“இனி எவரும் கவலைப்பட வேண்டாம்! காசி நகரில் நமது பிரதமர் நரேந்திர மோடி புதுப்பிக்கப்பட்ட காசி விசுவநாதர் கோவில் வளாகத்தைத் திறந்து வைத்துவிட்டார்! முன்பு 3000 சதுர அடியில் இருந்த கோயில் வளாகம் 5 லட்சம் சதுர அடியாக விரிவுபடுத்தப்பட்டு விட்டது!’’
(குந்தவும் குடிசையின்றி, நடைபாதையில் வாழ்ந்து சாகும் மக்களையும் மனதைக் கல்லாக்கி நினைத்துப் பாருங்கள்!)
அடிக்கல் நாட்டப்பட்ட நாள்: 8.3.2019 (மக்களவைத் தேர்தல் நடந்த அந்தக் காலகட்டம்) புதிதாகக் கட்டப்பட்ட கட்டடம் 23. திட்டச் செலவு ரூ.200 கோடி. முதற்கட்ட பணிச் செலவு ரூ.339 கோடி. மூன்று தங்கக் கோபுரம் விரிவாக்கத்துக்காக 300 தனியார் சொத்து, 1400 கடைக்காரர்கள், குத்தகைதாரர், வீட்டு உரிமையாளர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன.
புதுப்பிக்கப்பட்ட காசி விசுவநாதர் கோயில் வளாகத்தைத் திறந்து வைத்த பிரதமர் _- யாரும் சாதிக்க முடியாத பெருஞ் சாதனையை நிகழ்த்திவிட்டதாகத் தன் முதுகைத் தானே தட்டிக் கொள்கிறார்.
“இந்தியாவில் சக்தியை _ பக்தியை வெல்ல முடியாது!’’ -காசி கோவில் விழாவில் பிரதமர் பெருமிதம் என்ற ‘தினமலர்’ எட்டுப் பத்தி தலைப்பிட்டு ‘எட்டு வீடு கட்டி’ விளையாடுகிறது.
இந்தியாவின் அந்தப் பக்தியும் சக்தியும் சாதித்தது என்ன? என்று கேட்டால், ‘அய்யகோ! கடவுள் மத விடயத்தில் மூக்கை நீட்டுகிறார்களே!’ என்று பல மைல் தூரம் கேட்கும் ஒப்பாரிதான்.
காசியில் கங்கையில் மூழ்கி மூழ்கி எழுந்த பிரதமர், மூன்று முத்திரைகளை அறிவுரையாகப் பதித்தார்.
‘ஒன்று, தூய்மை; இரண்டு, புதுமை; மூன்று, சுயசார்பு இந்தியா’ என்றார்.
மிகவும் சரிதான். அவர் சொன்ன தூய்மை எது? கங்கையில் மூழ்கி மூழ்கி எழுந்தாரே, அந்தக் கங்கையின் தூய்மை என்ன தெரியுமா?
டாக்டர் ஹஷ்மீ இவ்வாறு எழுதுகிறார்- _
“பாபம் போக்கும் காசி நகரத்தின் சாக்கடை முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டு மென்றால், காசியில் மட்டும் 20 மில்லியன் காலன் சாக்கடை நீர் கலக்கிறது. நாள்தோறும் 400 பிணங்கள் கங்கைக் கரையில் எரிக்கப்படுகின்றன; அவை கங்கையில் கரைக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் பயன்படாத 9000 கிழட்டுப் பசுக்கள் கங்கையில் வீசி எறியப்படுகின்றன.
காசியில் 2 லட்சம் மக்கள் பட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இத்தொழிலில் உண்டாகும் ரசாயனக் கழிவுநீர் முழுவதும் கங்கையில்தான் நாள்தோறும் கலக்கிறது. (இந்தக் கங்கைக்குப் பெயர்தான் ‘நவாமி கங்கை’ -_ அதாவது ‘வணக்கம் கங்கை’யாம்!) இப்படி சாக்கடை நீரும் ரசாயனக் கழிவு நீரும், செத்த மனிதர்களும், ஆடுமாடுகளும் மிதக்கும் ‘புனித’ கங்கை நீரைத்தான் செம்புகளில் அடைத்து நாடு முழுதும் மக்கள் எடுத்துச் செல்லுகின்றனர். நாள்தோறும் மோட்சத்துக்குப் போவதற்காக 70 ஆயிரம் மக்கள் இந்தச் சாக்கடையாகிய கங்கையில் குளித்து முழுகுகிறார்கள்.
இந்தச் சாக்கடையைச் சுத்திகரிக்கத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு 13,400 கோடி ரூபாயை ஒதுக்கி, இதுவரை 11,000 கோடி ரூபாயைக் கொட்டி அழுதுள்ளது-.
இந்தியாவில் குழந்தைகளின் மரணம் 1000க்கு 94 சதவிகிதமாகும். ஆனால், விசுவநாதர் குடியிருக்கும் காசியையும் அதனைச் சுற்றிலும் இருக்கும் பகுதிகளிலும் குழந்தை மரணம் 133.94 சதவிகிதம் ஆகும்.
புண்ணிய நீர் என்று சொல்லப்படும் ஒவ்வொரு நதியின் யோக்கியதை என்பதே இதுதான்.
விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்ச்சியையும் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51_A(h) கூறுகிறதே _ அதிலிருந்து பிரதமருக்கு மட்டும் விதிவிலக்கு போலும்!
இதுபோன்ற மத நிகழ்ச்சிகளில் பிரதமர் ஒருவர் பங்கேற்கலாமா? இந்திய அரசமைப்புச் சட்டம் முகவுரை என்ன சொல்லுகிறது?
“We the people of India having solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic and to secure to all citizens.”
மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச நாடு என்று இந்திய அரசமைப்பு சட்டம் பறைசாற்றுகிறது.
ஆனால், பா.ஜ.க. தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு _ குடியரசு நாளில் மதச்சார்பின்மை (Secular) என்ற சொல்லை நீக்கிவிட்டு ஊடகங்களுக்கு விளம்பரம் கொடுக்கிறது என்றால், நடப்பது எத்தகைய அரசு என்று முடிவு செய்துகொள்ளலாம்.
‘செக்குலர்’ (Secular) என்ற சொல்லுக்கு என்ன பொருள்? அச்சொல் எந்த மொழியில் இடம் பெற்று இருக்கிறதோ அந்த மொழியில் என்ன பொருள் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிறார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். அரசுக்குச் சம்பந்தமற்றது என்றுதானே பொருள்? ஆட்சியில் உள்ளவர்கள் மத விழாக்களில் கலந்து கொள்ளலாமா? 1994ஆம் ஆண்டில் 13 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கூறிய தீர்ப்பு என்ன? இதோ:
அரசுக்கும் – மதத்துக்கும் தொடர்பில்லை
புதுடில்லி, மார்ச் 15, (1994). இந்தியாவில் எந்த ஓர் அரசியல் கட்சியும் _ ஒரே நேரத்தில் மதத்தையும், அரசியலையும் பிரச்சாரம் செய்ய முடியாது; மதத்தையும், அரசியலையும் ஒன்றாகக் கலப்பது _ அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கே எதிரானது என்று 13 நீதிபதிகள்அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் _ தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்த மூன்று மாநில ஆட்சிகளை அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்திக் கலைத்தது தொடர்பான வழக்கில் 13 நீதிபதிகள் அடங்கிய உச்நீதிமன்ற ‘பெஞ்ச்’சின் தீர்ப்பு என்ன சொல்கிறது?
“அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மைத் தத்துவத்துக்கு முரணான கோட்பாடுகளை முன்வைத்து _ எந்த ஓர் அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ தேர்தலில் போட்டியிடுவது சட்டரீதியாகக் குற்றம்’’ என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
“ஒரு மதத்தைப் பற்றியோ, அல்லது மத உட்பிரிவுகள் பற்றியோ, மதக் கிளைகள் பற்றியோ, ஆட்சியின் கண்ணோட்டம் எப்படி இருந்தாலும் அரசின் மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் _ மதத்தைக் கலக்கக் கூடாது. அரசுப் பிரச்சினைகளில் மதத்துக்கே இடம் இல்லை.’’
எந்த ஒரு மாநில அரசும் _ மதச் சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதோ, மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ, அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
6 நீதிபதிகள் தனித்தனியாக அளித்துள்ள தீர்ப்புகளில் _ அரசியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எடுத்துக் காட்டியுள்ளனர். ஓர் ஆட்சி _ மத சகிப்புத் தன்மையை மேற்கொள்வதாலோ _ ஒரு குடிமகனுக்கு மதத்தைப் பின்பற்றவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ அனுமதிப்பதாலோ, அந்த அரசு மதச்சார்பு அரசாகிவிட முடியாது. அரசின் மதத்தோடு தொடர்பில்லாத மற்றும் மதச்சார்பின்மை தொடர்புடைய எந்த ஒரு செயலிலும் மதத்தின் குறுக்கீட்டுக்கு இடமே கிடையாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
“எங்களுடைய இந்தக் கருத்துகளை சிலர் ஜீரணிக்க முடியாமல் போகலாம். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது’’ என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
“அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவோம் என்று உறுதி ஏற்று _ நாங்கள் பதவிப் பிரமாணம் எடுத்தவர்கள். எனவே, அரசியல் சட்டத்தின் பிரிவுகள் கூறுவதையும் _ அது என்ன பொருளில் கூறப்பட்டுள்ளது என்பதையுமே, எங்களால் கூற முடியும்’’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
“மதச்சார்பின்மை என்பதே அரசியல் சட்டத்தின் இலக்கு. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சமே மதச்சார்பின்மைதான். அரசியல் சட்டத்தின் இந்தக் கொள்கையோடு முரண்படுகிற எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது’’ என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
நீதிபதி பி.பி.ஜீவன் (ரெட்டி) தெரிவித்துள்ள கீழ்க்கண்ட கருத்தை _ ஏனைய நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் _ அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கோ அல்லது அதிகாரத்தில் பங்கு கொள்வதற்கோதான் உருவாகின்றன. அதுதான் அக்கட்சிகளின் நோக்கம்.
சில தனி மனிதர்களைக் கொண்ட ஓர் அமைப்பு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடலாம்; அப்படியானால் அது ஒரு மத அமைப்பு. மற்றொரு அமைப்பு _ கலாச்சார மேம்பாட்டுக்கு பிரச்சாரம் செய்யலாம்; அப்படியானால் அது ஒரு கலாச்சார அமைப்பு. இந்த அமைப்புகளின் நோக்கம் _ அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது அல்ல; ஆனால், அரசியல் கட்சிகளின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். ஒரு ஜனநாயக ஆட்சி அமைப்பு _ அரசியல் கட்சிகள் இல்லாமல் செயல்பட்டு விடமுடியாது.
அரசியல் கட்சிகள் என்பவை அரசியல் சட்டத்தின் அங்கங்கள்; அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது அரசியல் கட்சிகளுக்கும் அதுவே அடிப்படை அம்சமாகிவிடுகிறது.
அரசியல் சட்டம் _ மதத்தையும், அரசியலையும் ஒன்றாகக் கலப்பதை அனுமதிக்கவில்லை. இரண்டும் தனித்தனியாகப் பிரிக்கப்பட வேண்டும். இந்த அரசியல் சட்டம் _ இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் காலம் வரை _ இதை யாரும் மறுத்து விட முடியாது.’’
_ இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ண அய்யர்,
‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா’ என்ற ஆங்கில இதழில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:
“அரசாங்கமோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களோ அல்லது அமைச்சர் போன்ற பதவியில் இருப்பவர்களோ, மத காரியங்களுக்கு உதவியாக இருப்பதோ, மதக் காரியங்களில் நேரிடையாக ஈடுபடுவதோ மதத்தின் கவர்ச்சியை அதிகப்படுத்துவதில் முக்கியஸ்தர்களாகத் தொடர்பு கொள்வதோ கூடாது’’ என்று எழுதியுள்ளாரே, இதற்கு என்ன பதில்?
அமெரிக்காவில் நிகழ்ந்த ஒன்றும் முக்கியமானது.
1979ஆம் ஆண்டு போப்பாண்டவர் அமெரிக்க நாட்டின் மிக முக்கிய நகரமான வாஷிங்டனுக்கு வருகை தந்தார்.
போப்பின் தொழுகைக்காக வாஷிங்டனில் 200 ஆயிரம் டாலர் செலவில் மேடை ஒன்றைக் கட்டியது வாஷிங்டன் நகராட்சி. பின்னர் அந்தச் செலவை யார் ஏற்றுக் கொள்வது என்பதில் சர்ச்சை ஏற்பட்டது. நகரத்தில் நகரப் பொது மக்களின் வசதிக்காகக் கட்டப்பட்டது என்பதால் அதை நகர நிருவாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ‘சர்ச்’ நிருவாகம் கூறியது.
இதனை ஒட்டித் தொடரப்பட்ட வழக்கில், “சர்ச்சுதான் இந்தச் செலவை ஏற்க வேண்டும்; மத விவகாரங்களுக்காக அரசு பணம் செலவிடுவது அமெரிக்க அரசியல் சட்டத்துக்கு விரோதமானது’’ என்று நீதிபதி தீர்ப்புக் கூறினார்.
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை ஒட்டிச் செல்லும் ஒன்றிய அரசு இதற்கு என்ன சொல்லப் போகிறது?
பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு ஓடும் தண்டவாளம் ஒன்று _ இந்துத்துவா; மற்றொன்று _ முதலாளித்துவம்.
‘செக்குலர்’ என்ற சொல்லைத் ‘தலையை சுற்றி’த் தூக்கி எறிந்தது போல _ ‘சோசலிஸ்ட்’ என்ற அரசமைப்புச் சட்ட சொல்லையும் சொத்தையாக்கிவிட்டது.
அதானி, அம்பானி வகையறாக்கள் வைத்ததுதான் சட்டம்.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு 24.2.2019 அன்று பிப்ரவரி மாதம் அலகாபாத் கும்பமேளாவில் குளித்துவிட்டு அங்குள்ள ஓர் அறையில் 8 துப்புரவுத் தொழிலாளர்களின் கால்களைக் கழுவினார் _ பிரதமர் நரேந்திரமோடி.
2014ஆம் ஆண்டு தேர்தல் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து கார்ப்பரேட்டுகளின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர், மாநிலத் தேர்தல் பரப்புரையிலும் கலந்துகொண்டார்.
மும்பையில் நடந்த ‘மேக் இன் இந்தியா’ தொடக்க விழாவில் பல கோடிகளுக்கு விளம்பரம் செய்து விழாக்களில் கலந்து-கொண்டார். அந்த விழா மேடை தீப்பிடித்து எரிந்து கோடிகள் சாம்பலானதுதான் மிச்சம்.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தின்-போது இந்திய பொதுத்துறை நிறுவனங்களின் உயரதிகாரிகளைத் தன்னோடு அழைத்துச் சென்று தொழில் மற்றும் வணிகம் தொடர்பான ஒப்பந்தங்களைப் போடுவதுதான் இதுவரை நடைமுறையாக இருந்தது. ஆனால், மோடியோ அப்படியே தலைகீழாக அம்பானி, அதானி இவர்களது நிறுவனங்களின் விற்பனைப் பிரிவுத் தலைவர்களை மட்டுமே அழைத்துச் சென்றார்.
2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற மோடி தன்னுடன் அதானியை அழைத்துச் சென்றார். அழைத்துச் சென்றது மட்டுமல்ல; ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பெரும் நிலப்பரப்பில் நிலக்கரி எடுக்கும் ஒப்பந்தத்தைத் தானே முன்னின்று அதானிக்குப் பெற்றுத் தந்தார். அது மட்டுமல்லாமல் 5000 கோடி ரூபாய் இந்திய ஸ்டேட் வங்கியிலிருந்து கடன் வாங்கப் பிரதமரே பரிந்துரை செய்தார். (வங்கி அதிகாரியும் உடன்அழைத்துச் செல்லப்பட்ட விசித்திரத்தை என்ன சொல்ல?)
2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு கொண்டு வந்தார். அதில் ஒட்டுமொத்த நாட்டுப் பொருளாதாரமே சரிந்துபோனது. ஆனால், மோடிக்கு நெருக்கமான கார்ப்பரேட் நிறுவனத்தின் லாபங்களோ பன்மடங்கு அதிகரித்தது. ஆனால், பொருளாதார நலிவு பற்றிக் கவலைப்படாமல் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக ஜி.எஸ்.டி., இறக்குமதிச் சட்டத் தளர்வு என சலுகைகளைத் தாராளமாக அள்ளிக் கொடுத்தார். 2014ஆம் ஆண்டு ‘போபர்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் 37ஆம் இடமிருந்த அதானியை உலகின் முதல் 5 பணக்காரர் பட்டியலில் கொண்டு வந்த பெருமை இந்தியப் பிரதமரையே சாரும்.
நாடே பொருளாதாரச் சிக்கலில் மாட்டித் தவிக்கும்போது 2019ஆம் ஆண்டு தேர்தல் வந்தது. உடனடியாக தனது வேடத்தை மாற்றினார். கும்பமேளாவிற்குச் சென்றார். இதனை நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்புவதற்காக மட்டுமே தூர்தர்ஷன் உள்பட அரசு ஊடகங்கள் பலகோடி ரூபாய்களைச் செலவழித்தது. தனியார் தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்பில் ஈடுபட்டன.
சினிமா செட்டிங் போலவே ரூ.17 லட்சத்திற்கு அறை ஒன்றைக் கட்டி, அங்கு பல கோணங்களில் விலை உயர்ந்த காமிராக்களைப் பொருத்தி, தூய்மைப் பணியாளர்களின் கால்களைக் கழுவினார். இதற்கான செலவு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டபோது, இந்த சில நிமிடம் நடத்தப்பட்ட கால்கழுவும் நிகழ்ச்சிக்காக ரூ.63 லட்சம் வரை செலவழிக்கப்பட்டது என்று தெரியவந்தது. இந்தக் கால்கழுவும் நிகழ்ச்சி தேர்தலில் பெரிதும் பயன்படுத்தப்பட்டது.
கரோனா இந்தியப் பொருளாதாரத்தை முடக்கினாலும், மோடியின் நண்பர்களின் வணிகம் முடங்கவில்லை. உலகத்தில் உள்ள பல பெரு நிறுவனங்கள் கிட்டத்தட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தியதால் பங்குச் சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்திய போது, இந்தியாவில் மட்டும் ரிலையன்ஸ், அதானி தொழில் முதலீடுகளும் அவர்களின் லாபமும் 400 மடங்கு அதிகரித்து, உலகின் அனைத்துத் தொழில் முனைவோரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இதோ, மீண்டும் உத்தரப்பிரதேச தேர்தல். இந்தத் தேர்தல் வெற்றி என்பது 2024ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு முன்னோட்டம் என்று பார்க்கப்படுகிறது.
அதே போல் மோடியும் உத்தரப்பிரதேசத்திற்கான திட்டங்களை வாரி இறைக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் 7 விமான நிலையங்கள் கட்டும் திட்டம், நதிநீர் இணைப்புத் திட்டம் என பல திட்டங்களை தொடர்ந்து அறிவிக்கிறார். மாதத்திற்கு இரண்டு முறை உத்தரப்பிரதேசத்திற்குப் பயணம் செய்கிறார்.
இப்போது மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள காசி கோவில் புனரமைப்புத் திட்டத்தைத் துவக்கி வைத்து படகில் சவாரி, ஒரு நாளைக்கு 6 ஆடை மாற்றுதல் என இருந்தவர், மீண்டும் கங்கையில் தலைமுழுகுகிறார். காசி கோவில் புனரமைப்புப் பணியை நடத்தியவர்களோடு உணவு உண்ணுதல், வேலை செய்தவர்களுக்குப் பூத்தூவி மரியாதை செய்தல் என்ற பெயரில் மக்களைக் கவரும் புனைகள். இறுதியாக இரவில் கங்கைக் கரையில் ஒளிஒலிக் காட்சி இசையைக் கண்டு ரசிக்கிறார்.
இவை அத்தனையும் தேர்தல் நாடகம் என்று மக்கள் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். காசி கோவில் புனரமைப்புப் பணி மட்டும் ரூ.350 கோடி என்று அரசு அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் மோடியின் வாரணாசி பயணத்திற்காக ரூ.28 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதே வாரணாசி கங்கைக் கரையில்தான் மே மாதம் கரோனாவால் இறந்தவர்களில் 200க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தன. கடந்த ஆண்டு முன்னறிவிப்பின்றி மோடி அறிவித்த முழு அடைப்பால் இந்தியாவெங்கும் நடைபயணமாக உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களுக்குச் சென்ற தொழிலாளர்களில் 600க்கும் மேற்பட்டோர் சாலையிலேயே மரணமடைந்தனர். பலநூறு குழந்தைகள் அனாதைகள் ஆயினர். கண் எதிரே நூற்றுக்கணக்கானோர் மும்பை, டில்லி, சென்னை, அய்தராபாத், சூரத் உள்ளிட்ட தொழில் நகரங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டு இருந்தபோது, அவர்களுக்கான எந்த ஒரு ஆறுதல் அறிவிப்பும் விடாமல் ‘விளக்கேற்றுங்கள், கைதட்டுங்கள்’ என்று கூறிக்கொண்டு இருந்த பிரதமர் மோடி தேர்தல் நெருங்கிய பிறகு மீண்டும் அந்த மக்களை நினைக்கத் தொடங்கிவிட்டார்.
அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ராமர் கோவிலை இதே பிரம்மாண்டத்தில் கட்டி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற திட்டத்தின் துவக்கமாகத்தான் காசி கோவில் மோடியின் திட்டம்.
பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய உலக நாடுகளின் வறுமை கணிப்பு ஆய்வில் இந்தியாவுக்கு 2ஆம் இடம் கிடைத்துள்ளது.
இந்தியா வளரும் நாடுகளில் முதன்மையானது என்பதெல்லாம் வார்த்தை ஜாலம்தான். ஏழை நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த ஆய்வில் கிடைத்த தகவலின்படி உலகின் 49 நாடுகளின் மொத்த ஏழை மக்கள் தொகையில் 40 சதவிகித மக்கள் இந்தியாவில் உள்ளதாக ஆக்ஸ்போர்டின் பல பரிமாண வறுமை குறியீடு (MPI) 2014 தெரிவிக்கிறது.
ஆனால், கோயில்களிலோ தங்கம் 20 ஆயிரம் டன் (‘தினமலர்’ 4.4.2016) ஒன்றுக்கும் பயனின்றிக் குறட்டை விட்டுத் தூங்குகிறது.
வேலைவாய்ப்பு என்கிறபோது ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை என்று நீட்டி முழங்கியது எல்லாம் உண்டு.
உண்மை நிலை என்ன? 15_64 வயதுடைய 65 கோடி பேர் இந்தியாவில் வேலையற்றுக் கைபிசைந்து நிற்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கணக்கில் ஒன்றரைக் கோடி பெருகுகிறது.
இரவு உணவுன்றி இந்தியாவில் உறங்கச் செல்பவர்கள் 30 விழுக்காடு. (பசியில் உறக்கம்தான் எப்படி வரும்?)
ஊட்டச்சத்துக் குறைவால் நலிந்த குழந்தைகள் இந்தியாவில் 45 விழுக்காடு (‘தினமணி’ 1.2.2016)
வளர்கிறது இந்தியா! நம்பித் தொலைக்கத்தான் வேண்டும்.
ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் என்று அள்ளி விட்டவரும் இதே மோடிஜிதான். இதை நினைவூட்டியபோது உள்துறை அமைச்சராகவிருந்த அமித்ஷா சொன்னது என்ன தெரியுமா?
‘ஜும்லா’ _ அதாவது போறபோக்கில் சொல்லும் ஏமாற்று வார்த்தை.
ஒரு பிரதமரின் நிலையே இதுவென்றால் இதனை எந்தத் தரத்தில் வைப்பது? மக்கள் என்றால் மக்கல் என்ற நினைப்போ!
மதவாதமும் _ முதலாளித்துவமும் கைகோத்து நாட்டை நாசத்தின் விளிம்பில் ஏற்றித் தள்ளாமல் விடமாட்டார். இந்த நிலையைத் திசை திருப்பவே மக்களின் பக்தி உணர்ச்சியை _ பகடைக்காயாக்கி காசி கோயில் புனருத்தாரணம், கங்கை சுத்திகரிப்பு, ராமன் கோயில், இத்தியாதி இத்தியாதி…
மக்கள் விழித்து எழாவிட்டால் தலையில் மிளகாய்தான்!ஸீ