நாத்திக நடைமுறை ஆக்க எழுத்துப் போராளி கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ்

ஜனவரி 01-15

சீரிய எழுத்தாளரும், சிறந்த பத்திரிகையாளரும் நாட்டு நடப்புகளில் நங்கூரம் போன்ற அழுத்தமான கருத்துகளை வெளிப்படுத்தியவருமான நடைமுறைப் போராளி கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் அமெரிக்கா வில் 2011 டிசம்பர் 15ஆம் நாள் காலமானார்.

 

62 வயதுவரை வாழ்ந்த கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் பிரிட்டனில் பிறந்து பின்னாளில் அமெரிக்க நாட்டுக் குடியுரிமை பெற்றவர். தங்கு தடையற்ற விமரிசகர் என பத்திரிகை உலகில் பாராட்டப்பட்டவர். ‘God is not Great’ (கடவுள் உயர்வானது அல்ல) எனும் புத்தகம் எழுதியதின் மூலம் உலகளாவிய அளவில் அறியப்பட்ட நாத்திகப் போராளி கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ்.

மத நம்பிக்கை, கடவுள் பற்று மலிந்து, நாத்திகம் என்பதே பாவம் எனக் கருதப்பட்டு வரும் அமெரிக்க சமூகச் சூழலில் புத்தாக்க நாத்திக இயக்கத்தின் சாதனையாளராக வாழ்ந்து காட்டியவர். வருவாய்க்காக எழுத்து என்பதாக மட்டுமல்லாமல் கருத்துக்காக எழுத்து எனும் கருதுநிலைக்கு ஆக்கம் கூட்டியவர். பத்திரிகைத் துறையில் உலகப் புகழ்பெற்ற தி அட்லாண்டிக், வேனிட்டி பேஃர், ஸ்டேட், வேர்ல்ட் அபஃர்ஸ், தி விஷன், ஃபிரி என்கொய்ரி ஆகிய ஆங்கில இதழ்களில் தொடர்ந்து தனது விமர்சனக் கருத்து களைப் பதிவு செய்து பரப்பி வந்தார். வெளியுறவுக் கொள்கை யும் அதன் வீச்சும்  (Foreign Policy and Prospect) பத்திரிகை நடத்திய தேர்வில் உலகின் 100 பொது அறிவாளிகளில் ஒருவராக அய்ந்தாம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டவர்.

தந்தை பெரியாரின் நாத்திகப் பரப்புப் பணியில் உள்ள ஆக்கரீதியான வலுவான ஆத்திக எதிர்ப்பு நிலையினை பிற நாடுகளில் காண்பது அரிது. தம்மை நாத்திகர் என்று வெளிப்படுத்து பவரும் கடவுள் இல்லை என பகிரங்கமாக பிரகடனப்படுத்தத் தயங்கும் சூழல்களே பிற நாடுகளில் அதிகம். அத்தகைய சூழலில் தன்னை நாத்திகர் (Atheist) என்று அடையாளப்படுத்திக் கொள்வதைவிட ஆத்திகர் எதிர்ப்பாளர் (Antitheist) என்ற முத்திரையுடன் முழக்கமிட்டவர் ஹிச்சன்ஸ். கிறித்துவ மத நம்பிக்கை நிறைந்துள்ள அமெரிக்காவில் வசித்துக் கொண்டு, சமூகசேவை யாளர் என அறியப்பட்ட (அன்னை) தெரசா அவர்க ளின் பணியினை மதப்பிரச்சார மோசடி என பகிரங்க மாகக் குறிப்பிட்டும், ஈரானின் அயதுல்லா கோமேனி, எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது விதித்த பஃட்வா பற்றி இஸ்லா மியத்தின் பாசிச முகம் என பிரச்சாரம் செய்தார். மனிதநேய அடிப்படையில் வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த போரை வன்மையாகக் கண்டித்தார். அமெரிக்க வெளிநாட்டு விவகார அமைச்சராக இருந்த ஹென்றி ஹிஸ்ஸிங்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் கிளாரி ஆகியோரின் ஆதிக்க அணுகுமுறை பற்றி தனது எழுத்துகளின் மூலம் படம் பிடித்துச் சாடினார்.

விமர்சனம் செய்வதில் காந்தியாரையும் விட்டுவைக்கவில்லை. தனது மனதை எப்போதும் மாற்றிக்கொள்ளாமல் அமைதிக்காகப் பிரச்சாரம் செய்த ஒரே பங்களிப்பாளராக இருந்த குற்றத்தில் இருந்து காந்தி தப்பித்துக்கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

வெறும் எழுத்தாளராக மட்டுமின்றி ஆக்கரீதியான பங்களிப்பாளராக வாழ்ந்து மறைந்து ள்ளார். அமெரிக்க மதச் சார்பற்ற கூட்டமைப்பின் ஆலோசனைக் கழகத்தில் (Advisory Board of Secular Coalition for America) பங்கேற்று, அமெரிக்க வாழ்வியலில் நாத்திகமயத்தை வலியுறுத்தி ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆலோசனை வழங்கியவர். தத்துவங்களைவிட தத்துவத்தை நடைமுறைப்படுத்து பவர்களைப் பற்றி அதிகமாகச் சிந்தித்து கருத்து நிலைகளை உருவாக்கியவர். எடுத்துக் காட்டாக, மார்க்சியம் என்பது தத்துவநிலை. அதை நடைமுறைப் படுத்தும் நிலையில் உள்ளவர்கள் சமத்துவவாதிகள் (Socialists) மற்றும் பொதுவுடைமைவாதிகள் (Communists). மார்க்சியக் கொள்கை நடைமுறை யினை மேற் கொண்டுவரும் சமத்துவவாதிகள் முதலாளித்துவத்திற்கு மாற்றாக ஆக்கரீதியான அரசியல் சூழலை உருவாக்க முடியவில்லை எனக் கூறி நான் இனிமேல் சமத்துவவாதியல்ல; ஆனால் இன்னும் நான் மார்க்சிய வாதிதான். (I am no longer a socialist, but still am a marxist). இந்தியச் சூழலில் பொதுவுடைமைக் கருத்துகள் முழுமையாக வெற்றியடைய முடியாததற்கு இந்நாட்டுப் பொதுவுடைமை அரசியல்வாதிகளே காரணம் என்ற தந்தை பெரியாரின் கருத்து நிலை பிரதிபலிப்பாகவே கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் விளங்கியவர்.

2010ஆம் ஆண்டு தனது நினைவுகள் – Hitch 22 புத்தக வெளியீட்டின்பொழுது தமக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதை அறிய நேர்ந்தார். தனது இறுதிநிலை உணர்ந்தும் நாத்திகக் கொள்கையில் பிடிப்புடனே வாழ்ந்து மறைந்தார். அவரது மறைவு நாத்திக, மனிதநேய உலகிற்கு மாபெரும் இழப்பு. அவரது எழுத்துகள் மற்றும் ஆற்றிய ஆக்கப்பணிகள் மூலம் எந்நாளும் வாழ்வார் என்பது உறுதி.

(சென்னையில் 2011 டிசம்பர் 18ஆம் நாளன்று, தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களைப் புரவலராகக் கொண்டு செயல்படும் பகுத்தறிவாளர் கழகக்  கூட்டத்தில் கிறிஸ்டோபர் ஹிச்சன்ஸ் நினைவுகள் பற்றி எடுத்துப் பேசப்பட்டு மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

நாத்திக மனிதநேயர்களின் புரவலராக பெரியார் இயக்கம் இருப்பது குறித்து பகுத்தறிவாளர் கழகக் கூட்ட இரங்கல் செய்தியறிந்து அமெரிக்க நாத்திக அறிஞர் பால்கர்ட்ஸ் பெருமிதம் கொண்டு செய்தி அனுப்பியுள்ளார்.)

– வீ.குமரேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *