மகப்பேறு
(PRAGNANCY)
மரு.இரா.கவுதமன்
ஆண் இனப்பெருக்க இயங்கியல்:
பெண் இனப்பெருக்க உறுப்புகள் பல நிலை மாற்றங்களும் வளர்ச்சியும் அடைவது போலவே, ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் வளர்ச்சி அடைகின்றன. உடலுக்கு வெளியே இடுப்புக்குக் கீழ், உடலின் தொடைகளுக்கு இடையே விதைப்பையில் இருக்கும், இரண்டு விதைகளிலும், ஆண் பருவமடைந்ததும், ஆண்ட்ரஜன், டெஸ்டோஸ்டீரான் ஊக்கி நீர் சுரப்பால், விந்து உற்பத்தி தொடங்குகிறது. சரியாக முதிர்ச்சியடையாத ஆண் அணுக்கள் விதைகளில் உற்பத்தியாகி, விந்தணு முதிர்ச்சிப் பையில் (Epidedymis) வந்து சேரும். அங்கு ஆண் அணுக்கள் முழு வளர்ச்சியடையும். ஆண் அணுக்கள், மிதந்து செல்வதற்குத் தேவையான நீர்மத்தை கூப்பர் சுரப்பிகள் உற்பத்தி செய்து ஆண் அணுக்களின் இயக்கத்திற்கு உதவுகின்றன.
கூப்பர் சுரப்பிகள், சிறுநீர்க் குழாய் மொட்டுச் சுரப்பிகள் போன்ற சுரப்பிகளில் சுரக்கும் நீர்மங்கள் ஆண் அணுக்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன. அதனால் ஆண் அணுக்கள் முழுமையான செயல்பாட்டோடு இயங்கவும், வேகமாக நகரவும் வாய்ப்பு ஏற்படும். வித்துக் குழாய்கள் (Vasdeference), விந்தணு முதிர்ச்சிப் பையில் (Epididymis) துவங்கும் நீண்ட குழாய்கள் ஆகும். தசைகளால் ஆன இக்குழாய்கள் இடுப்புக்குள் சென்று, சிறுநீர்க் குழாயோடு (Urethra) இணைகிறது. சிறுநீர்ப்பை (Bladder)க்கு பின்புறம் இணையும், விந்துக் குழாய்கள் ஆண் அணுக்களை, சிறுநீர்க் குழாய் வழியே வெளிச் செலுத்துகிறது.
பெண் இனப்பெருக்க இயங்கியலில் போல, ஆண் இனப்பெருக்க இயங்கியல் கூட ஊக்கி நீர் சுரப்புகளால்தான் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளையின் அடிப்புறம் இருக்கும் பிட்யூட்ரி சுரப்பி (Pitutary Gland) சுரக்கும், நுண்ணறை ஊக்கி நீர்(Follicular stimulating Hormone – FSH) ஆண் விந்தணுக்கள் உற்பத்திக்கு (Spermatogenesis) அடிப்படைக் காரணியாகும். கரு ஊக்கி நீர்(Leutinising Hormone – LH), டெஸ்டோஸ்டீரான் உற்பத்திக்கு உதவுகின்றன. டெஸ்டோஸ்டீரான்தான் ஆண்களின் வாலிப வயது மாற்றத்திற்குக் காரணமான ஊக்கி நீராகும்.
அடிப்படையில் இனப்பெருக்கத்திற்கு முழுமையான காரணிகளாக அமைவது ஆண், பெண் இரு பாலருக்கும், நுண்ணறை ஊக்கி நீர், கரு ஊக்கி நீர் (LH), ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான், ஆண்ட்ரஜன், டெஸ்டோஸ்டீரான் ஆகியவையே ஆகும்.
மாதவிலக்கு (Menopause) பெண்களுக்கு நிற்பதுபோல், ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி நிற்பதில்லை. ஊக்கி நீர் ஆண்களுக்குச் சுரந்து கொண்டே இருப்பதால் 80 வயது வரைகூட விந்தணு உற்பத்தியாகும். சில ஆண்களுக்கு, விரைகளில் நுண்மையான மாற்றங்கள் 45 முதல் 50 வயதில் நிகழலாம். இவை 70 வயது வரை கூட தொடரும். ஆனால், இம்மாற்றங்கள் நிகழ்ந்தாலும் விந்தணு உற்பத்தி நிற்காது. ஆனால், நீரிழிவு நோய் (Diabetes Malitus), களைப்பு, உடல் சோர்வு, மனத்தளர்ச்சி, பாலியல் உறவியல் ஆர்வமின்மை (Fatigue) (Weakness) (Depression) (Lack of interest) மருந்துகளால் ஏற்படும் ஆண்மை இழப்பு (Impotence), விறைப்புத் தன்மைக் குறைபாடு (Erecticle Disfunction) போன்றவை ஆண்மைக் குறைபாட்டை உண்டாக்கும்.
(தொடரும்…)