குடிஅரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

ஜனவரி 01-15

ஈரோடு கோவில் நுழைவு வழக்குத் தீர்ப்பு

– தகவல் : மு.நீ.சிவராசன்

(4.4.1929 அன்று வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு திரு ஈஸ்வரன் என்பவர் பசுபதி, கருப்பன் என்ற இரு ஆதித்திராவிட வகுப்பு இளைஞர்களை அழைத்துக் கொண்டு ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நுழைந்து சுவாமிக்குப் பூசை செய்ய முற்பட்டனர்.  இது பற்றி ஈரோடு வெங்கிட்ட நாயக்கன் மகன் முத்து நாயக்கன் வழக்குத் தொடுத்தார். வழக்கில் தீர்ப்பு 22.1.1930 இல் அளிக்கப்பட்டது தீர்ப்பின் விவரம் கீழே அளிக்கப்படுகிறது.  மேலும், இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டு தண்டனை முழுவதும் தள்ளப்பட்ட செய்தியும் (9.11.1930) குடிஅரசில் காணப்படுகிறது.)

சுமார் 9 மாதங்கட்கு முன்பு ஆரம்பித்து நடந்துவந்த ஈரோட்டுக் கோவில் நுழைவு வழக்கில் ஜனவரி 22-ஆம் தேதியன்று சப்மாஜிஸ்ரேட் அவர்களால் தீர்ப்புச் சொல்லப்பட்டது.  அதாவது:-

திருவாளர்கள்: ஈஸ்வரன் பசுபதி, கருப்பன் முதலிய மூன்று பேர்கள் மீதும் இ.பி.கோ. 295, 297-ஆவது செக்ஷன்கள்படி குற்றஞ்சாட்டப்பட்டு அதற்காக ஒவ்வொருவருக்கும் 60ரூ. வீதம் அபராதமும், தவறினால் 2மாத கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது, இதில் 2, 3 எதிரிகள் அபராதத்தைச் செலுத்திவிட்டார்கள்.  முதலாவது எதிரி, திருவாளர் ஈஸ்வரன் அவர்கள் அபராதத்தைக் கொடுக்க மறுத்து இரண்டுமாத கடுங்காவலைச் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டார்.

திரு. ஈஸ்வரன் அவர்களுக்கு திரு. பி. வரதராஜலு நாயுடு அவர்களிடமிருந்து மனமாரப் பாராட்டுகிறேன்.  உங்களது ஜெயில் வாசம் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு அஸ்திவாரம் போடப்பட்டதாகும் என்று ஒரு தந்தியும் கிடைத்திருக்கிறது.  மற்றும் பலருடைய பாராட்டுச் செய்திகளும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. – (குடிஅரசு 19.1.1930 பக்கம் 10)

“ஈரோடு ஆலயப்பிரவேச வழக்கில் 3 பேர் தண்டனை அடைந்து அவ்வழக்குகள் ஹைக்கோர்ட் அப்பீலில் இருந்தது, நேயர்களுக்கு ஞாபகமிருக்கும்.  அது போலவே சுசீந்திரம் தெருப்பிரவேச வழக்கிலும் 12 பேர் தண்டனை அடைந்து அவ்வழக்கும் திருவாங்கூர் கோர்ட்டில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்யப்பட்டிருந்ததும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கும். இவ்வாரம் மேற்படி இரண்டு வழக்குகளும் அப்பீலில் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் முழுவதும் தள்ளப்பட்டு கேஸ்கள் விடுதலையாகிவிட்டன

– (குடிஅரசு 9.11.1930 பக்கம் 9)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *