முனைவர் வா.நேரு
“பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து” என்றார் தந்தை பெரியார். இந்தப் பூமி என்பது அனைவருக்கு-மான பொதுச்சொத்து. இந்த உலகில் வாழும் 790 கோடி மனிதர்களுக்கு மட்டும் சொந்த-மானது அல்ல இந்தப் பூமி, ஒரு செல் உயிரில் தொடங்கி பல ஆயிரம் கோடிக்கணக்கில் பரிணாம வளர்ச்சியால் உருவாகி இருக்கும் பல்லுயிர்களுக்கும் சொந்தமானது இந்தப் பூமி. ஆனால், மனிதர்களின் பேராசையால், ஒழுக்கமின்மையால், பக்தி என்னும் பெயரில் கடைப்பிடிக்கப்படும் காட்டுமிராண்டித்தன-மான நடைமுறைகளால் இந்தப் பூமி விரைவில் அழிந்துவிடுமோ என்னும் அச்சம் ஏற்பட்டிருக்-கின்றது.
1974-ஆம் ஆண்டு முதல் ஜூன்- 5ஆம் தேதி என்பது சுற்றுச்சூழல் தினமாக அய்க்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் அப்படிக் கடைப்பிடிக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருப்பொருள் அடிப்படையில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் கருப்பொருள் ‘ஒரே ஒரு பூமிதான்’ (Only one Earth) என்பதாகும்.
நாம் உயிரோடு வாழ்வதற்கு ஓர் உடல் இருக்கிறது. அப்படித்தான் இந்த உலகில் இருக்கும் உயிர்கள் எல்லாம் வாழ்வதற்கு இந்தப் பூமி இருக்கிறது. நாம் வாழ்வதற்கு என இருக்கும் வீட்டிற்கு ஆபத்து என்றால் நாம் அலறுகிறோம், பதறுகிறோம், பாதுகாக்கத் துடிக்கிறோம்.
அப்படித்தான் கோடிக்கணக்கான நட்சத்திரக் குடும்பங்கள் இருந்தாலும், அதில் கோடிக்கணக்கான கிரகங்கள் இருந்தாலும், சூரியக் குடும்பத்தில் நிறையக் கோள்கள், துணைக்கோள்கள் இருந்தாலும் நாம் (மனிதர்கள்) வாழ்வதற்கான ஒரே இடம் நாம் வாழும் இந்தப் பூமிதான். மனிதர்கள் மட்டுமன்றி, கோடிக்கணக்கான விலங்குகளும், தாவரங்களும் என பல்லுயிர்களும் வாழும் இந்தப் பூமியைக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
உலகளவில் சுற்றுச்சூழலை மாசுபடுத்து-கிறவர்கள் பெரும்முதலாளிகள், பெரும்-பணக்காரர்-கள்-தாம் என்று ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. “மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள மேட்டுக்குடியினர் இந்த உலகை மாசுபடுத்தும் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்” என்கிறார் ஆக்ஸ்ஃபாமை சேர்ந்த நஃப்டோகே டாபி. “பணக்காரர்களின் மிதமிஞ்சிய உமிழ்வுகள்தாம் உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகளைத் தூண்டி, புவி வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்கான இலக்குகளைப் பாதிக்கின்றன” என்கிறார் அவர். உலகின் வசதியான 1 சதவிகிதம் பேர் வெளியிடும் கார்பன் அளவு, 50 சதவிகிதம் உள்ள ஏழைகள் வெளியிடும் கார்பன் அளவை விட 30 மடங்கு அதிகமாக உள்ளது என ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. பணக்காரர்கள் வெளிப்படுத்தும் கார்பன் அளவு இந்தப் பூமியை அழிக்கும் அளவிற்கு இருக்கிறது. அய்ரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனமான ஸ்டாக்ஹோம் என்விரோன்மென்ட் இன்ஸ்டிடியூட் அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவு பல உண்மைகளைக் குறிப்பிடுகிறது.
“பல வீடுகள், தனி ஜெட் விமானங்கள், சொகுசு யாக்ட் கப்பல்கள் வைத்துள்ள பெரும் பணக்காரர்கள் இந்த சராசரி அளவைவிட பல மடங்கு அதிகமாக கார்பனை உமிழ்கிறார்கள். சில பிரபலங்கள் மேற்கொண்ட விமானப் பயணங்களை அவர்களது சமூக ஊடகங்கள் மூலம் பரிசீலித்த ஓர் அண்மைக்காலத்திய ஆய்வு அவர்கள் ஆண்டுக்கு 1000 டன்னுக்கு மேல் கார்பனை வெளியிடுவதாகக் கூறுகிறது. அந்த 1 சதவிகிதம் பணக்காரர்கள் என்பவர்கள் பில்லியனர்கள் மட்டுமல்ல, மில்லியனர்கள்கூட அந்தப் பட்டியலில்தான் வருகிறார்கள். ஆண்டுக்கு 1,72,000 டாலருக்கு மேல் சம்பாதிக்கிற எவரும் அந்தப் பட்டியலில்தான் வருவார்கள். ஆண்டுக்கு 55 ஆயிரம் டாலர்களுக்கு மேல் சம்பாதிக்கும் உலகின் 10 சதவிகிதப் பணக்காரர்கள் பட்டியலையும் இந்த ஆராய்ச்சி பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் அவர்களுக்கு உரிய பங்கைவிட 9 மடங்கு அதிகமாக கார்பனை உமிழ்கிறார்கள்” என்று அந்த ஆய்வு விரிவாக, இந்தப் பூமியையே அழிக்கக்கூடிய வேலையை வசதி வாய்ப்புகள் என்னும் பெயரில் பணக்காரர்கள் செய்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது.
பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் சுற்றுச்-சூழலை மாசுபடுத்துவதில் முன்னனியில் நிற்கின்றனர். மூட நம்பிக்கைகளை மக்களின் மனதிலே புகுத்துவதற்கு நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். பார்ப்பனப் பண்டிகைகளான _ தீபாவளி போன்ற பண்டிகைகள் ஏற்படுத்தும் சுற்றுச்-சூழல் மாசு என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்தியாவில் காற்று மாசுவைக் கட்டுப்-படுத்துவது என்பது மிகப்பெரிய சவால். “2019ஆம் ஆண்டில், காற்று மாசுபாட்டால் இந்தியாவில் 16.7 லட்சம் உயிர்கள் பலியாயின. இது மட்டுமல்லாமல், காற்று மாசுபாட்டால், நாடு ரூபாய் 2,60,000 கோடிக்கு மேல் இழப்பையும் சந்தித்துள்ளது” என்னும் தகவலை ஒன்றிய அரசின் அமைப்பான அய்.சி.எம்.ஆர். தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. கொரோனா தொற்று என்னும் பேரிடர் நிகழ்வதற்கு முன்னமே நிகழ்ந்த நிகழ்வு இது.
அரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி, பிகார் போன்ற மாநிலங்களில் வாழும் மக்கள் மழைக்காலம் நீங்கலாக மற்ற காலங்களில் மாசுபாட்டை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மாசுபாட்டின் அளவைக் குறிக்கும் பி.எம்.குறியீடு 50-க்குள் இருக்க வேண்டும். ஆனால் புதுடெல்லியில் எப்போதும் 300க்கு மேல் இருக்கிறது. இதே பி.எம்.25 குறியீடு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 17, நியூயார்க்கில் 38, பெர்லினில் 20, பெய்ஜிங்கில் 59 ஆகும்.
இந்தியாவில் காற்று மாசுபாட்டின் ஆபத்து எவ்வளவு தீவிரமானது என்பதை உணர ஒரு புள்ளி விவரத்தைக் கூறலாம். 2019ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையானது சாலை விபத்துகள், தற்கொலை மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றால் ஏற்பட்ட இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை விடவும் அதிகம்.
நீங்கள் சிகரெட், பீடி போன்ற புகைப்பழக்கம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், நீங்கள் டெல்லியில் வசித்தால் புகைப்பழக்கம் உள்ளவரை விட மோசமாக உங்கள் நுரையீரல் பாதிக்கப்படும். எப்போதும் டெல்லியில் பி.எம்.25 குறியீடு 300க்கு மேல் இருக்கிறது. அப்படி என்றால் டெல்லியில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் 15 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். டெல்லியில் ஒரு குழந்தை பிறந்தால், பிறந்த நாளிலிருந்து 15 சிகரெட் குடிக்கும் அளவிற்கான பாதிப்பைத் தன் நுரையீரலுக்குத் தருகிறது. 30 வயதில் நுரையீரல் புற்று நோய் போன்ற பாதிப்பு-களுக்கு உள்ளாகின்றது என்று குறிப்பிடு-கின்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் 180 நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 177வது இடம் கிடைத்திருக்கிறது. திருவிழாக்கள், கும்பமேளா போன்று இந்தியாவில் நடைபெறும் விழாக்களில் பக்தி என்னும் பெயரில் பல இலட்சம் பேர் ஒரே இடத்தில் கூடுகின்றனர். பிளாஸ்டிக் போன்ற பொருள்களைப் பயன்-படுத்துவதோடு நீரையும் பாழ்படுத்தி சுற்றுச்சூழலைக் கெடுக்கின்றனர். இந்தியாவில் நீர் மாசுபாட்டுக்கு மிகப்பெரிய காரணம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆகும். கழிவு நீரும் மலமும் இணைந்து பல ஆறுகளைப் பாழ்ப்படுத்தி, கழிவு நீரைச்சுமந்து செல்லும் குழாய்கள் போல ஆறுகளை மாற்றுகின்றது. புனித நதி என்று சொல்லப்படும் கங்கை நதி மோசமான கழிவுகளால் மாசு அடைந்திருக்-கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. பண்டிகை என்னும் பெயரில் இந்தியா முழுவதும் பட்டாசு வெடிகளை வெடித்து காற்றில் கார்பன் அளவை அதிகரிக்கச் செய்கின்றனர். பக்தி சார்ந்த செயல்பாடுகள் சுற்றுச்சூழலைக் கெடுத்து, காற்றில், நீரில் மாசு ஏற்படக் காரணமாகின்றன.
சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு என்பது, இவற்றைத் தவிர்க்கும்படியாகவும் இருக்க வேண்டும். இந்தியாவில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிப்பேசும் பலர், கவனமாக இந்தப் பண்டிகைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் கெடுதி பற்றி மக்களிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்துவிடுகின்றனர்.
பகுத்தறிவாளர்களும், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களும் இக்கேடுகள் பற்றி விளக்கி, பரப்புரை செய்ய வேண்டும். இந்தியாவின் பக்தி என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்தப் பூமிக்கே கேடு விளைவித்து அழிக்கக்கூடியது என்பதை மக்களிடத்தில் பரப்புவோம்.ஸீ