கேள்வி : இனி பாடல்கள் எழுத மாட்டேன் என்று ஆங்கிலேயரிடம் கையெழுத்துப் போட்டுவிட்டு புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வந்து வாழ்வைத் தொடங்கினாராமே பாரதியார், இது உண்மையா? – (புகழ்ச்செல்வி, நவ. 2011 இதழ்) – தி.இரமணன், காஞ்சி
பதில் : எனக்கு இது சரியான தகவலாகத் தெரியவில்லை. ஆய்வு செய்து பார்த்தே பதில் அளிக்க இயலும்.
கேள்வி : நடப்பு நிதி ஆண்டில் உணவுப் பொருள் அறுவடையின் உற்பத்தி அதிகரித்ததால் 12%ஆக இருந்த உணவுப் பணவீக்கம் தற்போது 6.6%ஆக குறைந்துள்ளதாக வர்த்தக செய்தித் தகவல் தெரிவிக்கிறதே? அப்படியானால்… உற்பத்தி அதிகரிக்கும்போது பணவீக்கம் இயல்பாகக் குறைவது உண்மையாக இருக்கும்போது வருங்காலங்களில் எல்லாத் துறைகளின் உற்பத்தியை அதிகப்படுத்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்தி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துமா? தங்களின் கருத்து என்ன?
த.சுரேஷ், நாகர்கோவில்
பதில் : பணவீக்கத்திற்குப் (Inflation) பல காரணங்கள் உண்டு. அதில் இதுவும் ஒன்று. மற்றபடி குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்குஅர்ரம் என்று ஆகாதே!
கேள்வி : முல்லைப் பெரியாறு பிரச்சினையில், தமிழக அய்யப்ப பக்தர்கள் மாலை கழற்றிப் போராட்டம் நடத்தினால் என்ன? – கு.ப.விசுனுகுமாரன், சென்னை
பதில் : மாலையைக் கழற்றுவதைவிட மூளைக்கு வேலை கொடுத்தால் எல்லாம் மிச்சமாகுமே!
கேள்வி : திராவிட இயக்கத்தினர்கள் விபூதிப் பள்ளத்தாக்கில் வீழ்ந்துவிட்டனர் என்று வைரமுத்து ஒரு விழாவில் பேசி இருந்தார். அதைப்பற்றிய தங்கள் கருத்து? – க. சங்கத்தமிழன், செங்கை
பதில் : திராவிட இயக்கத்தினர் என்று கவிப்பேரரசு யாரைச் சொல்லுகிறார் என்பது புரியவில்லை. நாம மேட்டிலும் ஏறி ஏறி, அண்ணா நாமம், எம்.ஜி.ஆர். நாமம் என்று பேசி குதியாட்டமும் போடுகின்றனர். அதுவும் இணைந்ததா இது? புரியவில்லை. கவிதைக்குப் பொய்யழகு என்று பாடியவர் நம் கவிஞர் என்பதால்தான் இந்தக் குழப்பம்!
கேள்வி : உ.பி.சட்டமன்றத் தேர்தலில் ராமனை முன்னிறுத்துவதா? வாஜ்பாயை முன்னிறுத்துவதா? என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாமே பா.ஜ.க.? இருவரும் கை கொடுப்பார்களா கரையேற? ஜீவிதா ரமேஷ், சே.பேட்டை
யாரை முன்னிறுத்தினாலும், நிச்சயமாக் கப்பட்ட இடம் மூன்றாவதுதான் என்பது மட்டும் உறுதி. சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு சட்டவிரோதம் என பி.ஜே.பி கூறுகிறதே? – க.அறிவுமதி, செஞ்சி
பதில் : நியாய விரோதம் இல்லை என்பதுதான் அதன் பொருள் போலும்! மாற்றுத் திறனாளிகள் – விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடுகூட உள்ஒதுக்கீடுதானே!
கேள்வி : 50 ஆண்டுகள் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தாங்கள் போற்றுதலுக்குரிய தலைவர்கள் யார் யார்? – கோ. ரமேஷ், சே.பேட்டை
பதில் : பச்சைத் தமிழர் காமராசர் தொடங்கி, நேரு, அண்ணா, ஜீவா, நாவலர், பேராசிரியர், கலைஞர், மகளிரில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், இந்திராகாந்தி இப்படிப் பலர் உண்டே!
கேள்வி : ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவின்போது, மகிழ்ச்சியின் ஒட்டுமொத்தக் குரலாக புத்தாண்டைக் கொண்டாடும் தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவதில்லையே, ஏன்? – தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி
பதில் : அந்தக் கூத்து வேறு எதற்கு – அந்தக் கலாச்சாரம் வேறு – நம்முடையது மாறுபட்டது! மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கலகலப்புகள் ஓர் தனி ரகம் அல்லவா?
கேள்வி : ஆணவம், கன்மம், மாயை மும்மலங்களாம்; காமம், வெகுளி, மயக்கம் முக்குற்றங்களாமே, இவை மனித வாழ்வில் குற்றங்களா? – ல. புத்ததாசன், சென்னை
பதில் : திண்ணை வேதாந்திகள் திசை மாற்றிடப் பேசும் தில்லுமுல்லுகள் இவை! வெகுளி – கோபம் – பாரதியாரேகூட ரௌத்திரம் பழகு என்றாரே! உளறல்களை உதறிவிடுங்கள்.
கேள்வி : மத்திய அரசு கொண்டுவந்த லோக்பால் சட்ட முன்வரைவை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா அல்லது வேறு ஏதேனும் முக்கியத் திருத்தங்கள் செய்ய வேண்டுமா? – த. அகில், திண்டுக்கல்
பதில் : மேலும் அதைப் பலப்படுத்தி, சில முக்கியத் திருத்தங்களை உள்ளடக்கி நிறைவேற்றுவது வரவேற்கத்தக்கது.