நாயுடு, நாயக்கர், முதலியார் என்ற மும்மூர்த்திகள் தான் தமிழ்நாடு – இந்த மும்மூர்த்திகள்தான் காங்கிரஸ் என்று பேசப்பட்ட காலம் ஒன்று உண்டு. இதில் நாயுடு என்றால் டாக்டர் வரதராசலு நாயுடு, நாயக்கர் என்றால் தந்தை பெரியார், முதலியார் என்றால் திரு.வி.க. ஆவார்கள். இந்த மும்மூர்த்தி களில் டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களின் நினைவு நாள்தான் 23.7.1957.
டாக்டர் வரதராசலு நாயுடு இந்து மத அபிமானிதான் – ஆனாலும் சேரன்மாதேவியில் காங்கிரசின் சார்பில் நடத்தப்பட்ட குருகுலத்தில், அதன் நிருவாகியான வ.வே.சு. அய்யர், பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் என்று வேறுபாடு செய்து, சமபந்திக்கு இடம் இல்லாமல் தனித்தனியாக உணவு பரிமாறச் செய்ததைக் கண்டித்தவர். அப்பொழுது தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக டாக்டர் வரதராசலு நாயுடுவும், செயலாளராக தந்தை பெரியார் அவர்களும் இருந்தனர். குருகுலத்தில் ஜாதி வேறுபாடு காட்டப்படுவது குறித்துக் கலந்து பேச திருச்சியில் காங்கிரஸ் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது (27.4.1925).
அக்கூட்டத்தில் பச்சையாக பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு பக்கமும், பார்ப்பனர் அல்லாதார் இன்னொரு பக்கமும் அணி பிரிந்து காரசாரமாக விவாதிக்கும்படி நேரிட்டது. “வேதங்களிலும், சாஸ்திரங்களிலும் வருணப் பாகுபாடும், ஜாதிப் பாகுபாடும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. வேத விதிமுறைப்படி தானே வ.வே.சு. அய்யர் நடந்து கொண்டு இருக்கிறார். இதில் என்ன தவறு?’’ என்று ஒரு பார்ப்பனர் வ.வே.சு. அய்யருக்கு ஆதரவாகப் பேசினார்.
பெரியாருக்கு வந்ததே கோபம்! “ஜாதி பாகுபாட்டுக்கும், உயர்வு தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரங்களும் விதி வகுத்திருந்தால், அந்த வேதத்தையும், சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்’’ என்று கர்ச்சனை செய்தார். (1922இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் இதே கருத்தைச் சொன்னதும் கருத்தூன்றத்தக்கது!)
பெரியாரை அடுத்து டாக்டர் வரதராசலு நாயுடு ஆவேசப் புயலாக வெடித்தெழுந்தார்.
“ஆரியர்களின் வேதகால கலாச்சாரம்தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு முந்திய திராவிடக் கலாச்சாரத்தில் ஜாதிப் பிரிவினைக்கே இடம் இல்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தை நாம் பின்பற்ற வேண்டும்’’ என்று வெடித்தார்.
பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்? டாக்டர் வரதராசலு நாயுடு பார்ப்பனத் துவேஷப் பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறி அவர் மீது ஒரு கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதனை எதிர்த்துப் பேசித் தீர்மானத்தைத் தோற்கடித்தார் பெரியார். அதன் காரணமாக டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், ராஜாஜி, என்.எஸ்.வரதாச்சாரி, கே.சந்தானம் அய்யங்கார், சாமிநாத சாஸ்திரி ஆகிய அய்ந்து பார்ப்பனர்களும் உடனே கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டனர்.
1954இல் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜி, தந்தை பெரியாரின் கடும் எதிர்ப்பின் காரணமாக முதல் அமைச்சர் பதவியை விட்டு விலகிய நேரத்தில், சென்னையில் அரசினர் தோட்டத்தில் (இப்பொழுது ஓமந்தூரார் வளாகம்) இருந்த டாக்டர் வரதராசலு நாயுடு இல்லத்தில்தான், அவரின் முயற்சியால் தந்தை பெரியார், காமராசர் ஆகியோர் அமர்ந்துப் பேசி காமராசர் முதலமைச்சர் ஆவது பற்றி முடிவெடுக்கப்பட்டது.
இன்னொரு முக்கிய தகவல் உண்டு. தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கருத்தை முதன்முதலாக வலியுறுத்தியவரும் டாக்டர் நாயுடு அவர்களே! (17.9.1956).