புதிய பொருளாதாரக் கொள்கையின் தாக்கத்தால் நாடும், மனித வாழ்வும் கடும் சிக்கலில் இருக்கின்றது. இதிலிருந்து மக்களை நாடாளுமன்றம் விடுவிக்கும் என நம்பாதீர்கள். ஏனெனில், அது கோடீஸ்வரர்களின் சபையாகிவிட்டது.
அன்னா ஹசாரே ஊழலை ஒழித்துவிடுவார் என்று நம்பாதீர்கள். ஊழலை அவ்வளவு எளிதாக ஒழித்துவிட முடியாது. ஊழல் கருப்புப் பணத்தை உருவாக்குகிறது. அது மக்களிடமிருந்து திருடப்பட்டது. அவ்வளவு பணத்தைத் திருட்டுக் கொடுத்தோம் என்பதற்கு நம்மிடம் கணக்கு இல்லை. வெளிநாட்டு வங்கிகளிலிருந்து கருப்புப் பணத்தைக் கைப்பற்றினால் அதிலிருந்து கிடைக்கும் வட்டி இந்தியாவின் பட்ஜெட் தொகையைவிட அதிகமாக இருக்கும்.
– குருதாஸ் தாஸ்குப்தா, அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.அய்.டி.யு.சி.
10 வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களைவிட குஜராத் நன்றாகவே இருந்தது என்று வெறும் அகமதாபாத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டுமொத்த குஜராத்தின் வளர்ச்சியையும் எடைபோடக் கூடாது. பின்தங்கிய சவுராஷ்டிரா பகுதிகளையும் உள்ளடக்கி எடைபோட வேண்டும். – நந்திதா தாஸ், நடிகை, படத்தயாரிப்பாளர்
அமெரிக்கக் கம்பெனிகள் திறமையான தொழிலாளர்களைத் தேர்ந்தெடுக்க இந்தியாவையும் சீனாவையும் நம்பியிருக்கின்றன. இன்னும் எத்தனை நாளைக்கு அவர்களை நம்பியிருப்பீர்கள்? அமெரிக்காவிலேயே திறமையானவர்களை உருவாக்க வேண்டும். தேர்வுக்காக மட்டும் மாணவர்களுக்குக் கற்றுத் தரும் ஆசிரியர்களை மாற்றிவிட்டு, மாணவர்களை நன்கு கற்றறியச் செய்யும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். – ஒபாமா, அதிபர், அமெரிக்கா
நீதித் துறையில் அரசியல்வாதிகளின் தலையீடு என்பது முற்றிலும் தவறானது. கண்டிக்கத்தக்கது. பெரிய பதவியில் இருந்தால் யாரை வேண்டுமானாலும் அதிகாரம் செய்யலாம் என்ற அவர்களின் மனப்போக்கு மிகவும் ஆபத்தானது. நீதித்துறையே ஒரு நாட்டின் கண்ணாடி. அதன் வழியாகத்தான் உலகம் அந்த நாட்டைப் பார்க்கும். எனவே, இந்தியா போன்ற ஜனநாயக நாடு செம்மையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும் என்றால், நீதித்துறையில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது. சட்டத்தின் பார்வையில் பிரதம மந்திரியும் சாதாரண குடிமகனும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் விருப்பம். எனது விருப்பமும் அதுவேதான். – ஆச்சாரியா, வழக்குரைஞர், கருநாடகா
20 சதவிகிதம் நிலக்கரியைத் தனியாருக்கு அரசு வழங்கி வருகிறது. அதன் பிறகு நிலக்கரி குறைவாக இருக்கிறது என்று கூறி அணு உலையில் மின்சாரம் தயாரிக்கலாம் என்று சொல்கிறது. இதற்கு வேறு வழியில் மின்சாரத்தைத் தயாரிக்கலாமே? நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் நமக்கு 30 சதவிகிதம்தான் கிடைக்கிறது. மீதி கேரளாவிற்கும் மற்ற மாநில மக்களுக்கும் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு 50 சதவிகிதம் வழங்கினால் என்ன?
– அணு உலை எதிர்ப்புக் குழுவினர்