பகுத்தறிவு : வாஸ்து சாஸ்திரம் அறிவியல் அடிப்படை கொண்டதா?

ஏப்ரல் 16-31,2022

ஒளிமதி

வாஸ்து, சாஸ்திரம் என்ற வார்த்தைகள் தமிழ் அல்ல என்பதால் இவை தமிழர்க்கு உரியன அல்ல என்பது எளிதில் விளங்கும். இவை சமஸ்கிருதச் சொற்கள். என்னே இந்த ஆரிய பார்ப்பனர்களின் புனைவு!

வழக்கம்போல தங்கள் கருத்துகளை மக்கள் மத்தியில் பதியச் செய்ய மக்களை ஏற்கச் செய்ய ஒரு புராணக் கதையை எழுதி மக்களிடம் பரப்புவதே அவர்களின் யுக்தி, தந்திரம் ஆகும். அப்படி வாஸ்துவுக்கும் ஒரு புராணக் கதையைப் புனைந்து மக்களிடம் பரப்பினர்.

வாஸ்து புருஷன்

வாஸ்து புருஷன் என்பவர் ககண்டி முனிவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர் என்கிறது புராணம்.

மானசாரா, மாயாமதா, ப்ரிகு, மேதை வராக மிகிரர் மற்றும் பல ரிஷிகளால் உருவாக்கி செழுமைப்படுத்தப்பட்டது வாஸ்து சாஸ்திரம் என்கின்றனர்.

வாஸ்து புருஷன், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஓர் அச்சுறுத்தலாக, ஒரு கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தார் என்கிறது புராணக்கதை! அதன் ஆபத்தை உணர்ந்து பிரம்மா உள்பட 81 தேவர்கள், அசுரர்கள் வாஸ்துவை அடக்கி, நிலத்தில் படுத்த நிலையில் அமுக்கிவிட்டார்களாம். அப்படி அமுக்கப்பட்ட வாஸ்து மூன்று நிலைகளில் பூமி முழுவதும் படர்ந்து படுத்திருக்கின்றாராம்! அந்த மூன்று நிலைகள் இவை:

1. ஸ்திரா நிலை

மலர்ந்த நேர்முக வாக்கில் வடகிழக்கு மூலையில் மனையில் தலைவைத்து தென்மேற்கு மூலையில் கால் சேர்த்து அமுக்கப்பட்டு வாஸ்து படுத்திருப்பது ஸ்திரா நிலை.

2. சாரா நிலை

அமுக்கப்பட்டுப் படுத்திருக்கிற நிலையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாஸ்து தலை, கால், பார்வைத்திசை மாற்றுவது சாரா நிலை.

3. தினா முறை

தலை, கால்களைத் தினசரி பகலில் 8இல்

1 முறை அதாவது 1:30 மணிக்கு ஒருமுறை திசை மாறிப்படுப்பது தினா முறை. இப்படி சாரா நிலையிலும், தினா முறையிலும், ஏன் வாஸ்து புருஷர் திசை மாறுகிறார்? எவரிடத்தும் விளக்கம் இல்லை. ஒருக்கால் ஒரே நேரத்தில் 81 தேவ அசுரர்கள் அமுக்குகின்றபோது, வாஸ்து அசைகின்றாரோ என்னவோ தெரியவில்லை. அடிக்கடி மாறும் சாரா நிலையையும், தினா நிலையையும் அனுசரித்து ஒரு நிலையான கட்டடத்தையோ _ வீட்டையோ, கட்ட முடியாது. கட்டிய பிறகு மாற்றி வைக்க முடியாது. நடைமுறைக்கு உகந்தது என்ற வகையில் வாஸ்துவின் ஸ்திரா நிலையே வழக்கில் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

வாஸ்து புருஷன் இருப்பு

வாஸ்து சாஸ்திரம் உருவான காலம், பூமி _ தட்டை என்று நம்பிய காலம். எனவே, வாஸ்து புருஷன் பூமி முழுவதும் படர்ந்து படுத்திருப்-பதாக நம்பினர். இன்று பூமி உருண்டை மட்டுமல்ல, 230 சாய்வான கோண அச்சில் தற்சுழற்சியால் சுழன்று வருகின்றது என்று அறிவியல் அறுதியிட்டுக் கூறுகின்றது. இது குழந்தைகளுக்கும் தெரியும்! வாஸ்து புருஷர் வடகிழக்கு மூலையில் தலைவைத்து தென்மேற்கு மூலையில் கால்குவித்து படர்ந்து படுத்திருக்கின்றார் என்பது கேலிக்குரியதாக இல்லையா?

உருண்டையான பூமியில் வடதுருவத்தில் வடகிழக்கு மூலையில் தலையும் கால்களும் ஒன்று சேர்கின்ற வகையில் வட்டவடிவில், வளைந்து படுத்திருக்கத்தான் முடியும். இந்த நிலையில் வடகிழக்கு மூலை _ ஜல மூலை என்று எதைத் தேடுவது? மேற்கு, கிழக்கு, தெற்கு ஆகிய மூன்று திசைகளிலும் கடல் சூழ்ந்த தீபகற்பம் தென்னிந்திய நிலப்பகுதி. தென்புலத்தில் உள்ள நமக்கு எது ஜல மூலை? மூன்றும்தானே? வடகிழக்கு மூலையில் ஜல மூலையைத் எப்படித் தேடுவது? என்ன அறிவுடைமை?

பூமி உருண்டையானது என்ற உண்மையை அறியாத காலத்தில், பூமி தட்டை என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களால் உருவாக்கப்-பட்ட வாஸ்து சாஸ்திரம், எப்படி அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இருக்க முடியும்?

வாஸ்து பூஜை

வாஸ்து சாஸ்திரத்தில் மிக முக்கியமானது _ பூமி பூஜை _ வாஸ்து பூஜை! வாஸ்து மகாபுருஷர் கண் விழிக்கும் நேரம்தான் பூமி பூஜைக்கு உரிய நேரம், உத்தமமான நேரம் என்கின்றனர். அந்த உத்தமமான நேரத்தில் பூமி பூஜை செய்தால்தான் வீட்டில் செல்வமும் வளமும் கொழிக்கும், வாழ்வு சிறக்கும் என்கின்றனர்.

வாஸ்து கண்விழித்தல்

வாஸ்து கண்விழிக்கும் நேரம் எது? மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வாஸ்து கண் விழிப்பாராம்! அதுவும் மூன்றே முக்கால் நாழிகை (1:30 மணி நேரம்) மட்டும்தான் கண்விழிப்பாராம். அப்போது அந்த மகாபுருஷர் அய்ந்து மகத்தான பணிகள் செய்வாராம்!

1. பல் துலக்குதல்-16 நிமிடம்-போதிய பலன் தரும்.

2. குளித்தல் – 16 நிமிடம் – நற்பயன் விளையும்.

3. பூஜை செய்தல் – 16 நிமிடம் – உத்தம பலன் தரும்.

4. உணவு உட்கொள்ளல் – 16 நிமிடம் -மிக உத்தமமான நேரம்

5. தாம்பூலம் தரித்தல்-16 நிமிடம் – மிகுந்த யோக நேரம்

இந்த மகத்தான அய்ந்து பணிகளையும் முடித்து விட்டு மீண்டும் வாஸ்து தூங்கச் சென்று விடுவார். அதற்குள் பூமி பூஜை முடிக்க வேண்டுமாம்! அதுவும் கடைசி 16+16=32 நிமிடங்கள் மிக மிக உத்தமமான நேரம் அதற்குள் முடிக்க வேண்டுமாம்! மாதம் 30 நாள்களில் அதாவது 24 ஜ் 30 = 720 மணி நேரத்தில், 1:30 (ஒன்றரை) எமணி நேரம் மட்டுமே கண் விழித்திருக்கின்ற, மாதத்தில் மீதி 718.5 மணி நேரமும் தூங்கிக் கழிக்கின்ற ஒரு உலக மகாச் சோம்பேறி கண் விழிக்கின்ற 1:30 மணி நேரம்தான் உத்தமமான நேரமாம். அதுவும் கடைசி 32 நிமிடம்தான் மிக மிக உத்தமமான நேரம் என்பது எவ்வளவு வேதனையான வேடிக்கை? இப்படிப்பட்ட சோம்பேறியை நினைத்து, வழிபட்டு, பூமி பூஜை போட்டால், பூமிதான் விளங்குமா? வீடும் நாடும்தாம் விளங்குமா?

தேவர்களால் பூமியில் அழுத்தப்பட்டு, படுத்த நிலையில் புதைந்துபோனவன் வாஸ்து என்று புராணம் சொல்லியுள்ளது. அப்படி-யிருக்க அவர் எப்படி எழுந்திருந்து பல் துலக்குதல், குளித்தல், பூஜை செய்தல், உணவு உட்கொள்ளல், வெற்றிலை பாக்கு போடுதல் போன்றவற்றை எப்படிச் செய்ய முடியும்? ஆக புராணம் என்பதும், வாஸ்து என்பதும் முரண்பட்டுக் கூறப்பட்ட பொய் மூட்டைகள் என்பது புரிகிறதல்லவா?

வாஸ்து பூஜைக்கு உரிய மாதங்கள்

வைகாசி (ஏப்ரல்_மே) : நல்ல பலன்

ஆவணி (ஜூலை_ஆகஸ்ட்): மிகவும் நல்ல பலன்

கார்த்திகை (செப்டம்பர்_அக்டோபர்): பெரும் செல்வம்.

மாசி (ஜனவரி_பிப்ரவரி): குடும்பத்துக்கு நன்மை

பங்குனி (பிப்ரவரி_மார்ச்): எல்லா நலன்களும் தரும்.

இவை அய்ந்தும் எல்லா நலன்களும் தரும் மாதங்கள். மீதமுள்ள 7 மாதங்கள் பாதகமான மாதங்கள்:

1.            சித்திரை (மார்ச்சு _ ஏப்ரல்) : தன நஷ்டம், பயம் ஏற்படும்.

2.            ஆனி (மே_ஜூன்): மரண பயம்.

3.            ஆடி (ஜூன் _ ஜூலை): வாகன நஷ்டம், பண நஷ்டம்.

4.            புரட்டாசி (ஆகஸ்ட் _ செப்டம்பர்) : நோய் நொடிகள், செலவுகள் அதிகம்.

5.            அய்ப்பசி (செப்டம்பர்_அக்டோபர்): குடும்பத்தில் சண்டை.

6.            மார்கழி (நவம்பர்_டிசம்பர்): பயம், தோல்வி மிகும்.

7.            தை (டிசம்பர்_ஜனவரி): அக்னி பயம், கவலை மிகும்.

வாஸ்து வளம் நலம் தந்ததாய் வரலாறு உண்டா?

வாஸ்து சாஸ்திரம் உருவான காலத்திலாவது _ இதிகாச காலங்களிலாவது வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றி நடந்தவர்களுக்கு வளமும், நலமும் வந்ததாய் வரலாறு உண்டா?

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *