புதுப்பாக்கள்

மார்ச் 01-15

இப்படித்தானுங்க…

பணம் இருந்தபோது
சிலர் கேட்டு
கொடுக்காத மனசு,
பணமில்லாத நேரம்
சிலர்
பணம் கேட்கும்போது
பணமிருந்தா
தந்திருவேன்னு,
எப்படித்தான் சொல்லுதுனே தெரியல.
வாலிதாசன், முகவை 15

கா(வி)வல் நிலையம்

நடுத்தெருவில்
உருவாக்கிய கோவிலுக்கு
திருவிழா நடத்திட
அப்பகுதியில் வாழும்
மக்களைத் தொல்லைப்படுத்தும் விதமாக
அதிக பணம் வசூல் வாங்கும்
நிர்வாகத்தின்மீது
நடவடிக்கை எடுக்கக் கோரி
புகார் கொடுக்க
காவல் நிலையம் வந்த நபர்
திகைத்து நின்றார்…
புறநகர் காவல் நிலைய
நுழைவு வாசலில்
கைகள் கட்டி
கைதிகள் போல் நின்றிருந்தனர்
பல காவல்துறை அதிகாரிகள்
புதியதாக அமைக்கப்பட்ட
கடவுளர் சிலையினைச் சுற்றி…

ஜோதிடர் வீடு

மன அழுத்தங்களை
சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு
தான் மிகவும்
பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்து தாக்கத்திலிருந்து
விடுபட எண்ணி
மீளவே முடியாத புதை குழிக்குள்
தானே வலியச் சென்று
சிக்கிக் கொள்ளும் இடம்…!

உழைப்பு

வரி வரியாய் பட்டாசுத் திரிகள்
பாதை எங்கும்
காய்ந்து கொண்டிருக்க…
அவ்வழியே வரும்
கால்கள் அனைத்தும்
விலகிச் சென்றன…
கரிமருந்துக் கரங்களின் உழைப்பிற்குத்
தலை சாய்த்து…

நினைவுகள்

ஆட்டுக்கறி பிரியாணி அப்பாவிற்கு அதிக விருப்பம்…
ஆசையோடு கேட்டபோது
வாங்கித் தர மறுத்த மகன்
வெளுத்துக் கட்டுகிறான்
அப்பாவின் நினைவு நாளன்று…

நம்மால் முடியும்

மிருகத்தின் பெயர்தனை
அடைமொழியாக்கி…
அடைமொழியில் வைக்கப்பட்ட
மிருகமாகவே மாறி
வாழ்வோருக்கு மத்தியிலே
மனிதர்களாய் வாழ்வது
சற்று கடினம் தான்…
எனினும்
நம்மால்தானே முடியும்
அத்தகைய மிருகங்களையும்
அடக்கி ஆள…

– பா.இராஜேந்திரன், அருப்புக்கோட்டை

மதி மயக்கம்

உடுக்கை, தப்பை சத்தத்தில்
ஒய்யாரமாய் அருள் வந்தாடும்,
ஆயுதங்களைக் கொண்ட
குல ஆசாமிகளின்
கண்களில் தெரிவது
கொலை வெறியா?
அன்பு நெறியா?

– வெங்கட.இராசா, ம. பொடையூர்

ஹே ராம்!

அந்த காந்தி ஆசிரமத்திலிருந்து
வந்திருக்கு…
ஆளுக்கொன்று கொடுக்கச்சொல்லி…
சத்திய சோதனை புத்தகம்!
எத்தனை பேர் இருக்கீங்க
வகுப்புக்குள்ளே?
எந்திரிங்கடா
அரிசனப் பசங்க மட்டும்!

– கவியகம் காஜூஸ், அங்கலக்குறிச்சி

பேரிடர்

ஓடிவந்து காப்பாற்று என வேண்டுகிறான்
நொண்டி வீரனிடம்!

– ச. தமிழ்வேந்தன், மேப்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *