நூல்: ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
ஆசிரியர்: வெற்றிச்செல்வன் – உதயகுமார்
வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம், சென்னை-24
போன்: 044-24726408
ஜாதி ஒழிப்பே தந்தை பெரியாரின் முதன்மையான நோக்கம். அதற்குச் சர்வரோக நிவாரணியாக எந்த ஒன்றையும் பெரியார் முன்வைக்கவில்லை. அப்படி ஒரு தீர்வும் இருக்க இயலாது என்பதே யதார்த்தம். ஜாதி ஒழிப்பு எல்லாத் தளங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டியது. பலமுனைத் தாக்குதல் ஒன்றே ஜாதிக் கட்டமைப்பைத் தகர்க்குமே தவிர, ஒற்றை ஆயுதம் ஜாதியை ஒழித்து விடும் என்று சொல்வது, ஜாதியின் வலிமையைப் புரிந்து கொள்ளாமையையே காட்டுகிறது.
.ஜாதி ஒழிப்பிற்குப் பெரியார் பல்வேறு தீர்வுகளை முன்வைத்தார். அவை பின்வருமாறு:
1. சட்டப்படியான ஜாதி ஒழிப்பு
2. கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனிய ஒழிப்பு
3. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
4. ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணங்கள்
5. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை
சட்டப்படியான ஜாதி ஒழிப்பு
“சகோதரர்களே! இந்தக் கொடுமையை ஒப்புக் கொள்ளாதவர்கள், இதை ஒழிக்க வேண்டுமென்று சொல்லாதவர்கள் யார்? இதற்காக எத்தனை காலமாக முயற்சி செய்யப்பட்டு வருகின்றது? ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு கூடாது, அதற்கு ஆதாரம் இல்லை என்று சொல்லாத பெரியார் யார்? ஆயினும் ஏதாவது பலன் ஏற்பட்டிருக்கின்றதா? ஒரு சிறிதும் காணப்படவில்லையே! இதற்கு ஏதாவது ஒரு வழி செய்துதானே ஆக வேண்டும். இதற்குச் சரியான வழி, அறிவினாலோ, ஞானத்தினாலோ, போதனையினாலோ ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இது பெரிதும் அரசாங்கச் சட்டத்திலும், அரசியல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தினாலும்தான் இதை (அதாவது இந்த உயர்வு தாழ்வு வித்தியாசத்தை) ஒழிக்க முடியும்’’ (‘குடிஅரசு’, 2.12.1928).
“அநேகமாக மற்ற நாட்டின் சமத்து-வத்திற்கும் சுயமரியாதைக்கும் தடை வேலைக்-காரர்களாயிருந்து தீர வேண்டியவர்கள் பெரிதும் மதத்தின் பேரிலேயே தங்கள் தடை வேலைகளைச் செய்து வந்ததாகக் காணலாம். ஆனால், நமது நாட்டில் சமத்துவத்தையும் சுயமரியாதையையும் எதிர்த்து நிற்பவர்கள் பெரிதும் அரசியலின் பேரால் தடைக்கல்லாய் நிற்கிறார்கள் மதக்காரர்களைவிட அரசியல்காரர்-கள் என்பவர்களே தொல்லை கொடுக்கின்றார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், நமது நாடு இப்போது மதத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதைவிட அரசாங்கச் சட்டத்திற்கே அதிகமாய்க் கட்டுப்பட்டிருப்பதாகும்.
எனவே, எந்த சமத்துவமும் சுயமரியாதையும் இப்போது பெரிதும் அரசாங்கச் சட்டத்தைக் கொண்டே செய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது. அதனால், நாம் அரசாங்கச் சட்டமுறையில் சமத்துவம் கேட்கும்போது எதிரியின் அரசியலின் மூலமாகத்தான் எதிர்த்தாக வேண்டும். அதை அரசியலின் பேரால் வாழ்பவர்கள்தான் எதிர்த்தாக வேண்டும். அன்றியும் மதக்காரர்களின் எதிர்ப்புக்கு நமது நாட்டில் மதிப்பும் குறைந்து விட்டதால் அரசியலின் பேரால் தடை வேலை செய்பவர்களுக்கு மதக்காரர்களின் பின்புலமும் தாராளமாய் இருக்கும் என்பதில் சந்தேகமிருக்காது’’ (‘குடிஅரசு’, 16.12.1928)
இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்
இன்று இந்திய நாட்டின் ஆட்சி முறைக்கு அடிப்படையான அரசியல் சட்டத்தை வகுத்துக் கொடுத்தவர்களும் பார்ப்பனர்களே. இந்த அரசியல் சட்டத்தில் தீண்டாமையை விலக்கிவிட்டு ஜாதி வேற்றுமைக்குப் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர். அரசியல் சட்டம் 17ஆவது பிரிவு “Untouchability is abolished” என்று கூறுகிறது. ஆனால், தீண்டாமைக்குக் காரணமான _ “Caste is abolished” என்று கூறவில்லை.
இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் _ உட்பிரிவுகள் 13(2); 25(1); 26; 29(1),(2); 368 மதத்தை, ஜாதியைப் பாதுகாக்கின்ற வகையில் உள்ளன. ஆகவே, இந்த அரசியல் சட்டத்தை மாற்றி எழுதியாக வேண்டும் என்றும், ஜாதி, மதங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற பாதுகாப்பைப் பொதுவான அரசியல் சட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பெரியார் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அரசு அதைப் பொருட்படுத்தாத நிலையில், ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியின் முதல் கட்டப் போராட்டமாக ‘அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்’ தமிழ்நாடெங்கும் 1957 நவம்பர் 26ஆம் தேதி நடந்தேறியது. அப்போராட்டம் நடை-பெறுவதற்கு முன்பே தந்தை பெரியார் அவர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனிய ஒழிப்பு
பல ஆதாரங்களைக் கொண்டும், நடைமுறை அனுபவத்தைக் கொண்டும் கவனித்தால், ஆரிய (இந்து) மதம் உள்ளவரையில், கடைசி ஆரியன் தமிழ்நாட்டில் உள்ளவரையில், ஜாதியும் ஒழியாது; தீண்டாமையும் ஒழியாது. இதை நம் எவருடனும் பந்தயம் கட்டிக் கூற முடியும். (‘விடுதலை’, தலையங்கம், 29.12.1956)
தாழ்த்தப்பட்டோர் முன்னேற வழி
மக்களில் பெரும்பான்மையோரை ஜாதிக் கொடுமைகளுக்கும் இழிவுக்கும் உட்படுத்தி வைக்க மதப் புரட்டுகளும், புராணப் புரட்டுகளும்தான் ஆதாரமாக இருக்கின்றன. மக்கள் சுதந்திரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாயிருக்கும் இந்த இந்து மதத்தையும் புராணங்களையும் அழிக்காமல் பின் என்ன செய்வது என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். (‘குடிஅரசு’ _ 6.1.1945)
இழிவை நீக்க மதத்தை உடைத்து எறியுங்கள்!
நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ள இந்து மதத்தால்தான் நீங்கள் இகழப்படுகிறீர்கள். உண்மையாகவே எங்களைப் பிடித்துள்ள இழிவு நீங்க வேண்டுமானால் அம்மதத்தை இழுத்து எறியுங்கள்… சமுதாயத்தின் பெயராலே, தொழிலின் பெயராலே உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழிவுகளை நீக்க மதத்தை உடைத்து எறியுங்கள். (‘குடிஅரசு’ _ 27.5.1944)
இழிவை ஒழிக்க வழி
நமது சமூகத்துக்கு நீங்காத மலேரியாக் காய்ச்சல் கண்டிருக்கிறது. இதற்குக் காரணம் கொசு என்று அறிந்தவுடன், கொசுவலை போட்டுக் கொண்டால் மட்டும் போதாது. கொசு உண்டாவதற்கு மூலகாரணமான சாக்கடைகள், அழுக்குக் குட்டைகள், குப்பை கூளங்கள் ஆகியவற்றை அடியோடு ஒழித்துச் சுத்தமாக்கினால்தான் கொசுக்கள் ஒழியும். மலேரியாக் காய்ச்சலும் நீங்கும். அந்த அசுத்த அழுக்குக் குட்டைதான் புராணம், கீதை, புரோகிதம், கோவில்களாய் இருக்கின்றன. அங்கு இருந்துதான் இந்தக் கொசு பிறக்கிறது. அவைகளை அகற்றுங்கள். (‘குடிஅரசு’ _ 23.12.1944)
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்
நம்முடைய நாட்டிலுள்ள உயர்வு, தாழ்வு முதலிய வித்தியாசங்களைப் போக்க நம்மவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும், அதற்காகப் பட்ட கஷ்டங்களும் இந்நாட்டில் உள்ள யாவரும் அறிந்ததேயாகும். அவர்கள் வேறு எந்த விதத்திலும் முயற்சி செய்து முடியாததனாலேயேதான் நம் நாட்டு முதிர்ந்த அனுபவசாலிகளும், சுயநலமற்ற பெரியார்-களுமாகிய பலர் சேர்ந்து சமத்துவத்தையும், சமதர்மத்தையுமே முக்கியக் கொள்கைகளாகக் கருதி, அதற்காக நமது நாட்டு அரசியல் தொகுதிகளில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பெறுவதே முக்கிய நோக்கமாகக் கொண்டு, பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயருடன் ஒரு ஸ்தாபனம் கண்டு, அதற்காகவே பலர் தங்கள் உயிரையும் கொடுத்து வேலைசெய்து வந்தார்கள் என்பதும், பலர் உயிர்கொடுக்க இருக்கிறார்கள் என்பதும் வெள்ளிடைமலை….
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்பவர்களில் யாரும் இதுவரை அது கூடாது என்பதற்கு சரியான காரணமோ அல்லது எல்லா மக்களுக்கும் சமத்துவமும் சமசந்தர்ப்பமும் கிடைக்கும்படியான வேறு மார்க்கமோ எடுத்துச் சொன்னவர் யாரும் இல்லை. (‘குடிஅரசு’ _ தலையங்கம், 16.12.1928)
தாழ்த்தப்பட்டு, கொடுமை செய்யப்பட்ட மக்களை விடுதலை செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு அதிகாரங்களில் உயர்பதவி கொடுப்பதன் மூலமேதான் சீக்கிரத்தில் செய்யக்கூடுமே தவிர, வேறு காரியங்களால் அல்ல. உதாரணமாக, பார்ப்பனர்களால் மற்ற பார்ப்பனரல்லாதார்களைச் சூத்திரன், இழிந்த பிறப்பான் என்றும், மகமதியர்களை மிலேச்சர்களென்றும், கிறிஸ்தவர்களை நீச்சர்களென்றும் சொல்லிக் கொண்டிருந்த கொடுமைகள் எல்லாம் இன்றைய தினம் வேகமாய் மறைந்துபோய்க் கொண்டிருப்-பதற்கும் காரணம் அந்தந்தச் சமூகங்கள் அரசியல் அதிகாரங்களில் ஆதிக்கம் பெற்றதினா-லேயே ஒழிய மற்றபடி, வேறு எந்தக் காரணங்களாலாவது என்று சொல்லிவிட முடியாது. (‘குடிஅரசு’, 9.3.1930)
ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணங்கள்
இப்போது நமது முக்கியமான வேலை ஜாதியை ஒழிப்பது. பார்ப்பான் ஒரு ஜாதி! நாம் ஒரு ஜாதி! இதைத் தவிர வேறு ஜாதி கிடையாது. ஜாதி ஒழிவதற்கு இதுபோன்ற கலப்புத் திருமணங்கள் மிகவும் பயன்படும் (சண்முகம் _ பத்மாவதி கலப்பு மணத்தில் பெரியார் ஆய்வுரை, ‘விடுதலை’, 6.12.1956)
ஜாதியையும் தீண்டாமையையும் ஒழிப்-பதற்குக் கலப்பு மணம் ஒன்றேதான் வழி. ஆனால், இதைப் பிரச்சாரம் செய்பவர்கள், திராவிடர் கழகத்தாரைத் தவிர யாருமில்லை. (‘விடுதலை’ 29.12.1956)
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை
இதுவரை நானும் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் தொடங்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வி என்பதே கிடையாது என்பதை பலமுறை எடுத்துக்காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையிலும் ரயில்வண்டி சிற்றுண்டி விடுதிகள் முதல் சாதாரண ஹோட்டல்களில் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு கூடாது என்பதிலும் தாய்மார்களை ஆண்டவன் பெயரால் பொட்டுக்கட்டும் அநாகரிகம் ஒழிய வேண்டும் என்பது வரை நாங்கள் கிளர்ச்சி செய்து சிறை சென்று பல தொல்லைகளுக்கு உட்பட்டு வெற்றி பெற்று அதன் நடைமுறைகளும் இன்று இருந்து வருகிறதே அல்லாது ஒன்றிலும் தோல்வி கிடையாது.
இன்னும் விரைவில் கூறப்போகிறேன். கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது. அவர்களே பூஜை செய்ய வேண்டும். தட்சணை காசுகளை அவர்களே அடைய வேண்டும். அப்படி அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போட வேண்டும் என்று கிளர்ச்சி செய்யத்தான் போகிறேன். (‘விடுதலை’, 22.8.1948)
உண்மையில் எனது தொண்டு ஜாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்த வரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்பு பிரச்சாரம் ஆகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான், ஜாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் ஜாதி உண்மையிலேயே அழிந்தாக ஆகாது.
ஏனெனில், ஜாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும்.
இப்போதும் சொல்லுவேன்! நாகரிகத்திற்கு சிலர் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்-பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் ஜாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும், அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்து, ஜாதியை நிலை நிறுத்துவதுதான், ஜாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் _ கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவை ஆகும்! (‘விடுதலை’, தலையங்கம், 18.8.1973)
«««
உண்மையாகவே ஜாதியை ஒழிக்க சட்டம் மூலம் செய்ய வேண்டிய காரியங்களைப் பட்டியலிடுகிறார். அவை பின்வருமாறு:
1. எவரும் பூணூல் அணியக் கூடாது.
2. எவரும் ஜாதியைக் குறிக்கும் நெற்றிக் குறியை அணியக் கூடாது.
3. கிறிஸ்தவர்களும் ஜாதிப் பட்டங்களை விட்டுவிட வேண்டும்.
4. ஆரியர்கள் திராவிடர் வீடுகளுக்குப் புரோகிதம் செய்து வைப்பதன் மூலம் தங்கள் ஜாதி உயர்வை நிலைநாட்டுவதை ஒழிக்க வேண்டும்.
5. ஆரியர்கள் கோவில் மடப்பள்ளி, மூலஸ்தானம் ஆகிய இடங்களை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
6. பிராமண மகாசபை, நாடார் சங்கம், முதலியார் சங்கம், வன்னியர் சங்கம் போன்ற ஜாதிச் சங்கங்கள் எல்லாம் சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்.
7. ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொள்வது சட்டப்பூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும்.
8. ஜாதியைக் குறிக்கும் பாடப்புத்தகங்கள், கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், மனுதர்மம், பகவத்கீதை போன்ற நூல்கள் யாவும் கொளுத்தப்பட வேண்டும் அல்லது சட்டம் மூலமாகத் தடுக்கப்பட வேண்டும்.
9. நகரங்களிலும் கிராமங்களிலும் அக்ரஹாரங்கள் என்ற பெயரால் இருந்து வரும் ஆரியச் சேரிகள் காலி செய்யப்பட வேண்டும் அல்லது அங்கு மற்றவர்களும் கலந்து குடியிருக்க வேண்டும்.
10. ஜாதி உயர்வைப் பாராட்டாமல் ஆரியர்களும் அவர்களை காப்பி அடிக்கும் மேல் ஜாதிக்காரர்களும் மற்றவர்களைப் போலவே சவரத்தொழில், துணி வெளுக்கும் தொழில், பயிர் வேலை, வீடு கட்டுவது, வண்டி இழுப்பது, கல் உடைப்பது எதையும் செய்ய முன்வர வேண்டும்.
(‘விடுதலை’ 5.8.1947)