தமிழ்ப் பெயரில்லா தமிழ்(?) புத்தாண்டு

ஏப்ரல் 01-15

– ம்ணிம்கன்

பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதானிய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வசித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச , ஆனந்த, ராட்சச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்திரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ரக்தாட்சி, குரோதன, அட்சய ….

 

கோவிலில் புரோகிதர்கள் புரியாத மந்திரங்களை ஓதுவது போல இருக்கிறதா?ஆமாம்,அந்தப் புரோகிதக் கூட்டம் ஓதிய கதையில்…இல்ல இல்ல ஆபாசக்கதையில் தோன்றிய பெயர்கள்தான் இந்தப் புரியாத சொற்கள். இந்த சமஸ்கிருதப் பெயர்கள் தாங்கிய ஆண்டுகளைத்தான் தமிழ் ஆண்டுகள் என்கிறார்கள் ஆரியக் கொடுக்குகள்.

நாரதன் ஒருமுறை ,’கடவுள்’ கிருஷ்ணனிடம் “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டானாம். அதற்குக் கிருஷ்ணன், “நான் உடன் இல்லாமல்  வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றானாம். இதற்கு நாரதன் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதன் மீண்டும்  கிருஷ்ணனிடமே வந்து அவர்மீதே மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றான். கிருஷ்ணன் நாரதனை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதன் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினானாம். . பின் ‘கடவுள்’ கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது பிள்ளைகளைப் பெற்றனர். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவைதான் பிரபவ முதல் அட்சய வரையான ஆண்டுகள் என்கிறது அவாள் சொல்லும் கதை.

– (ஆதாரம்: அபிதான சிந்தாமணி – 1392ஆம் பக்கம்)

ஆணும் ஆணும் கூடி பெற்ற பிள்ளைகள் தான் இந்த 60 பிள்ளைகள்.இதைத்தான் தமிழ் ஆண்டுகள் என்கிறார்கள். சரி,இந்த 60 ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றாவது தமிழ்ப் பெயர் உண்டா ? தமிழில் பெயரே இல்லை;பிறகு எப்படி அது தமிழ்ப் புத்தாண்டு என்று பகுத்தறிவு கேள்வி எழுப்பினால் அதற்கு ஆரியத்தரப்பிலும் பதில் இல்லை,ஆத்திகப் தரப்பிலும் பதில் இல்லை.

இந்த 60 ஆண்டுகளும் சுற்று ஆண்டுகள்.தொடர் ஆண்டுகள் அல்ல.அதாவது 61 ஆவது ஆண்டில் மீண்டும் 1 ஆவது ஆண்டு வந்துவிடும்.எனவே எத்தனை யாவது ஆண்டு என்று கணக்கிடமுடியாது.தமிழர்களின் தொன்மையை,வரலாற்றைத் திட்டமிட்டு மறைக்கவே இந்த ஆண்டு முறையைப் பார்ப்பனர்கள் புகுத்தினார்கள் என்று தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்.உதாரணமாக அட்சய ஆண்டில் பிறந்தவர் இவர் என்று சொனால்,அது எந்த அட்சய ஆண்டு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அட்சய ஆண்டு வந்துவிடுகிறதல்லவா?எனவே அவரது வயதைக் கணக்கிட முடியாது.

இயற்கையை வழிபட்ட தமிழன் தனது ஆண்டுத் தொடக்கத்தையும் அப்படியே வகுத்துக் கொண்டான். ஒரு நாள் என்பது, சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.

ஒருமாதம் என்பது,

ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.

அதேபோல் ஆண்டு என்பது,

சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு.

அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.

சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.

சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.
உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.

சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும் பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் தென் கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.

சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.

இவ்வாறு சூரியனின் இருப்பைக் கொண்டுதான் நாளும் கணக்கிடப்பட்டது. ஆண்டும் கணக்கிடப்பட்டது. நிலவைக் கொண்டு மாதம் கணக்கிடப்பட்டது. ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.

தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.

தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின் இருப்பிடத்திலிருந்து வட மேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.

ஆனால்,கட்டுக்கதைகளைக் கூறி மக்கள் மனதில் கடவுள் அச்சத்தைப் புகுத்திய ஆரியர்கள் தம்முடைய பிழைப்புக்காக உருவாக்கிய கதையே நாரதன் கிருஷ்னன் கூடிய  ஆபாசக் கதை.

இந்த ஏப்ரல் 13 அன்று தொடங்கும் சித்திரை மாதம் ஆரியம் புகுத்திய ஆண்டின் பெயர் நந்தன. இது மட்டுமல்ல,இந்த வரிசையில் உள்ள ஆண்டுகளின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் உள்ளன.செம்மொழித்தமிழில் பெயர்கள் அமையாத ஆண்டுகள் எப்படித் தமிழ் ஆண்டுகள் ஆகும்? கிறிஸ்துவுக்கும் பின் எனக் கணக்கிட்டு 2012 என்று கூறிவிட முடியும். கிறித்துவுக்கு 31 ஆண்டுகள் மூத்தவர் வள்ளுவர்,(அதாவது கி.மு.31) என்று தமிழ் அறிஞர்கள் வகுத்தபடி 2012 உடன் 31 அய் கூட்டி 2048 அய் திருவள்ளுவர் ஆண்டு என்று சொல்லி விட முடியும். ஆனால், இந்த நந்தன எத்தனையாவது நந்தன ஆண்டு என்று சொல்லமுடியுமா?

பெயரில் தமிழ் இல்லை;கணக்கிலும் ஒழுங்கில்லை,அப்புறம் என்ன தமிழ் ஆண்டு? தமிழர்களே இன்னும் எத்தனைக் காலம் இந்தப் புரட்டுகளை நம்பி மானத்தையும்,அறிவையும் இழப்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *