதப் பாடலில், பிரம்மணோஸ்பதி துதிக்கப்படும்போது, ‘சாகஸபுத்திரன்’ (1.40.2) என அழைக்கப்படுகிறார்.
முருகன் குறித்த மற்றொரு ஆதாரமான புராணக் கருத்தாக்கம் என்பது அவன் தேவசேனாதிபதி என்பதே ஆகும். தேவர்களின் சேனையின் தலைவனாக இந்திரன் இருந்தாலும், அந்தப் படையின் முன்னணியில் இருந்தது பிரகஸ்பதி எனக் கூறப்படுகிறது. பிரகஸ்பதி, அக்னியின் ஓர் அம்சம் எனக் கருதுகிறார், தொன்மவியலாளரான நாராயண அய்யங்கார். அக்னியை நல்வழி நடத்திச் செல்லும், போருக்குத் தலைமை தாங்கும் தளபதியாக உருவகிக்கும் ரிக் வேதப் பாடல்களை அவர் சுட்டுகிறார்.
(உதாரணமாக, 1.189.1). சேனாதிபதியாகவே காட்டப்படும் மற்றொரு வேதக் கடவுள், ருத்திரனே ஆகும். யஜுர் வேத சம்ஹிதையில், சேனான்யன் என்றே அவன் அழைக்கப்படுகிறான்.

ருத்ரனும் அக்னியும் இணைந்த ஓர் உருவாக்கமாகவே ஸ்கந்தன் அல்லது முருகன் உருவாகிறான். இந்நிலையில், ஒரு கேள்வி எழக்கூடும். ஸ்கந்தன் என்கிற வேதக் கோட்பாட்டினை முருகன் என்கிற தமிழர் கோட்பாட்டுடன் இணைத்துவிட்டார்களா? இதற்கான தரவுகள் எதுவும் இல்லை என்பதுடன், ஆரிய-திராவிட இருமைப் பார்வையினை ஏற்றுக்கொண்ட பின்னர் ஏற்படுத்தப்படும் ஊகங்களாகவே இதை நாம் பார்க்கவேண்டி உள்ளது.
இதற்கான ஆதாரமாக, முருகனின் ஆகப்பழமையான வழிபாட்டு முறையான கந்தழி வழிபாட்டினைக் கூறலாம். இது, சிவலிங்க வழிபாட்டுடன் தொடர்புடையது. சிவலிங்க வழிபாடோ, ஹரப்பா மொஹஞ்சதாரோ காலம் தொட்டே நமக்குக் கிடைக்கக்கூடிய ஒன்றாகும். ராமச்சந்திரன் கூறுகிறார்-
ஹரப்பா இலச்சினைகளில் பல தொன்ம நிகழ்வுகள் காட்டப்படுகின்றன. அவற்றை அறிந்து கொள்வதற்கு, ஆரிய- திராவிட இனவாதக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்கிறவர்கள் கூட, வேதத் தொன்மங்களையே இந்த இலச்சினைகளின் பொருளை அறிந்துகொள்ளப் பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக, ஃபின்லாந்தைச் சார்ந்த அஸ்கா பர்போலாவையும், நமது அய்ராவதம் மகாதேவனையும் கூற வேண்டும். இருவருமே, ஆரிய-திராவிட இரட்டையை ஒப்புக்கொண்டவர்கள். ஆனால், ஹரப்பா இலச்சினைகளை அறிந்திட, வேத இலக்கியங்களில் உள்ள தொன்மங்களையே அடிப்படையாகக்கொண்டு இந்த இலச்சினைகள் கூறும் சில முக்கியச் செய்திகளைக் கண்டடைந்தவர்கள்.

நாம் இப்போது காண இருக்கும் இலச்சினை, ஒரு முக்கியமான காட்சியைக் கொண்டது. எழுவர் கைகோத்து நிற்கின்றனர். மேலே ஒரு மரம் நெருப்பைப்போல் பிளந்து நிற்க, அதில் இருந்து கை வளையல்களும், இரு கொம்புகள் கொண்ட தலையணியும் அணிந்த ஒரு தெய்வம் வெளிப்படுகிறது. அதன் முன்னால், ஒரு பூசகர். பெண்ணாக இருக்க வாய்ப்புள்ளது. அருகில் ஓர் ஆடு. எதை அல்லது யாரைக் குறிக்கிறது இந்த இலச்சினை?
யார் இந்த எழுவர்? வளையல்கள் அணிந்த இந்த எழுவரும் மகளிர் எனக் கருத, பலமாக இடமளிக்கிறது இந்த இலச்சினை. இந்த ஏழு மகளிர் யார்? ஏழு மகளிரின் மிகப் பழமையான தொன்மம், அவர்களை சப்தரிஷிகள் எனும் ஏழு விண்மீன்களுடன் இணைப்பதாகும். பாரதத் தொன்மங்களில், சப்தரிஷிகளுடன் தொடர்புடைய ஏழு பெண்கள், கார்த்திகை மாதர் அறுவரும் அருந்ததியும் ஆவர்.

சதபத பிரமாணத்தில் (2,1,2,4), சப்தரிஷிகளின் மனைவியரான கார்த்திகை மாதர் எழுவரென்றும், அதில் அருந்ததி தவிர பிறர் கற்பொழுக்கம் தவறியதால், தம் கணவரிடமிருந்து பிரிந்தனர் என்றும், அவர்களே கார்த்திகை மாதர் அறுவராகினர் என்றும் கூறப்படுகிறது. இவர்களை, ஸ்கந்தனுடன் இணைக்கும் மிகப் பழமையான முழுமையான தொன்மம், மகாபாரதத்தில் (3.213.1-3.219.11) கூறப்பட்டுள்ளது. இங்கு, அக்னியின் மகனான ஸ்கந்தனுக்கு, வளர்ப்பு அன்னையராகக் கார்த்திகை மாதர் இருந்தனர் என்றும், எனவே அவர்கள் விண்மீன்களாக வானில் என்றென்றுமாக இருந்தனர் என்பதும் கூறப்படுகிறது”.
மேலே காட்டியுள்ளவை சரியா? வேதத்தில் தமிழ்க் கடவுள் குறிக்கப்பட்டுள்ளதா? உண்மையென்ன? தமிழர் வழிபாட்டிற்கும், ஆரிய வழிபாட்டிற்கும் தொடர்பு உண்டா? என்பவற்றை இனி ஆய்வோம்.
(தொடரும்)