பிரபஞ்ச ஆய்வில் புதிய தொலைநோக்கி
தென் அமெரிக்காவிலிருக்கும் பிரெஞ்ச் கயானா மழைக் காடுகளிலிருந்து ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி (James Webb Space Telescope) விண்ணில் ஏவப்பட்டது.
விண்வெளி ஆராய்ச்சியில் இருந்து வரும் ஹப்பிள் தொலைநோக்கி 1990ஆம் ஆண்டு நாசாவால் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருக்கும் இந்தத் தொலைநோக்கி முப்பது ஆண்டுகளாக விண்வெளி ஆராய்ச்சியில் பெரும் பங்காற்றி வருகிறது. இந்தத் தொலைநோக்கி தந்த தகவல்களை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து மட்டும் இதுவரை 18,000க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
ஹப்பிள் தொலைநோக்கியைவிட 100 மடங்கு திறன்மிக்கது இந்த ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி. அய்ரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மய்யம், கனடிய விண்வெளி ஆராய்ச்சி மய்யம் மற்றும் நாசா இவை இணைந்து உருவாக்கியிருக்கும் இந்தத் தொலைநோக்கி விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கப்போகிறது. இந்தத் தொலைநோக்கியை உருவாக்க 1990களிலிருந்தே திட்டமிட்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
ஹப்பிள் தொலைநோக்கி நம் கண்களால் பார்க்கக்கூடிய ஒளியை (Visible Light) மட்டுமே சேகரித்தது. ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அகச்சிவப்பு ஒளியை (Infrared Light) சேகரிக்கும். இது மட்டுமல்லாமல் அளவிலும் சரி, தொழில்நுட்பத்திலும் சரி, மிகவும் மேம்பட்டதாகவும் இருக்கிறது.
பூமியே அகச்சிவப்பு ஒளியை வெளியிடும் என்பதால் இங்கிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இரண்டாவது லெக்ராஞ்ச் (L2) புள்ளியில் சூரியனைச் சுற்றிவரப் போகிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இவற்றின் காரணமாக ஹப்பிளால் இதுவரை காணமுடியாத அம்சங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் தெளிவாகப் பார்க்க முடியும்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் 1,360 கோடி ஒளி ஆண்டுகள் தூரம் வரை பார்க்க முடியும். பெருவெடிப்பு (Big Bang) 1,380 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அதிலிருந்து 10 கோடி ஆண்டுகளுக்குப் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்களோ, அண்டங்களோ உருவாகவில்லை. ஒளியே இல்லாத அந்தக் காலகட்டத்தை ‘இருண்ட காலம்’ (Dark Age) என்று அழைக்கின்றனர். அதன்பின் நட்சத்திரங்கள், அண்டங்கள் என ஒவ்வொன்றாக உருவாகின.
1,360 கோடி ஒளி ஆண்டுகள் தூரம் பார்க்க முடியும் என்றால், 1,360 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தை இப்போது பார்க்க முடியும் என்று அர்த்தம்.
சூரியக் குடும்பம் அல்லாமல் பிற அண்டங்களில் இருக்கும் கிரகங்களில் (Exoplanets) உயிர்கள் இருக்கின்றனவா, இருந்த தடங்கள் இருக்கின்றனவா என்ற தேடலிலும் ஈடுபடும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. பிரபஞ்சம் எப்படி உருவானது என்ற புதிரில் முக்கிய முடிச்சுகளை இந்தத் தொலைநோக்கி அவிழ்க்கும் என விஞ்ஞானிகள் உறுதிபடக் கூறுகின்றனர்.