வரலாற்றுச் சுவடுகள்: பிராமண சனாதன தருமம்

2022 நவம்பர் 1-15 2022 மற்றவர்கள்

கைவல்யம்

“உத்தியோகத்தைப் பிராமணர்கள் தேட வேண்டியதில்லை; உத்தியோகம் தானே அவர்களைத் தேடிவரும்’’ என்றார். சர்.சி.பி. அய்யர். ஏன் அப்படிச் சொன்னார்? பதவி செல்வம் என்கிற ஆணவத்தாலா? அல்லது உயர்ந்த ஜாதி என்கிற பெருமையினாலா? அல்ல. புத்தி, படிப்பு, உழைப்பின் தன்மை, சந்தர்ப்பத்தை விடாமல் உபயோகப்படுத்திக் கொள்ளும் வழி முதலியவைகளெல்லாம் பிராமண ஜாதியான தன் ஜாதிக்குத் தெரியுமென்பது அவருக்குத் தெரியும். அது புத்தியுடைய எல்லோருக்கும் உயர்ந்ததும் உரித்தானதுமாகும். பின்சபைக்கு வந்த வைதிகர்களுடையதும் மடாதிபதி களுடையது-மான ஆசிர்வாதங்களெல்லாம் குறுகிய களத்திலிருந்து வந்தவைகள். களமும் விரிந்து சின்னத்தலையும் பெரிய தலையானால் அவைகளும் நின்றுவிடும். சரியான நேர்வழிக்கும் வந்துவிடும். .

வரவேற்புரையில் பிராமணர்களைக் குற்றம். சொல்லுகிறார்கள், அது கூடாதென்று காணப்படுகிறது. பலநாட்களாகப் பிராமணர்-களைக் குற்றம் சொல்லுகிறோம். ஏன் குற்றம் சொல்லுகிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டிய பொறுப்பு அந்தச் சமூகத்திற்கு இருக்கிறது. அங்கே அவர்கள் புத்தி கட்டாயம் செல்லவேண்டும். நாங்கள் எத்தனையோ குற்றங்கள் சொன்-னோம். புரட்டுப் பித்தலாட்டங்களைப் பிரத்தியட்சமாகக் காட்டினோம். இனியும் எங்களைப் பாதிக்கும்படியான குற்றங்களை அவர்கள் விடவில்லை. உண்மை உணர்ந்த அவர்களில் சிலரிடமிருந்தேனும் உண்மைக்குப் பரிந்து பேசும் குணம் வெளிப்படவில்லை. உண்மையைக் காண்பதும், கண்டதை உண்மை-யாகச் சொல்லுவதும் பிராமணனின் இலட்சணம், அதுதான் பிராமண தருமம். அதற்குத்தான் சனாதன தருமம் என்று பெயர். சனாதன தருமம் என்றால் பழைய தருமம் என்று அர்த்தம். அவர்கள் எழுத்து, பேச்சு, எண்ணம், போக்கு, நடத்தை முதலியவைகளிலுள்ள குற்றங்களைப் பிரத்தியட்ச அனுபவத்துடன் சொல்லுகிறோம். அது சரியல்ல என்று நியாயத்துடன் சொல்லட்டும்.

அவர்களின் நியாயமும் சரியாக இருந்தால் குற்றம் சொல்வதை விட்டுவிடுகிறோம். நாங்கள் எப்படியிருந்தால் உங்களுக்கென்ன, எங்களை ஏன் குற்றம் சொல்லுகிறீர்கள் என்று அவர்கள் கேட்கலாம். பிராமண தருமம் என்றாலும், இந்து தர்மம் என்றாலும் சனாதன தருமம் என்றுதானே அர்த்தம்? சனாதன தருமத்தில் பிராமணன் இருந்தால், சூத்திரனும் இருக்கத்தானே வேண்டும்? அந்த அர்த்தத்தில்தானே அதன் பெயரை அமைத்தது; அதைத்தானே அவர்களும் நினைத்துச்சொல்லுகிறார்கள்! ஆங்கில தருமமான ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும், அதுவே உலகத்திற்கெல்லாம் நன்மை பயக்கக்கூடியது என்று ஆங்கிலேயர் சொன்னால் நாம் சும்மா இருப்போமா? இருக்கிறோமா? அதே காரணம்தான் நாங்கள் பிராமணர்களைக் குற்றம் சொல்லுவதற்கும் ஆங்கிலேயர் நம்மை அரசாட்சி செய்ய ஆரம்பித்த உடனே அதைச் சொன்னார்கள். அதற்குப்பின் அவர்களுடைய பாஷை, சட்டம், முதலியவைகளைப் படித்தோம், நியாயமும் தெரிந்துகொண்டோம், அதுபோலவே பலகால-மாகப் பிராமண தருமம் என்றும் சனாதன தருமம் என்றும் சொன்னார்கள். அதன் சட்ட திட்டமான வேதஸ்மிருதிகளை நாம் படிக்கக் கூடாதென்று சொல்லியதும் அன்றி படித்தாலும் படிக்கும் பக்கத்திலிருந்துகேட்டாலும் கொடும் தண்டனையை ஏற்படுத்தினார்கள்.

இப்பொழுதோ அவர்களுடைய காயத்திரி மத்திரபுஸ்தகம் காலணாவிற்கு விற்கிறது. உபநிஷத்துகள், பிரம்ம சூத்திர பாஷியங்கள் முதலிய தத்துவ சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் படிக்கிறோம். போதாக்குறைக்கு வடதேசம் போய் வடமொழியில் பண்டிதனாகி வந்த ஒரு தமிழனால் இருக்வேதம், ‘சாமவே தம் இரண்டையும் தமிழில் மொழிபெயர்த்து சூளை இராசாமிப் பிள்ளை முப்பது, நாற்பது ஆயிரம் ரூபாய் செலவு செய்து அச்சுப்போட்டு இனாமாகவே எல்லோருக்கும் கொடுக்கிறார்; அதையும் படித்துத்தான் குற்றம் சொல்லுகிறோம். திராவிட நாட்டு உயர்குடி மக்களையெல்லாம் இனியும் பிராமணர்கள் என்கிற ஜாதிக்குத் தாசி மக்களாகவும், வைப்பாட்டி பிள்ளைகளாகவும், அடிமைகளாகவும் இருக்கவேண்டும் என்கிற சனாதன தருமத்தைச் சொல்லுகிறார்கள். அதைக் கடவுள் சொன்னதாகவும் சொல்லு–கிறார்கள். அந்தக் கடவுளை எவ்வளவு பெரிய குற்றவாளியாக்குகிறார்கள் என்பதை உணர்வதில்லை. வேதத்தில் இருக்கிறதென்கிறார்கள். அது எவ்வளவு பெரிய போர்ஜரி என்பதைத் தெரிந்துகொள்ளவில்லை. அதை நாங்கள் நம்புகிறோம் என்கிறார்கள். அந்தப் புத்திக்கு வெட்கப்படுவதுமில்லை, இதை எல்லாம் சொன்னால் பிராமணர்களைக் குற்றம் சொல்லுகிறோம், திட்டுகிறோம் என்கிறார்கள்.

சர்.சி.பி. அய்யரை ஆங்கிலேயர் உடையிலும் பிராமணசபை உடையிலும் பிரீ இந்தியா என்கிற பத்திரிகையில் படம் போட்டிருக்கிறது. இந்தக் காலத்தில் யார் எந்த உடைபோட்டுக் கொண்டாலும் அதில் குற்றமும் ஆட்சேபனையும் இல்லை. பின் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால், சனாதன தருமம் என்கிறார்கள், அதைக் காப்பாற்ற வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்காகச் சொல்லுகிறேன். பூர்வீக சனாதன உடை நிர்வாணம், அதற்குப்பின் தழை, தாம்பு, பட்டை, தோல், நூல், பட்டு, சரிகை’, வரையிலும் ஏறி ஆங்கிலேய உடையோடு நிற்கிறது. எப்படியானாலும் பட்டும் சரிகையும் சனாதன உடையில் இல்லை. சந்நியாசியானால் தலை மொட்டையாக இருக்கவேண்டும்.. சம்சாரியானால் பசுவின் குளம்பு அளவு குடுமி வேண்டும். கிராப்புத் தலை சனாதன தருமத்தில் இல்லை, சனாதன தருமத்தில் எந்த இடத்திலிருந்து இவர்களால் காப்பாற்றப் படப்போகிற பிராமண தருமம் பிறந்ததோ, அந்த இடத்திலும் இல்லை. தலைமயிரில்கூட சனாதன தருமத்தைக் காப்பாற்ற முடியாத இவர்கள் சனாதனிகளாம், சனாதனத்தைக் காப்பாற்றப் போகிறார்களாம். அத்தகைய பேச்சுகளால்-தான் அவர்கள் ஏமாற்றைப் பரப்பி வருகிறார்கள்.

ஞானமுடையவன் பிராமணன், அய்ம்புலன்-களை, ஞனேந்திரிய_கர் மேந்திரியங்களை வென்று தவம் செய்கிறவன், ஞானி, தந்நலம் விட்டுப் பிறருக்கு உழைப்பவன் பிராமணன் என்று சனாதன தருமம் செய்கிறது, காட்டில் கூடி வேதத்தில் ஒரு பாகமான ஆரண்யம் என்பதை ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டு உலகத்திற்குச் சொல்லுவது அவர்கள் தொழில். அதற்காகத் தானதருமம் ஏற்றுப் பிச்சை எடுத்து உண்பதே ஜீவனம். பிராமணர்களுக்குப் பிச்சை ஆயிற்றா? பிச்சைக்கு வருகிறீர்களா? பிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வதுதான் சனாதன ஒழுங்கின் முறை. உள்ளதை இல்லை என்றும், இல்லாததை உள்ளதென்றும், பொய்யை மெய்என்றும், மெய்யைப் பொய்யென்றும் பேசிவரும் வக்கீல் தொழிலிலிருந்து நாடகம், நாட்டியமாடும் தொழில்வரையிலும் செய்து பிழைப்பதில் சனாதன முமில்லை, பிராமண தருமமுமில்லை, பிராமணனும் இல்லை. மலையடிவாரத்திலும் மரத்தடியிலும்தான் பிராமண தருமம் வளர்ந்தது. அய்ம்பது இலட்சம்போட்டு ஆங்கிலப் பள்ளிகட்டி அதில் பி.ஏ.எம்.ஏ. பாஸ் பண்ணிவிட்டாலும் தருமம் வளராது. பிரா மணன் தன் கலையை விட்டு வேறுகலையைப் படித்தான் பிரஷ்டன் என்று ஸ்மிருதிகள் சொல்லுகின்றன.