கேள்வி : இந்தியர்களுக்கு ஆங்கிலேயர் மேல் உள்ள எதிர்ப்புணர்ச்சி இன்னும் அடங்கினதாகத் தெரியவில்லையே. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்தியர்கள் கேவலமான ஆட்சியில் இருந்தார்கள் என்பதை முற்றிலும் மறந்துவிட்டார்களா?
– இ.கிருபாகரன், சோளிங்கர்
பதில் : ஆதிக்கத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்பது அதன் அடிப்படையினால், அதற்கு முன்னால் பல ஆயிரம் ஆண்டுகளாக படையெடுத்து
நமது மூளைகளை ஆக்கிரமித்துக்கொண்ட ஆரியர் கொடுமைக்கு எதிரான நடவடிக்கைகளை யல்லவா மேலும் உறுதிப்பட எதிர்க்க வேண்டும்? அந்தோ பரிதாபம்! எவ்வளவு அறியாமை!!
கேள்வி : அறத்தா றிதுவென வேண்டா – சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை என்று பல்லக்கை மனிதன் சுமக்க, அதிலிருந்து மனிதன் செல்வது அறமாகாது என இந்த இழிவுச் செயலை 2000 ஆண்டுகளுக்கு முன்னே திருவள்ளுவர் குறை கூறியிருக்கிறார். ஆனால், அழுக்காண்டி புழுகாண்டிகளைத் தூக்கிச் சுமக்கும் அடிமைச் செயல் இன்றும் தொடர்வது பற்றி? – இயற்கைதாசன், கொட்டாகுளம்
பதில் : மனுவின் மொழி அறமானதொருநாள் அதை மாற்றியமைக்கும் நாளே தமிழர் திருநாள்! என்ற புரட்சிக்கவிஞர் பொன்வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!
கேள்வி : இந்து மதக் காவலர்களாக வேடம் போட்டது பா.ஜ.க. ஆனால், பா.ஜ.க. அமைச்சர்கள் மூவர், கருநாடக சட்டப் பேரவையிலேயே ஆபாசப் படம் பார்த்து பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது எதனைக் காட்டுகிறது? – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்
பதில் : இந்துமதப் புராணங்கள் – கதைகள், கிருஷ்ண லீலைகள் – லிங்க புராணம், வினாயகர் கதை – அய்யப்பன் வரலாறு அதைவிட சுவையான Pornographyகள் ஆகுமே! அதைவிடவா இது?
கேள்வி : உண்டதை வாந்தியெடுத்து மதிப்பெண்கள் பெறும் நம் உருப்படாத கல்வி முறையும் இளைய தலைமுறையைச் சீரழிக்கும் சமூக அமைப்பு முறையும்தானே ஆசிரியை மகேஸ்வரியின் உயிர்த் தியாகத்திற்கு மூலகாரணம்?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில் : பல காரணங்களில் அதுவும் ஒரு காரணம்!
கேள்வி : சிறுபான்மையினருக்கு 4.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கினால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும் என்று பா.ஜ.க. எச்சரிக்கை விடுக்கிறதே? – தி.இரமணன், காஞ்சிபுரம்
பதில் : சிறுபான்மையினர் என்றால் முஸ்லீம், கிறித்துவர் என்பதால் பா.ஜ.க.வுக்கு அலர்ஜி – ஒவ்வாமை நோய்!
கேள்வி : கனிமொழி விவகாரத்தில் முழுமையான தீர்ப்பு இறுதி அறிக்கைக்குப் பிறகுதான் அவர் குற்றவாளியா இல்லையா என்று தாங்கள் கூறியதற்கு, ஜெயலலிதாவின் வழக்குக்கும் பொருந்துமா என தினமலர் கூறுகிறதே தங்களின் பகுத்தறிவு நிறம் மாறுவதாக செய்தி வெளியிட்டுள்ளதே? – கோ.ரமேஷ், சே.பேட்டை
பதில் : வழக்கு முடியும்வரை ஜெயலலிதா அம்மையாரைக்கூட குற்றவாளி என்று நாம் அப்போதும் சரி இப்போதும் சரி கூறவில்லையே! பூணூல் பார்வை பழுதுபட்ட பார்வையாகும்!
கேள்வி : இத்தாலி கடற்படையினரால் சுடப்பட்ட மீனவர்களுக்கு ரூ.3 கோடி வரை நட்ட ஈடு தரும்வரை கப்பலைக் கொண்டுபோகக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கில் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டும் இதுவரை ஒருமுறை வட அவர்களிடமிருந்து நட்ட ஈடு கோரியதில்லையே இந்தியா? – ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி
பதில் : கேரளத்தவர்களின் கட்டுப்பாடு, ஆட்சிச் செல்வாக்கு – தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது!
கேள்வி : தேசியத்தின் பெயரால் வடவருக்கு அடிமையாய் இருக்கும் தமிழனுக்கும், தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஆரியத்துக்கு அடிமையாய் இருக்கும் தமிழனுக்கும் உள்ள வேறுபாடு என்ன? – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில் : முன்னவர் அப்பாவி, பின்னவர் அகம்பாவி. முன்னவர் திருத்தப்பட வேண்டியவர், தட்டி எழுப்பப்பட வேண்டியவர். பின்னவர் கண்டிக்கப்பட வேண்டியவர், தட்டி எழுப்பப்பட முடியாது. பாசாங்கு தூக்கக்காரர்! தமிழ்ப்புத்தாண்டு தை முதல் நாள் என்ற ஆணையை மாற்றியதை எதிர்க்காத சரணாகதி நிலைமைதான் பின்னவர்களை சரியாக அடையாளம் காட்டும்!
கேள்வி : தஞ்சையில் கட்டப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது தமிழக அரசு வழக்குத் தொடுத்துள்ளது பற்றி தமிழ்த்தேசியவாதிகள், பரம்பரை மற்றும் திடீர் ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் யாரும் வாய் திறந்ததாகத் தெரியவில்லையே, ஏன்? – க.மாறவர்மன், பட்டுக்கோட்டை
பதில் : மேற்கண்ட பதிலில் இந்தப் பதிலும் அடங்கியுள்ளது! ஈழம் பிரிந்து உதிர ஏற்பாடு மும்மரமாக நடக்கிறது போலும்!
கேள்வி : திராவிடம் ஒரு மாயை என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறாரே? இதற்கு தங்கள் பதில் என்ன? – அரு. மணிமேகலை, விராச்சிலை
பதில் : அந்த மாயை இல்லாதிருந்தால் அவரே டாக்டராகி இருக்க மாட்டாரே! தோல்வி ஜன்னியில் இப்படிப் பேசுகிறார் மருத்துவர் – பரிதாபம்!