இந்தியாவின் முதல் சுரங்கப் பொறியாளர்
சந்திராணி _ மகாராட்டிராவின் சந்திராப்பூரில் பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தை சுரங்கப் பொறியாளராக இருந்தவர். தானும் தந்தையின் வழியிலேயே சுரங்கப் பணியை மேற்கொள்ள வேண்டும் என இளம் வயதிலேயே ஆர்வம் வந்திருக்கிறது. அவர் கடந்து வந்த பாதை பற்றிக் கூறுகையில்,
“1990கள் சுரங்கப் படிப்பு பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த காலம். அப்போதே அதில் பட்டயப் படிப்பை முடித்தேன்.
அதன்பின், நாக்பூரில் இருக்கும் ராம்தியோபாபா கமலா நேரு பொறியியற் கல்லூரியிலும், நாக்பூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறேன். என் கணவரும் ஒரு சுரங்கப் பொறியாளர்தான். அவரது ஆதரவும் எனக்குப் பக்கபலமாக அமைந்திருக்கிறது.
பல ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். பல்வேறு தொழிற் சாலைகளின் திட்டங்களுக்காகப் பணியாற்றியுள்ளேன். அப்போது எழும் சிக்கல்களைத் தீர்க்கும் வழிகளைக் கண்டுபிடித்து அதில் ஈடுபட்டேன்.
ஒரு முறை சுரங்கப் பகுதி ஒன்றில் அதன் உறுதித் தன்மை குன்றிப் போய்விட்டது. நிருவாகத்தின் ஒரே பிரதிநிதி நான்தான். அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்தாக வேண்டியிருந்தது. என் மேலதிகாரிகளுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். பிரச்சினையின் ஒவ்வோர் அம்சத்தையும் அலசி ஆராய்ந்து மேலதிகாரிகள் திருப்தியடையும் வண்ணம் ஓர் அறிக்கையைத் தயாரித்து அளித்தேன். அது மிகவும் பாராட்டப்பட்டது.
என்னுடைய பிஹெச்டி ஆராய்ச்சியின்போது கிட்டத்தட்ட 300 நிலக்கரி மாதிரிகளை வைத்து ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. கடும் கோடையில், குளிர்சாதன வசதி இல்லாத ஆராய்ச்சிக் கூடத்தில், கீழ்நிலைப் பணியாளர்களின் ஒத்துழைப்பும் இன்றி, நானாகவே மாதிரிகளை வெட்டுவது, பாலிஷ் செய்வது போன்ற அனைத்தையும் செய்தேன். ஓராண்டுக் காலம் என் ஆய்வை மகிழ்ச்சியுடனேயே செய்தேன். புதுப்புது சவால்கள் வரும்போது துணிச்சலுடன் அவற்றை எதிர்கொள்வது என் வழக்கம்’’ என்கிறார் சந்திராணி.
மிக ஆழமான பகுதியில் ஒளிந்திருக்கும் தாதுக்களைக் குறைந்த பொருட்செலவில் வெளிக்கொணர வேண்டும் என்பதற்காகப் புதிய முறை அல்லது தொழில்நுட்பம் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும்.
வருங்காலத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டும் என்கிற ஆசை மனதில் இருக்கிறது. அதிகாரம் மிக்க பதவிகளுக்குப் பெண்கள் வரவேண்டும் என்பதே என் விருப்பம். அதை நோக்கிய பயணத்தில் முன்னேறி, என்னால் இயன்றவரை பெண்களுக்கு உதவுவேன்’’ என்கிறார்.ஸீ
தகவல் : சந்தோஷ்