பெரியார் பன்னாட்டமைப்பு (அமெரிக்கா) சார்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, உலகத் திராவிட மகளிர் மாநாடு காணொலி வாயிலாக நியூயார்க் நேரம் காலை 10:00 மணி, இந்திய நேரப்படி நேற்று (12.12.2021) இரவு 8:30 முதல் நள்ளிரவு 12:05 வரை நடைபெற்றது. அந்நிகழ்வில் தமிழர் தலைவருக்கு ‘பகுத்தறிவுப் போராளி’ என்ற பட்டத்தை வழங்கினார்.
தொடக்கவுரை
திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி மாநாட்டில் ஆற்றிய தொடக்கவுரையில், “பகுத்தறிவுப் போராளி’’ என்று நாம் பட்டம் வழங்கி _ அடைமொழி வழங்கி மகிழ்கிறோம். ஆனால், அவர் ஆற்றியிருக்கும் பணிகளை நினைத்துப் பார்த்தால், இவையெல்லாம் அவருக்கு ஈடாகவில்லை. நாம் வழங்கி மகிழ்ச்சி கொள்கிறோம் என்பது தான் உண்மை. ஆசிரியர் நடத்திய மகளிர் விடுதலை மாநாடுகள் செய்திருக்கும் புரட்சி சிறப்பானது. பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகளை, உலகப் பெண்ணியக் கருத்துகளோடு ஒப்பிட்டு எடுத்துரைக்க பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மூலமாக ஏராளமான பெண்களுக்கு வாய்ப்பளித்தவர் ஆசிரியர். சிந்தனை, செயல், மாநாடுகள் என்று எல்லா தளத்திலும் பெரியாரைக் கொண்டு சேர்க்கும் ஆசிரியரை நன்றியோடு போற்றுவோம்’’ என்று உரையாற்றினார்.
பெரியார் பிஞ்சுகள் இனியா எழில்வடிவன், இலக்கியா எழில்வடிவன் ஆகியோர் பெரியார் பிஞ்சுகள் சார்பில் வாழ்த்துப் பாடல் பாடினர்.
கருத்தரங்கம்
மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி இணைப்புரையுடன் ‘ஆசிரியர் வாழ்க்கைப் பாதை’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்செல்வி ‘1944முதல் 1964 வரை’ என்னும் தலைப்பிலும், மாநில மகளிர் பாசறைச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை ‘1964 முதல் 1984 வரை’ என்னும் தலைப்பிலும், அறிவுப்பொன்னி (பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா) ‘1985 முதல் 2005’ எனும் தலைப்பிலும், மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி ’2006 முதல் 2021 வரை’ எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் மருத்துவர் சிகாகோ சோம.இளங்கோவன் எழுதிய ‘வீரமணியார்’ எனும் பாடல் வெளியிடப்பட்டது.
உலக திராவிட மகளிர் மாநாட்டின் தீர்மானங்களை முன்மொழிந்து அருள்செல்வி, ச.இன்பக்கனி ஆகியோர் உரையாற்றினார்கள்.
காட்சிப்பதிவு
பெரியார் வலைக்காட்சி உருவாக்கிய “பெண்ணே…பெண்ணே போராடு’’ தலைப்பில் காட்சிப்பதிவு ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பட்டமளிப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘பகுத்தறிவுப் போராளி’ என்னும் பட்டத்தை, பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா மருத்துவர் சரோஜா இளங்கோவன் வழங்கி உரையாற்றினார்.
சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து பெரியார் பன்னாட்டமைப்பு ரவிசங்கர் கண்ணபிரான் உரையாற்றினார்.
கனிமொழி எம்.பி. சிறப்புரை
தி.மு.க. மக்களவைக் குழுத்துணைத் தலைவர், தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., சிறப்புரையில், “தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு சமூகப் போராளியாக, பகுத்தறிவுப் போராளியாக தன் பயணத்தை மேற்கொண்டிருக்கக்கூடிய ஒரு தலைவருக்கு இன்று ‘பகுத்தறிவுப் போராளி’ என்னும் பட்டத்தை நாம் தருகிறோம். எந்தச் சூழலிலும் கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர் ஆசிரியர்’’ எனச் சிறப்புரை ஆற்றினார்.
‘அறியப்படாத ஆசிரியர்’ எனும் தலைப்பில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி உரையாற்றினார். பன்னாட்டளவில் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய மகளிர் விவரம் வருமாறு,
க. பார்வதி, மலேசியாவிலிருந்து ஆசிரியர் நீலமலர், ஆசிரியர் பாக்கியம் லட்சுமணன், செல்வி மணிமொழி, ஈழத்திலிருந்து மட்டக்களப்பு நிலாந்தி, சிங்கப்பூரிலிருந்து அசுவினி, தமிழ்மதி, துபாயிலிருந்து சாருமதி, சவுதி அரேபியாவிலிருந்து ராபியத் பசாரியா, ஃபிரான்சு நாட்டிலிருந்து விஜி, மியான்மாவிலிருந்து கா.கனகா, சலாமத்பானு, ஜெருமனியிலிருந்து முனைவர் சுபாசினி, இங்கிலாந்திலிருந்து சினேகா ஹரீசு, பிரின்சசு பேராண்டாளு மங்கை, ஆசுதிரேலியாவிலிருந்து அல்லி, இந்தியானாவிலிருந்து கலைச்செல்வி கோபாலன், சிகாகோவிலிருந்து கலைச்செல்வி வேலாயுதம், வாஷிங்டன் மேரிலாந்து பால்திமோரிலிருந்து சரோஜினிராஜ், வாஷிங்டன் ரெஸ்டானிலிருந்து பிரபா ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.
தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ஏற்புரை
“எனக்குப் பட்டம் வழங்கவில்லை; தொடர்ந்து செயல்படச் சொல்லி சட்டம் செய்திருக்கிறீர்கள். அந்த ஆணையை _ சட்டத்தை ஏற்று நடப்பேன். சோர்வுறாது, அயராது பணியாற்றக் கட்டளை யிட்டிருக்கிறீர்கள். அதை நிறைவேற்றுவேன்.
போராளியாகவே இரு என்று சொல்லியிருக்கிறீர்கள். போராளியாக என்னை உருவாக்கிய பட்டறை தந்தை பெரியாரின் பட்டறை. சிறப்புகளெல்லாம் தந்தை பெரியாருக்கு, அன்னை மணியம்மையாருக்கு, கொள்கை உறவுக் குடும்பத்தவர்கள், அனைவரும் சொன்னதைப் போல என் வாழ்விணையர் ஆகியோருக்கும் என்றும் என் நன்றி. உலகம் முழுக்க இருந்து வாழ்த்தியிருக்கிறீர்கள் என்று சொல்வதைவிட, ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள்.
எனக்குக் கிடைக்கும் சிறப்புகளெல்லாம் எனக்குரியவை அல்ல; அவை அனைத்தும் நம் அறிவாசான் தந்தை பெரியாருக்கு உரியது. இந்தச் சிறப்பையும் அவருக்கே உரித்தாக்குகிறேன் என தமிழர் தலைவர் ஏற்புரையாற்றினார்.
மாநாட்டின் நிறைவாக இசபெல்லா நன்றி கூறி உரையாற்றினார்.