முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டர் எனில் ஆசிரியர் ஒருவரையே குறிப்பிட வேண்டும். அதுவும் அன்னை மணியம்மை-யாருக்கு அடுத்துத்தான். காரணம் _ தந்தை பெரியாரின் தொண்டுக்கென்றே, 1943இல் வந்தவர் அய்யாவின் உயிர் உடற்கூட்டை விட்டுப் பிரியும் வரை அகலாது, அணுகிக் காத்தவர்.
ஆசிரியர் வீரமணி அவர்கள், அய்யாவைப் பத்து வயதிலிருந்து வாசித்தவரும், சுவாசித்தவரும் ஆவார். 1944இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாற்றம் பெற்ற சேலம் மாநாட்டில் 11 வயதுச் சிறுவனாக, உணவு இடைவேளையில் மேடையேற்றி முழங்க வைக்கப்பட்டவர்.
1957 வரை பள்ளி, கல்லூரிக் கல்வி என்று வாழ்க்கை கழித்தபோதும் கல்வி தொடரத் தந்தை பெரியார் உதவியவர். 1957இல் அய்யா ஜாதி ஒழிப்புப் போரில் சிறைப்பட்டபோது அன்னை மணியம்மையாருக்கு உடன் சென்ற தந்தை பெரியார் இயக்கப் பணியாற்ற நியமித்த நம்பிக்கைக்குரியவர்.
தந்தை பெரியாரும் அன்னை மணியம்மை-யாரும் கையொப்பமிட்டு மணவிழா அழைப்பு அனுப்பி மணவிழாவை நடத்தி வைத்ததுடன் திருவண்ணாமலையில் வரவேற்பு நிகழ்விலும் பங்கேற்றனர்.
இம்மட்டோ! கடலூரில் கைந்நிறைய வழக்கறிஞர் தொழிலில் சம்பாதித்து வந்தவரை, “வா, நீ வந்து ‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்’’ என்றபோது முக்கல், முனகல் இன்றி ஏற்று, அன்று முதல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக உலகிலேயே நீண்ட காலம் பத்திரிகை ஆசிரியராக விளங்குபவர் இவர் ஒருவரே என எவரும் முறியடிக்க முடியாத சிறப்புப் பெற்றவர். ஆசிரியர் பொறுப்பில் ஒரு நாளேனும் தந்தை பெரியார் கண்டிக்கும்படி கோபம் கொள்ளுமாறு ஒரு நாள் கூட நடந்திராதவர் எனும் பெருமையும் உண்டு. அண்ணாகூட, எங்கள் எவருக்கும் அளித்திடாத உரிமையை அய்யா பெரியார் வீரமணிக்குக் கொடுத்திருக்கிறார் எனப் பெருமையாகக் கூறியதுண்டு.
அந்த அளவிற்கு அய்யாவுடனே பயணித்து ஆசிரியர், “சொந்த புத்தி எனக்கு வேண்டாம் அய்யா தந்த புத்தி போதும்’’ என்று தவறாது உரைத்து அவ்வழியிலேயே உண்மையாகப் பயணித்தவர் _ பயணித்தும் வருபவர். எனவே அய்யாவை முழுமையாக அறிந்த _ உணர்ந்த ஒருவர் உண்டு எனில் அந்த ஒருவர் _ ஒரே ஒருவர் தமிழர் தலைவரே!
எனவே, அய்யாவை அவர் பார்க்கும் -_ பார்த்த பார்வை தனிப்பார்வையாக இருக்கும். அப்பார்வை எத்தகைய ஆய்வுப் பார்வை எனக் காணும் ஆவல் பிறந்தது. உள்ளதை உள்ள-படியே அவர் எடுத்துக் கூறியிருப்பது எழுத்தோவியங்களிலே நாம் காண இயலும்.
தந்தை பெரியாரைப் பற்றி ஆசிரியர் பொதுவாகக் கூறும் கருத்து இது.
“அறிவுலக மேதை, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களது சிந்தனை ஒப்புயர்வில்லா தனித்ததோர் உயரிய சிந்தனையாகும்.
தனக்குச் சரியெனப் பட்டதைத் _ தான் ஒரு முழுப் பகுத்தறிவுவாதி என்ற முறையில் துணிந்து, எதிர்ப்பு புயலெனக் கிளம்பினாலும், அதைத் துச்சமெனக் கருதித் தன் கருத்தை _ கொள்கைகளை எழுதியும் பேசியும் பரப்பிய மகத்தான தலைவர் உயர் எண்ணங்கள் மலரும்சோலை யாம் தந்தை பெரியார் அவர்கள்.
ஒரு தத்துவஞானியின் பார்வையோடு மற்றவர்கள் அணுக அஞ்சும் பல்வேறு சமூகத் தத்துவங்களை, கடவுள், மதம், ஜாதி, ஆத்மா, பெண்ணடிமை, மூடநம்பிக்கை ஆகிய இவைகளைப் பற்றிய விளக்கத்தினை அஞ்சாமல் கூறிய ஒரு ‘சமுதாய விஞ்ஞானி’ எனக் கூறியவர். தந்தை பெரியார் ஓர் அறிவுக் கருவூலம் என்கிறார்.
உலகம் என்பது ஒரு தந்தை பெரியார், ஒரு பேரறிஞர் அண்ணாவையோ மட்டும் கொண்டதல்ல. எத்தனை, எத்தனையோ அறிஞர்கள், சிந்தனையாளர்கள், நாத்திகர்கள், தத்துவ ஞானிகள் என்ற பலப்பலரைக் கொண்டிருக்கிறது. அப்படியானால் தந்தை பெரியாரும் அவர்களைப் போல் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்று என்பதுபோல் தானா?
இல்லை. வலியுறுத்திச் சொல்வதாயின் இல்லவே இல்லை. அப்படியானால் வேறுபாடு உண்டு. தந்தை பெரியாரை எவரோடும் ஒப்பிட முடியாது. ஆம்! தனித்த சிந்தனையாளர்.
ஆசிரியர் வீரமணி தம் பார்வையில் கூறுவார்,
“தந்தை பெரியார் அவர்கள் உலகத்தின் ஒப்பற்ற சிந்தனையாளர் ஆவார்.
மற்ற மாமேதைகள், சிந்தனையாளர்கள், நோபல் பரிசு பெற்ற மேதைகள் அனைவரும் சிந்தனைச் செல்வங்களை மனித சமுதாயத்திற்கு வாரி வாரி வழங்கியிருக்கிறார்கள் என்ற போதிலும், தந்தை பெரியாரின் சாதனைக்கும் அவர்களது பணிக்கும் அடிப்படையில் பல வேறுபாடுகள் உண்டு.’’
இவ்வாறு கூறியவர் தாம் பார்த்த பெரியார் அய்யாவைப் பற்றிய பார்வையினை ஒன்று, இரண்டு, மூன்று எனப் பட்டியலிடுகிறார். இவருடைய பார்வை மேற்போக்கானது அன்று. ஆழமான பார்வை, அகலமான பார்வை, விரிந்த பார்வை, விசாலப் பார்வை என்பதைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டுகளுடன் எடுத்தியம்புவதே சிறப்பு.
முதலாவது பார்வை
“தந்தை பெரியார் அவர்கள் தானே எதனையும் தமது சுதந்திர அறிவாலும், ஆற்றலாலும் எட்டு வயது முதல் உலகியலை நன்கு புரிந்துகொண்ட, வற்றாத வாழ்க்கை அனுபவங்களாலும், பகுத்தறிந்து இந்தச் சமுதாயத்திற்கு நோய் என்ன என்பதை ஆழமாகச் சிந்தித்துக் கண்டு அறிந்தவர்கள் ஆவார்கள். அவர் ஒரு தனித்தன்மை வாய்ந்த பிறரைப் பார்த்துக் காப்பி அடிக்காத சுதந்திர தன்னியல்புச் சிந்தனையாளர் (Original Thinker).’’
இந்தக் கருத்தைக் கண்ணுற்ற ஆசிரியர் தந்தை பெரியாரின் தொண்டை மனிதர் உயிர் வாயு எனவும், உயர்வு வாழ்வு அடைவதற்குப் பிராண வாயுவாகவும் எல்லாத் துறைகளிலும் பயன்பட்டு வருகிறது என்றால் எவருக்கும் அஞ்சாமல் தளராத சிந்தனையாளராக புரட்சியின் உற்பத்திச் சாலையாக அவர்கள் இருந்ததேயாகும். ஆசிரியர்தம் இந்தப் பார்வைக்குச் சான்று, மேற்கோள் ஆகியனவும் காட்டிடத் தவறவில்லை.
சான்று
சென்னை உயர்நீதிமன்ற மறைந்த நீதியரசர் ஏ.எஸ்.பி.அய்யரின், தந்தை பெரியார் நிகழ்த்தவிருந்த உரைக்கு முன்னான முன்னுரை இது:
“கீழை நாடுகளைப் பற்றிப் பெர்ட்ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும்போது இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும், மேற்கோள் காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிடுவதில் மிகவும் தயங்குவார்கள். “நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல் தனது அறிவையே முன்வைத்துப் பேசும் தனித்த சிந்தனையாளர் பெரியார் ஒருவர்தான்’’ என்று குறிப்பிட்டார்.
தந்தை பெரியார் குறளையோ மற்ற வேறு நூல்களையோ பற்றிக் குறிப்பிடுகையில்கூட, “குறளில் வள்ளுவர் கூறியிருக்கிறார். ஆகவே, நான் இதனைக் குறிப்பிடுகிறேன்’’ என்று கூறாது, “நான் கூறியதை அந்த நூலில் கூடக் காணலாம் என்ற அந்த அளவிற்குத்தான் அதைப் பயன்படுத்துவேனே தவிர, குறள் சொல்லிவிட்டது என்று கூறுவது என் பழக்கமல்ல” என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.
இரண்டாம் பார்வை
“மனித சமுதாயத் தொண்டு ஒன்றினையே மய்யமாகக் கொண்டு அதற்குத் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டதோடு அதற்காகத் தன் உடல் பொருள் உயிர் அத்தனையையும் இறுதி மூச்சுள்ளவரை ஒப்படைத்தவர் அய்யாவைத் தவிர வேறு எவர் உண்டு.’’
ஆசிரியரின் இக்கருத்தோட்டம் சரி என்பதற்குப் பேரறிஞர் அண்ணா அவர்களைத் துணைக்கொள்கிறார். “பல நூற்றாண்டுகளாகத் தனது சிந்தனைப் பெட்டகத்தில் உழைப்பில் அடக்கிக் காட்டிய பெருமை அவரது சாதனை. அதைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘Putting centuries into a capsule’ என்று ஆங்கில இலக்கிய நயம் பொருந்திய சொற்றொடரைப் பயன்படுத்தி உவமை காட்டி விளக்கினார்’’ என்கிறார்.
மூன்றாம் பார்வை
மூன்றாவது பார்வைச் சிந்தனை அல்லது சிந்தனைப் பார்வை தந்தை பெரியார் கடைப்பிடித்தொழுகிய நாத்திக நெறி பற்றிய பார்வை. நாத்திக நெறியை வாழ்ந்து காட்டும்படி செய்ததில் அவர்தம் சாதனை உலகச் சாதனை என்கிறார்.
உலகில் வாழ்ந்த மற்ற சிந்தனையாளர்கள் நாத்திகர்கள் வெறும் தத்துவார்த்தங்களைக் கொட்டியவர்களே அன்றி, அவர்கள் ஒரு புதுமைச் சமுதாயத்தை உருவாக்கிக் காட்டவில்லை என்பதைச் சுட்டுகிறார். அது மெய்தான் -_ மெய்ந்நிகர் வாழ்வுதான் என்பதைத் தம் கூர்நோக்கு வாயிலாக வெளிப்படுத்துகிறார்.
“தமிழ்நாட்டில் தந்தை பெரியார்தம் கொள்கைகளை வாழ்க்கை நெறியாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைக் குடும்பங்கள் உண்டு. அவற்றுள் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மூன்றாம் தலைமுறைகளைக் கொண்ட குடும்பங்களாகவும் இன்று உள்ளனர்.”
தந்தை பெரியார்தம் நாத்திகத் தத்துவம் பெற்ற பெரு வெற்றிக்கு இரண்டு சான்றுகளும் காட்டுகிறார்.
1971 தேர்தலில் தலைவர் கலைஞர் பெற்ற வெற்றி எண்ணிக்கை 50 ஆண்டுகளாகியும் எவராலும் முறியடிக்கப்படாத ஒன்று. அதுவும் தந்தை பெரியார் ஆதரித்த தி.மு.க.வை, சேலத்தில் தி.க. மாநாட்டு ஊர்வலத்தில் இராமன் உருவத்தைச் செருப்பால் அடித்ததை வைத்து ‘நாத்திகர்களான தி.மு.க.வினருக்கா உங்கள் வாக்கு’ என்று தம்பட்டமடித்தும் பெற்ற பெரு வெற்றியைச் சான்று காட்டுவார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் மக்களுக்கு விடுத்த அறிக்கையில் வெளியிட்ட மணிமொழிகளைச் சான்று காட்டுவார். “ஒன்றே குலம் ஒருவனே தேவன் -_ இது உண்மைச் சமயம். இன்று ஆஸ்திகம் என்பது உயர்ஜாதியினரின் நலம்; இன்று நாத்திகம் என்பது பெருவாரியான தமிழ்மக்கள் நலம். உங்களுக்கு எது வேண்டும்?’’ பேசியவர் மகாசந்திதானம். மடத்தின் அதிபதியைப் பேச வைத்தது தந்தை பெரியாரின் நாத்திகத் தாக்கம்.
என்பதையெல்லாம் எடுத்துக் கூறிய உரைகள் அருகில் இருந்து அணுக்கத் தொண்டராய், அரவணைப்பும் பெற்ற ஆசிரியர் வீரமணியின் பார்வை. வற்றாத சிந்தனைச் செல்வத்தைப் பலப்பல தலைமுறைகளுக்கும் வாரி வாரி வழங்கிய சிந்தனைச் செல்வம் என்று கண்ட தமிழர் தலைவர் பார்வை.
இந்த முன்னோட்டத்தில் தந்தை பெரியாரின் கடவுளும் மதமும், பெண்ணடிமை ஒழிப்பு ஆகியவற்றை உள்வாங்கி வாங்கிப் புடம் போட்டுத் தம் ஆழ்ந்த பார்வையைத் தந்தை பெரியாரின் தத்துவ விளக்கத்தை விளக்குகிறார் ஆசிரியர். அதற்கு _ இந்தப் பார்வைக்கு அவர் அளித்த தலைப்பு “பெரியார் ஓர் அறிவுக் கருவூலம்’’.ஸீ