வரலாற்றுச் சுவடு : திருக்குறளிலும் பெரியாரியலிலும் உள்ள ஒத்த கருத்துகள் (3)

ஜனவரி 16-31,2022

மஞ்சை வசந்தன்

உலகத் திருக்குறள் மய்யம்

இணைய மாநாட்டில் வாசிக்கப்பட்டது

கபடம்:

மைபொதி விளக்கேயன்ன மனத்தினுள் கருப்பு வைத்து பொய்தவ வேடம் பூண்டு ஊரை, உலகை ஏமாற்றி வாழுகின்ற துறவிகள் பற்றி தந்தை பெரியார் அக்கு அக்காய் அலசி அவர்களின் உண்மை உருவத்தை, ஒவ்வொரு மேடையிலும் வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்பூட்டியுள்ளார்.

சாமியார்கள், துறவிகள், கடவுள் அருள் பெற்றவர்கள், அவர்கள் சக்திமிக்கவர்கள், அவர்கள் அருள் ஆசி வழங்கினால் நன்மை கிடைக்கும் என்று நம்பி ஏமாந்து மோசம் போகிறவர்கள், வன்புணர்வு செய்யப்பட்டவர்கள் ஏராளம் என்று பெரியார் விளக்கி, கருத்துகள் பல கூறியுள்ளார். துறவிகளின் வேடம் என்பது அவர்களின் கபடங்களை மறைக்கும் கருவி என்பதை பலமுறை கூறியுள்ளார்.

இக்கருத்தை அப்படியே வள்ளுவரும் தம் குறளில்,

வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று  (குறள் – 273)

நெஞ்சில் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல் (குறள்-276)

தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று (குறள் – 274)

புதர்மறைவில் நின்று வேடன் பறவையை வேட்டையாடுதல் போல தவவேடத்தில் மறைந்து தப்பு செய்கின்றவர்கள், இவர்கள் புலித்தோல் போர்த்திய பசு பயிர் மேய்வதைப் போன்ற குற்றம் செய்பவர்கள்; புறத்தே துறவி போல் காட்சி தந்தாலும் உள்ளுக்குள் கபடம் உடையவர்கள் என்று பத்து விதமாக வள்ளுவர் துறவிகளின் கபட நாடகத்தைப் பதிவு செய்துள்ளார். வள்ளுவர் கூறும் கருத்துகளும் பெரியார் கூறும் கருத்துகளும் இங்கு ஒத்துக் காணப்படுகின்றன.

முயற்சி:

ஊக்கம் உடைமை, ஆள்வினையுடைமை ஆகிய இரு அதிகாரங்களில் 20 குறட்பாக்களில் முயற்சி பற்றி வள்ளுவர் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினுந் தள்ளாமை நீர்த்து (குறள் – 596)

என்கிறார் வள்ளுவர்பெருமான்.

அடைய முடியாமல் போனாலுங்கூட நம் இலக்கு உயர்வானதாக இருக்க வேண்டும். அந்த இலக்கை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும். அம்முயற்சியில் தோல்வி கண்டாலும் அது பெருமைக்குரியதே என்கிறார்.

மேலும், படைச் செருக்கு அதிகாரத்தில்,

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவே லேந்த லினிது (குறள் – 772)

என்கிறார் வள்ளுவர்.

அதாவது, குறிதவறாது முயல்மீது அம்பெய்த செயலைவிட, யானையை வீழ்த்த இலக்கு வைத்து எய்த அம்பு குறிதவறி யானை பிழைத்தாலும் அதுவே சிறப்புக்குரிய முயற்சி என்கிறார்.

தந்தை பெரியார் அவர்களும் இதே கருத்தை தன் போராட்ட முயற்சி பற்றிக் குறிப்பிடுகையில் மிகச் சரியாகக் குறிப்பிடுகிறார்.

“அறிவிழந்து மானம் இழந்து அடிமைப்பட்டுக் கிடக்கும் இச்சமுதாய மக்களை மானமும், அறிவும் உள்ளவர்களாக மாற்றி எழுச்சிபெறச் செய்ய நான் மேற்கொண்டுள்ள பணி மிகப் பெரியது. அதைச் செய்ய எனக்குத் தகுதி இருக்கிறதோ இல்லையோ, இந்த அரிய பணியைச் செய்ய எவரும் முன்வராத காரணத்தால், அதை என் தோள்மேல் போட்டுக் கொண்டு சாதிக்க முயல்கிறேன். மிகப் பெரிய மலையை மயிரைக் கட்டி இழுக்கிறேன். வந்தால் மலை இல்லையேல் இழப்பொன்றும் இல்லை’’ என்கிறார்.

“ஒரு மனிதன் ஒரு வேலையும் செய்ய முடியாமல் படுத்துக் கொண்டு இருக்கவா உயிர் வாழ வேண்டும்? ஒரு ஆள் சோற்றையும் தின்று கொண்டு ஒரு பிரயோசனமும் இன்றி எதற்காக உயிர் வாழ வேண்டும்? எனவே, படுத்துக் கொண்டு ஓய்வாக இருந்து ஒரு காரியமும் ஆற்றாமல் உயிர் வாழ்வதைவிடப் படுத்துக் கொண்டு ஓய்வு எடுக்காமல் காரிய மாற்றியதால் ஏற்படும் கேட்டினால் உயிர் போனாலும் பரவாயில்லை என்று எண்ணிக் கொண்டுதான் இப்படிச் சுற்றுகிறேன்.’’ (‘விடுதலை’ -_ 24.12.1965)

“ஏதாவது ஒரு காரியம் செய்யாமலிருக்க எப்பொழுதும் மனம் வருவதில்லை. ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (‘குடிஅரசு’ _- 19.1.1936)

“என்னுடைய உயிரை ஒரே இலட்சியத்திற்கு மட்டும் அர்ப்பணிக்கத் துணிந்தவன் நான். எப்படியோ என்னுடைய வாழ்நாளிலேயே என் லட்சியம் நிறைவேற என் உயிரைப் பலியாக்கத்தான் போகிறேன். சாகும் வரை என்னுடைய பணியைச் செய்தே தீருவேன்.’’ (‘விடுதலை’ _- 24.9.1955)

“என்னுடைய முயற்சி யெல்லாம் மக்கள் எதையும் சிந்திக்க வேண்டும் என்பதுதான். அவர்கள் எதையும் கண் மூடி நம்பிவிடக் கூடாது. இது போதுமான அளவுக்கு இன்று மக்களிடையே வேரூன்றி விட்டது. இனியும் தொடர்ந்து எனது உயிர் உள்ளவரையும் நான் இதைத்தான் கூறுவேன். என்னை யாரும் அடக்கி விடவும் முடியாது.’’ (‘விடுதலை’ _- 13.1.1971)

“நாம் செய்ய வேண்டிய காரியம் அவசியமான காரியம். இதில் வெற்றி பெறுகிறோமா இல்லையா என்று எண்ணிப் பார்க்கவே கூடாது. செய்ய வேண்டியது நமது கடமையா அல்லவா என்றுதான் சிந்தித்துப் பார்த்துச் செயலில் இறங்க வேண்டும்.’’ (‘விடுதலை’ _- 10.12.1973)

“நமது இலட்சியம் நிறைவேறுவதற்கான காரியத்திற்குப் போவதானால், அந்தக் காரியம் நிறைவேறுகிறவரையில் போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.’’ (‘விடுதலை’ -_ 18.6.1960)

“நாம் ஆற்றிவந்த – ஆற்றி வருகின்ற தொண்டு மனிதச் சமுதாயப் பொதுத் தொண்டாக மாத்திரமல்லாமல், சமுதாயத்தில் எனக்குச் சுயநலத் தொண்டாகவும் அமைந்துவிட்டதால் துவக்க முதல் இன்றளவும் சிறிதும் உற்சாகமும் முயற்சியும் சிதையாமலிருந்து பணியாற்றி வருகின்றேன்.’’ (‘விடுதலை’ _- 18.9.1971)

வள்ளுவர் கருத்தும் பெரியார் கருத்தும் ஒத்திருப்பது மட்டுமல்ல, வள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாகவும் பெரியார் விளங்குகிறார். அது மட்டுமல்ல; அந்த அரிய முயற்சியில் சாதித்து முயற்சி திருவினையாக்கும் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

மேலும்,

அருமை யுடைத்தென் றசவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும் (குறள் – 611 )

என்கிறார் வள்ளுவர்.

அதாவது, ஒரு செயல் அருமையுடையது என்று எண்ணி தளராமல், அதை முடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

தந்தை பெரியாரும் இக்கருத்தை அப்படியே கூறியதோடு, அப்படிச் செய்யவும் செய்தார்.

‘குடிஅரசு’ ஏடு தொடங்கி நடத்துவது அக்காலத்தில் எவ்வளவு அரிய, பெரிய செயல் என்பது அவருக்குத் தெரியும் என்றாலும் அதைத் தொடங்கினார்.

மக்கள் விரும்பும் செய்திகளை வெளியிட்டு, கவர்ச்சிகாட்டி, பத்திரிகை நடத்துவது எளிது. அதை விற்பனை செய்வதும் எளிது. ஆனால், மக்கள் நம்பிக்கைளுக்கும், நடைமுறைக்கும் எதிரான, ஆதிக்கவாதிகளின் கருத்துகளுக்கும், செயல்களுக்கும் எதிராகக் கருத்துகள் கூறி ஒரு பத்திரிகை நடத்துவதும், அதை மக்களிடம் விற்பனை செய்வதும் மிகப்பெரிய அரிய செயல். என்றாலும் அச்செயலில் பெரியார் இறங்கினார். ‘குடிஅரசு’ ஏடு தொடங்கினார். அப்போது அவர் சொன்னார்,

“நானே எழுதி, நானே அச்சுக் கோத்து, நானே அச்சிட்டு, நானே படித்தாலும், ‘குடிஅரசு’ ஏட்டை நடத்துவேன். நடத்தாமல் பின்வாங்க மாட்டேன்’’ என்றார்.

வள்ளுவரின் கருத்தும் பெரியாரின் கருத்தும் மிகச் சரியாக இங்கு ஒத்துப் போகிறது. அது மட்டுமல்ல, முன்னமே குறிப்பிட்டது போல, தான் சொன்ன கருத்துப்படி, செயலிலும் இறங்கிச் செய்தும் காட்டினார் பெரியார். வெற்றியும் பெற்றார். ‘குடிஅரசு’ ஏடு சாதனை புரிந்தது; சரித்திரம் படைத்தது.

சிக்கனம்:

தந்தை பெரியார் சிக்கனத்தை அதிகம் வலியுறுத்தியுள்ளார். சிக்கனம் என்பது தேவைக்குச் செலவு செய்வதும், தேவையற்ற பகட்டுச் செலவுகளைக் குறைப்பதும் என்கிறார். தன்வருவாய் அறிந்து, அதற்குள் தனது தேவைகளைச் சுருக்கி, வருவாயை விட செலவு அதிகம் மிகாதவாறு திட்டமிட்டுச் செலவு செய்தல் வேண்டும்.

திருமணம், சடங்கு, சம்பிரதாயம் போன்றவற்றிற்கு கடன் பெற்று செலவு செய்வதைக் கண்டிக்கிறார். திருமணம் என்பது ஓர் ஒப்பந்தம். அதற்கு ஏன் ஆயிரக்கணக்கான ரூபாய் கடன் பெற்றுச் செலவு செய்ய வேண்டும்? அக்கடனில் என் அழிய வேண்டும்? என்று கேட்கிறார்.

“கணவனும் மனைவியும் தங்கள் இலட்சியமாகக் கொள்ள வேண்டியது வரவுக்கு மீறாமல் செலவு செய்வதுதான்.’’  (‘விடுதலை’ _- 27.7.1958)

“தாய் தகப்பன்மார்கள் மகளுக்கு துணி மணி வாங்கிக் கொடுப்பதிலும், நகை போடுவதிலும், ஆடம்பரச் செலவு செய்வதிலும் செலவிடும் பணத்தை ரொக்கமாகச் சேர்த்து வைக்கும்படி பெண்ணின் பேரால் பாங்கியில் போட்டு பெருக்கி வைக்க வேண்டும்.’’ – (‘குடிஅரசு’, 30.6.1940)

“திருமணங்களில் அதிகச் செலவு செய்வதை நிறுத்த வேண்டும். சிக்கனத்தைக் கைக் கொள்ள வேண்டும். திருமணத்தில் செலவழிக்கும் பணத்தை பெண்களின் பெயரால் பாங்கியில்  போட்டு வரும் வரும்படியைக் குழந்தைகள் பிறந்தால் அவற்றைப் பராமரிக்கத் தாதி வைக்கவும், குழந்தைகளுக்கு உடுப்புக்காகவும் செலவழிக்கவும் செய்தால் ஆண்கள், பெண்களைக் கண்டால் பயப்படுவார்கள். சங்கீதக் கச்சேரி வைத்து வீணாகச் செலவு செய்வதையும் நிறுத்திவிட வேண்டும். வேண்டுமானால் இசைத் தட்டுகள் வைத்து இன்புறலாம்.’’ (‘குடிஅரசு’ _- 24.11.1945)

இந்த இரு கருத்துகளையும் வள்ளுவர் முறையே,

ஆகா றளவிட்டி தாயினும் கேடில்லை

போகா றகலாக் கடை (குறள் – 478)

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல

இல்லாகித் தோன்றக் கெடும் (குறள் – 479)

என்ற இரு குறள்களின் மூலம் வலியுறுத்துகிறார். அதாவது வருவாய் குறைவாய் இருப்பது கேடல்ல, செலவு வரவைவிட மிகுவதுதான் கேடு. வரவுக்குள் செலவு இருக்க வேண்டும். தன் சக்திக்கேற்ப செலவு செய்ய வேண்டும். இல்லையேல் கடனால் வாழ்வு அழியும் என்கிறார்.

இங்கு வள்ளுவர் கருத்தும் பெரியார் கருத்தும் ஒத்திருப்பதைக் காணலாம்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *