அப்படி என்னதான் செய்கிறார் ஓப்ரா…!
– சோம.இளங்கோவன்
ஓப்ரா வின்ஃபிரியின் பாடங்கள் உலகெங்கும் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடக்கின்றது.
அது வெறும் பாடமாக இல்லாமல் பலருக்கு வாழ்வின் வழிகாட்டியாக இருக்கின்றது. வாழ்க்கையின் முக்கிய அங்கங்களான அனைத்திற்கும் பாடங்கள் பயனுள்ளதாக அமைந்துள்ளது பெரிதும் வரவேற்கப்படுகின்றது. உடல், பொருள், உள்ளம் என்ற முக்கிய கருத்துகள் அதன் அங்கங்களாகப் பிரிக்கப்பட்டு உடல் நலம், உணவு, உடற்பயிற்சி, உறக்கம் முக்கியமானவை என்று தனி வகுப்புகள் நடந்துள்ளன.
பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை என்பதையும் அந்தப் பொருளை எப்படிச் சேர்ப்பது அதைவிட சிறு ஊதியம் பெறுவோரும் அதில் எவ்வாறு ஒரு சிறு தொகையையாவது சேமிப்பது முக்கியம் என்றும் சொல்லித் தரப்பட்டுள்ளது. இதில் பயன் பெற்றோர் கதைகளைக் கேட்கும் போது அனைவருக்கும் நம்பிக்கையும் வழியும் உண்டாகின்றது.
நமக்கு நடப்பது 20 விழுக்காடு, ஆனால் நாம் அதை எப்படி எதிர்கொள்கின்றோம் என்பது தான் 80 விழுக்காடு. இதில் தீதும் நன்றும் பிறர் தர வாரா! என்பதை மனதில் கொண்டு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர அடுத்தவர்களைப் பற்றிக் குறை சொல்லி மனதை நோகடித்துக் கொள்வதும், நேரத்தை வீணடிப்பதும் கூடாது என்பது மிகவும் முக்கியமான கருத்தாகச் சொல்லப்பட்டுள்ளது. உள்ளத்து மகிழ்ச்சிக்கு முழுக்க முழுக்க நாம்தான் காரணம் என்பதைப் பலரது கதைகளைச் சொல்லச் சொல்லி அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்தது? எப்படி மாறியுள்ளது என்பதைச் சொல்லியுள்ளார்கள்.. மனித உள்ளத்தை அலைக்கழிக்கும் அத்தனை உணர்வுகளும் தனித் தனியே அலசப்பட்டுள்ளன. கோபம், மன உளைச்சல், அமைதியின்மை, ஏக்கங்கள், தன்னம்பிக்கையில்லாமை போன்ற பலவற்றை மிகவும் புகழ் பெற்ற அறிஞர்களும், சாதாரணப் பொதுமக்களும் அவரிடம் நேர்காணலில் விவரித்துத் தங்கள் வாழ்க்கையின் மாற்றங்களை எடுத்துச் சொல்லியுள்ளனர். இதுவே மிகப் பெரிய பாடமாக அமைந்துள்ளது.
மன அமைதிக்கு முக்கியமான போதுமென்ற மனதும், பிறருக்கு உதவும் உண்மை இன்பமும், மன அமைதிப் (மெடிட்டேசன்) பயிற்சிகளும் மிகவும் முக்கியமானவை என்பதைப் பலரும் அவர்கள் அடைந்த பலன்களை எடுத்துச் சொல்லும் போதுதான் அதன் உண்மைப் பயன் பலருக்கு விளங்குகின்றது. மகிழ்ச்சி வாழ்க்கையின் முக்கியமான தேவை. அதை அடையும் வழிகள் மிகவும் எளிதானவை. போட்டிகள் வேண்டும், ஆனால் பொறாமையில்லாத போட்டிகள், தவறுகள் வாழ்க்கையின் படிகள் அதில் ஏறாமல் யாரும் முன்னேற முடியாது. தன்னம்பிக்கை முன்னேற்றத்திற்கான அடிக்கல், அது இன்றி எந்தக் கட்டிடமும் கட்ட முடியாது போன்ற கருத்துகள் பலரின் வாழ்க்கைப் பாடங்களாகக் காட்டப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளன.
வாழ்வின் முக்கியத் தேவைகளான நல்ல உணவு, நல்ல உறவுகள், வாழ்க்கைத் துணை உடல் இன்பம், நட்பு, உழைப்பு, விடுமுறை, மகிழ்ச்சிக்கான படிப்பு போன்ற பலவும் விரிவாக அலசப்பட்டுள்ளன.
இதெல்லாம் எல்லோரும் சொல்வதும் எழுதுவதுந்தானே, இதிலென்ன பெரிய ஓப்ரா என்று கேட்கலாம். அதில்தான் ஒரு அதிசயமே இருக்கின்றது.
ஓப்ரா யார்? ஓப்ரா ஒரு படு ஏழையான கருப்பினப் பெண். இளமையிலே துன்புறுத்தப் பட்டுக் கற்பழிக்கப்பட்ட, அம்மாவால் கைவிடப் பட்ட பெண். இப்பொழுது அவர் யார்? உலகத்திலேயே பணக்காரக் கருப்பினப் பெண். அமெரிக்கத் தலைவர் முதல் உலகெங்கும் உள்ளோர் மதிக்கும் பெண்.
பெரிய தொழிலதிபர், நடிகை,. மனித நேயத்தின் முன் எடுத்துக்காட்டு. ஆனால் அதையெல்லாம்விட அவர் நிகழ்ச்சியில் சாதாரண மக்கள் பெருமளவில் மேடையில் ஏறித் தங்கள் வாழ்க்கையைப் பாடங்களாகச் சிறந்த அறிஞர்களுடன் விவாதிக்கின்றனர்.
அதாவது, சொல்பவர் சொல்லும் விதம், இடம் எல்லாம் அவரவர் நமது வீட்டில் ஒரு நல்ல நண்பர் வந்து பங்கேற்கும் நிலைக்குக் கொண்டு செல்லப்படுவதுதான்.
இதை உலகில் யாரும் செய்யவில்லை. இதைச் செய்து அவர் மிகப் பெரிய அளவிற்குப் பொருள் ஈட்டுகின்றார். அந்தப் பொருளை நன்கு பயன்படுத்துகின்றார். பல பெண்களுக்கு அக்காவாகவும், பல கோடி மக்களுக்கு நல்ல ஆசிரியையாகவும் இருக்கின்றார். நல்லவற்றை எளிதாக, பயனுறும் வகையில் சொல்லித் தருகின்றார். அது மிகவும் சுவையுள்ளதாகவும் இருக்கின்றது. இந்த அதிசயம் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கின்றது.
தொடரட்டும் “ஓ” வின் அதிசயம் ! நமது வாழ்வும், மகிழ்ச்சியும் நம் கையில்தான் என்ற நம்பிக்கை பலருக்கு வந்துள்ளது, நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும் என்று விரும்பி விடைபெறுகின்றேன்.
வாழ்க பெரியார் ! வளர்க மனித நேயம் !