கண் பார்வை இழந்த நிலையிலும் லட்சியம் வென்றவர்!
‘நாட்டிலேயே பார்வையற்ற முதல்பெண் அய்.ஏ.எஸ். அதிகாரி’ என்ற சிறப்பு இவருக்கு உண்டு. அவர்தான் பிராஞ்சல் பாடில்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் ‘தானே’ மாவட்டத்தின் ‘உல்ஹாஸ் நகர்’தான் இவருடைய சொந்த ஊர்.
ஒரு முறையல்ல. இருமுறை தேர்வெழுதி, இரண்டிலும் வென்றிருக்கிறார்.
இவர் தமது பார்க்கும் திறனை 6ஆம் வயதில் முற்றாக இழந்தார். எந்த ஒரு பயிற்சி நிறுவனத்துக்கும் இவர் போகவில்லை; தேர்-வெழுதத் தாமே பயிற்சிகளை மேற்கொண்டார். இவருக்காக புத்தகங்களை வாசித்துக் காட்டக்கூடிய ஒரு மென்பொருள் உதவி மூலமே தேர்வுக்கு ஆயத்தமானார். மாதிரி அய்.ஏ.எஸ். கேள்வித் தாள்களுக்கு விடையளிப்பது, குழுக் கலந்துரையாடல்களில் பங்கு பெறுவது என முழுமையாகத் தம்மைத் ஆயத்தப்படுத்திக் கொண்டார்.
2019ஆம் ஆண்டில் தமது 31ஆம் வயதில் திருவனந்தபுரத்தில் உதவி ஆட்சியராகப் பணியேற்றார். பின்னர் தெற்கு டெல்லி துணை நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்றார். ‘கல்விப் பிரிவு இயக்குநர்’ என்ற கூடுதல் பதவியும் இவரைத் தேடி வந்தது. தனது பயணம் பற்றிக் கூறுகையில்,
“என்னுடைய பிறந்த நாள் அன்று நாட்டின் தலைநகரத்தில் பொறுப்பேற்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி.’’
இவருடைய பெற்றோர் இச்சாதனையைப் பற்றிக் கூறுகையில், “என்னுடைய மகளால் எனக்கு மிகவும் பெருமை ஏற்பட்டிருக்கிறது. பெண்களைப் பெற்றிருக்கும் அனைத்துப் பெற்றோரும் தங்களுடைய மகள்களுக்குக் கட்டாயம் கல்வி அளிக்க வேண்டும்; அவர்-களுடைய கனவுகள் மெய்ப்பட முழுமையாக உதவ வேண்டும்!’’
பிராஞ்சல் தம்முடைய ஆரம்பக் கல்வியை தாதரில் இருக்கும் கமலா மேத்தா பார்வையற்றோர் பள்ளியில் துவங்கினார். அதன் பிறகு தாதரிலேயே இயங்கும் சரஸ்வதி வித்யாலயாவில் பயின்றார். அதன் பின்னர் உல்ஹாஸ்நகர் சி.ஹெச்.எம். கல்லூரியிலும், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியிலும் பயின்றார். இவர் பட்டம் பெற்றது அரசியல் அறிவியல். பின்னர் முதுகலைப் பட்டமும் பெற்றார். சர்வதேச உறவுகள் தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்-கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் 2016இல் முதன்-முறையாக வென்றபோது இவருக்கு இந்திய ரயில்வே துறையின் கணக்குப் பிரிவில் பணி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. ஆனால், 100% பார்வையற்றவராக இவர் இருந்ததால் ரயில்வே நிருவாகம் பணியமர்த்த மறுத்துவிட்டது. எனவே, அதன் பின்னர் ஃபரிதாபாத்தில் இந்திய அஞ்சல் மற்றும் தொலைதொடர்புக் கணக்குகள் மற்றும் நிதிப் பிரிவில் பணி ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
ரயில்வே நிருவாகம் பணியளிக்க மறுத்ததால் பிராஞ்சல் ஏமாற்றம் அடைந்தார். ஆனால், சோர்ந்து போய்விடவில்லை. மீண்டும் கடுமையாக முயற்சித்தார்! இந்த முறை பிராஞ்சலுக்கு கேரளா கேடர் அய்.ஏ.எஸ். பதவி ஒதுக்கீடானது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் உதவி ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றார். அதன் பின்னர் திருவனந்தபுரம் துணை ஆட்சியாளராக நியமனம் செய்யப்பட்டார்.
2020ஆம் ஆண்டு டெல்லியில், அருணாசலப்பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் டெரிடரி (AGMUT) ஆகிய பகுதிகளை நிர்வகிக்கும் பதவியில் அமர்த்தப்பட்டார்.
பிராஞ்சல் பாடில் நல்ல கவிஞரும்கூட! பெருந்திரளான பார்வையாளர்களுக்கு முன்பு சிறப்பாகச் சொற்பொழிவாற்றக் கூடியவர்.
கடின உழைப்பும் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு பிராஞ்சல் பாடிலின் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு பாடம்!ஸீ
தகவல் : சந்தோஷ்