எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (89)

டிசம்பர் 1-15,2021

ஆர்.எஸ்.எஸ் கருத்தை அன்றே கூறிய பாரதி

நேயன்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் 1925ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தன்று தொடங்கப்பட்டது. பாரதியார் மறைந்ததோ 11.9.1921இல். ஆக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே பாரதி மறைந்து விட்டார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று என்ன என்ன கொள்கைகள் மேற்கொண்டிருக்-கிறதோ, அவை அனைத்தையும், அவ்வியக்கம் உருவாகும் முன்பே எடுத்துக் கூறி ஆர். எஸ். எஸ். அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தவர் பாரதியே ஆவார். அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.

இந்தியாவிற்குப் பாரத தேசம் என்ற பெயர்தான் வேண்டும் என்பதற்கான காரணத்தை பாரதி கூறுகிறார்.

“பாரதம் பரதன் நிலைநாட்டியது. இந்தப் பரதன் துஷ்யந்த ராஜாவின் மகன். இமயமலை முதல் கன்யாகுமரி முனை வரையிலுள்ள நமது நாட்டை இவன் ஒன்று சேர்த்து அதன்மிசை முதலாவது சக்ராதிபத்தியம் ஏற்படுத்திய படியால் இந்நாட்டிற்கு பாரத தேசம் என்ற பெயர் உண்டாயிற்று.’’

இன்றைக்கும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இந்தப் பெயர்தான் வேண்டும் என்கின்றனர்.

பாரதியார் கூறுவதுபோல் இந்தியா முழுவதையும் பரதன் ஆண்டதாக வரலாற்றுச் சான்று ஏதும் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் 56 தேசம் இருந்ததாகவும், 56 அரசர்கள் ஆண்டதாகவும் தான் பாரதக் கதையிலும் காணமுடிகிறது.

ஆங்கிலேயர் வருவதற்குமுன் இந்தியா என்ற ஒரே நாடு இருந்ததற்கான சான்று எதுவுமே இல்லை.

இசுலாமியர்கள் இந்தியாவை ஆண்ட பொழுது மத மாற்றம் ஏற்பட்டது குறித்துப் பாரதியார் குறிப்பிடுவதாவது:

“திப்பு சுல்தான் காலத்தில் முகமதிய சேனாதிபதியொருவன் சிறிய படையுடன் வந்து பாலக்காட்டுக் கோட்டையின் முன்னே சில பிராமணர்களை மேல் அங்கவஸ்திரத்தை உரித்து நிற்கும்படிச் செய்வித்து, பிராமணர்-களை அவமானப்படுத்திய கோரத்தைச் சகிக்க மாட்டாமல் யாதொரு சண்டையுமின்றி தம்பிரான் இனத்தார் கோட்டையை விட்டுப் போய்விட்டார்கள். திப்பு சுல்தான் கோழிக்-கோட்டில் ஹிந்துக்களை அடக்க ஆரம்பஞ் செய்தபொழுது, இருநூறு பிராமணரைப் பிடித்து முசுலீம் ஆக்கிக் கோமாமிசம் புசிக்கச் செய்தான்’’ என்கிறார் பாரதியார்.

ஆனால் உண்மையில் திப்புசுல்தான் அவ்வாறு செய்ததற்குச் சான்றாதாரம் நமக்குக் கிடைக்கவில்லை. மாறாக, திப்புசுல்தான் பார்ப்பனர்களை ஆதரித்த செய்திகள்தான் நமக்குக் கிடைக்கின்றன. திப்புவின் ஆட்சியில் 45,000 முதல் 50,000 பார்ப்பனர்கள் அரசுப் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் தவறு செய்தால் தண்டிக்கும் உரிமையைக் கூட அவன் ஏற்றுக் கொள்ளாமல் சிருங்கேரி சங்கராச்சாரி-யாரிடமே ஒப்படைத்துள்ளான். திப்பு, சிருங்கேரி சங்கரமடத்திற்கு 1791 இல் எழுதிய கடிதம் மூலம் இதை அறிய முடிகிறது.

“There are more than 45 to 50 thousand Brahmins in our service. It is wondered if the Government alone is bestowed with Judiciary powers of handling their cases and punishing them for offences like theft, liquor and Brahmahati. Hence the authority to punish such offences in your premises is given to you. You could punish them in any manner as given in sastras.’’

இன்னும் ஒரு படி மேலே சென்று திப்புவின் ஆட்சி நிலைத்திருக்க, சாஸ்தரா சண்டி ஜபம் நடத்த திப்பு சிருங்கேரி சங்கராச்சாரியைக் கேட்டுக் கொண்டார். ஓராயிரம் பார்ப்பனர்கள் 40 நாள்கள் ஜபம் செய்தார்கள். அந்தச் செலவு முழுவதையும் திப்புவே ஏற்றுக் கொண்டார்.  இப்படிப்பட்ட திப்புவா, பாரதி கூறுவது போல், பார்ப்பனரைக் கொடுமைப்படுத்தியிருப்பார்? பாரதிக்கு இஸ்லாமியரின் மீது இருந்த வெறுப்பையே இது காட்டுகிறது.

பறையர்களின் பேரில் பாரதி இரக்கங் காட்டுவதாகப் பலர் எழுதுகிறார்கள். ஏன் பாரதி அவ்வாறு செய்தார் என்றால், அவர்கள் கிறிஸ்துவ மதத்திற்குப் போய்விடுகிறார்கள் என்ற எண்ணத்தில் தான் “1200 வருஷங்களுக்கு முன்பு, வட நாட்டிலிருந்து மதம் மாறியவர்கள் பஞ்சாப் நாட்டில் பிரவேசித்த போது, நம்மவர்களின் இம்சை பொறுக்க முடியாமல் வருத்திக் கொண்டிருந்த பின்னர், பறையர் எதிரிகளுக்கு நல்வரவு கூறி அவர்களுடன் கலந்து கொண்டதாக இதிகாசம் சொல்கிறது. அப்போது நமது ஜாதியைப் பிடித்த நோய் இன்னும் தீராமலிருக்கிறது.”

.. எங்கிருந்தோ வந்த ஆங்கிலேயப் பாதிரிகள் பஞ்சம் பற்றிய ஜனங்களுக்குப் பலவித உதவிகள் செய்து நூற்றுக்கணக்கான மனிதர்-களையும், முக்கியமாகத் திக்கற்ற குழந்தை-களையும், கிறிஸ்தவ மதத்திலே சேர்த்துக் கொள்கிறார்கள் ஹிந்து ஜனங்களின் தொகை வருஷந்தோறும் அதி பயங்கரமாகக் குறைந்து கொண்டு வருகிறது.

மடாதிபதிகளும், ஸந்நிதானங்களும் தமது தொந்தி வளர்வதை ஞானம் வளர்வதாகக் கண்டு ஆனந்தமடைந்து வருகின்றனர். ஹிந்து ஜனங்கள், ஹிந்து ஜனங்கள்! நமது ரத்தம் நமது சதை, நமது எலும்பு, நமது உயிர். கோமாமிசம் உண்ணாதபடி அவர்களைச் சுத்தப்படுத்தி, அவர்களை நமது சமூகத்திலே சேர்த்து, அவர்களுக்குக் கல்வியும் தர்மமும் தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களெல்லாரும் நமக்குப் பரிபூரண விரோதிகளாக மாறி விடுவார்கள்.

ஜாதிக் கொடுமையினால் ஒடுக்கப்-பட்டவர்கள் அதிக அளவில் மதம் மாறிய காரணத்தால் பாரதியார் கிழச்சாம்பான் கூறுவதைப் போல மதமாற்றம் வேண்டாம் என்பது பற்றி எழுதியுள்ளார். கிழச்சாம்பான் சொல்லுகிறார், “ஹிந்து மதத்திலே எங்களுடைய நிலைமை தாழ்ந்திருக்கிற தென்றும், கிறிஸ்து மதத்தில் சேர்ந்தால் எங்களுடைய நிலைமை மேன்மைப்படுமென்றும் சொல்லி கிறிஸ்துவப் பாதிரிகள் எங்களிலே சிலரைக் கிறிஸ்து மதத்தில் சேர்த்தார்கள். அதில் யாதொரு பயனையும் காணவில்லை. நூற்றிலொரு-வனுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்கிறது. மற்றவர்களெல்லாரும் துரைமாரிடத்தில் சமையல் வேலை பண்ணுதல், பயிரிடுதல், குப்பை வாருதல் முதலிய பழைய தொழில்களைத்தான் செய்து வருகிறார்கள். எனக்கு முன்னோருடைய மதமே பெரிது. கிறிஸ்துவர்களுடன் எங்களுக்குக் கொடுக்கல் வாங்கல், சம்மந்தம், சாப்பாடு ஒன்றுமே கிடையாது. என்ன கஷ்டமிருந்தாலும் நாங்கள் ஹிந்து மதத்தை விடமாட்டோம்.’’

பாரதி இந்து மதத்தை நிலைநிறுத்த எப்படியெல்லாம் சிந்திக்கிறார் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

ஆக முகமதியர்களையும், கிறித்துவர்களையும் எதிரிகள் என்றே பாரதியார் குறிப்பிடுகிறார்.

(தொடரும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *