இந்தியாவில் அரசியல் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நாட்டின் வளர்ச்சி குறித்த திட்டங்களை அரசியல் அடிப்படையில் எடுத்தால் இந்தியா முன்னேற முடியாது. நமது அரசமைப்பு முறை அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும். அரசு நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது. அரசியல் ஆதிக்கத்தால் நாடு பின்தங்கிவிட்டது.
தினேஷ் திரிவேதி,ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர்
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்ததற்காக அய்.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்தியா, இஸ்ரேலை எதிர்க்கவில்லையா? ஒருகாலத்தில் ரஷ்யாவின் நட்பு நாடுகளில் இந்தியா முதன்மை நாடு. இப்போது அந்த வரலாற்றுப்பூர்வமான உறவு என்ன ஆனது? பாரம்பரியத்தை மய்யமாக வைத்து எப்போதும் செயல்பட முடியாது. தமிழர்களுக்கு எதிரான மிகப் பெரிய இன அழிப்பு நடவடிக்கை நடந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது. தமிழர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளோ, குற்றவாளிகள் மீதான நீதி நடவடிக்கைகளோ குறைந்தபட்சமாகக் கூட எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில்தான் அய்.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு ஒத்துழைக்கும்படி மத்திய அரசைக் கேட்கிறோம். ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வதற்கு இதுதான் கடைசி வாய்ப்பு. இனிமேலும் பொறுமையாக இருந்தால், இந்தச் சந்தர்ப்பத்தையும் தவறவிட்டவர்கள் ஆகிவிடுவோம். – கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர்
அரசியலில் நிரந்தரமான தோல்வி என்றோ, நிரந்தரமான வெற்றி என்றோ எதுவும் கிடையாது. இன்றைக்கு தோற்பவர்கள் நாளை அமோகமாக வெற்றி பெறுவார்கள். இப்போது வெற்றியைக் கொண்டாடுபவர்கள் நாளை மண்ணைக் கவ்வுவார்கள். வெற்றியை நிரந்தரமாகத் தக்கவைத்துக் கொள்வதற்கான மந்திரம் ஏதும் கிடையாது. இதுதான் அரசியலின் தன்மை. – அருண்நேரு, மேனாள் மத்திய அமைச்சர்
இந்தியாவில் குழந்தைகள் திருமணம் குழந்தைகளின் உடல் நலனைக் கெடுப்பதுடன் அவர்களின் குழந்தைத் தன்மையையும் அழித்துவருகிறது. உலகளவில் 55 பெரும் பணக்காரர்கள் இந்தியாவில் இருக்கும்போது, தினம் 32 ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டும் ஏழைக்குடும்பங்கள் பலகோடி உள்ளன.
– எஸ்.தாமஸ் ஜெயராஜ், அய்.நா.குழந்தைகள் உரிமை அறிக்கைக் குழு உறுப்பினர்
நீங்கள் (ராஜபக்ஷே) எனக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருந்தபடி, இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர்களுக்கு இன வேறுபாடின்றி அனைத்து உரிமைகளும் அளிக்கப்படவேண்டும். அவர்கள் சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் நடத்தப்படவேண்டும்.
டாக்டர் மன்மோகன் சிங், இந்தியப் பிரதமர்.
சுதந்திரம் என்ற சொல்தான் எத்தனை அருமையானது! அதை யாருக்குத்தான் பிடிக்காது! ஆயிரம் பூக்கள் மலரும் ஒரு சுதந்திரமான சமூகத்தில் தான் ஆயிரத்தொரு குரல்கள் சுதந்திரமாக ஒலிக்கும்.ஆனால், இன்றைய நிலையில் பல அடிப்படையான சுதந்திரங்கள் வீழ்த்தப்படும் ஆபத்தில் இருக்கின்றன. சர்வாதிகாரமும் அதிகாரக் குவிப்பும் மிகுந்த நாடுகளில்தான் இந்நிலை என்றில்லை. இந்தியாவில்கூட மதவெறி,அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றின் கலவையாகப் பார்க்கமுடிகிறது.
சல்மான் ருஷ்டி, எழுத்தாளர்