விவசாயிகளை ஏமாற்ற முடியாது!
கே1: ‘உ.பி.யில் காங்கிரஸ் தனித்து நிற்கும்’ என்ற பிரியங்கா காந்தியின் அறிவிப்பு தற்கொலைக்குச் சமமல்லவா? பி.ஜே.பி.க்கு எதிரான வலுவான வெற்றிக் கூட்டணியை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சரும், நீங்களும் முயற்சி மேற்கொள்வீர்களா?
– த.வெங்கடேசன், திருவள்ளூர்
ப1: அங்குள்ள கள நிலவரப்படிதான் அரசியல் முடிவுகள் அமையும். இங்கிருந்து முயற்சிக்க அது தமிழ்நாடு அல்ல; தமிழ்நாட்டில் கட்டப்பெற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் _ 10 ஆண்டுகால போராட்டங்களால் விளைந்தது. அங்கே அப்படிப்பட்ட சூழல் அமையவில்லை; நம் உயரம் நமக்குத் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
கே2: “ஏ.கே.ராஜன் அறிக்கையைக் குறை சொல்லியும், “ஆண்டவனால் கூட ‘நீட்’ தேர்வை ஒழிக்க முடியாது’’ என்றும், முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராயிருந்த பாலகுருசாமி கூறி இருக்கிறாரே?
– கு.பழநி, புதுவண்ணை
ப2: பாலகுருசாமி அவர்கள் பா.ஜ.க.-விடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறார் போலும்.’ ஆண்டவனாலும் ஒழிக்க முடியாது என்பது அ.தி.மு.க.வினாலும் ஒழிக்க முடியாது (அவர்கள்தானே முன்பு ஆண்டவர்கள்) என்று கூறுகிறார். “மூன்று வேளாண் சட்டங்களில் ஒரு காற்புள்ளியைக் கூட மாற்ற மாட்டோம்’’ என்று கொக்கரித்தவர்களின் முகம் இன்று எப்படி உள்ளது? அச்சட்டங்கள் எங்கே போயிற்று என்ற வரலாறு _ மக்கள் சக்தி அறியாத ‘கல்வி மாளிகைவாசிகள் _ அறிவுஜீவிகள்’ அறிய மாட்டார்கள்! _ பரிதாபத்திற்குரியவர்கள் அவர்கள்!
கே3: ‘நீட்’ தேர்வை விலக்க, அல்லது விரும்பாத மாநிலங்களுக்கு விலக்குப் பெற மத்திய அரசுக்கு எதிரான மாநிலங்கள் வலியுறுத்த இது சரியான தருணமல்லவா? தமிழ்நாடு முன்னெடுக்குமா?
– து.முனுசாமி, தாம்பரம்
ப3: எல்லா முயற்சியும் ‘கொக்கொக்க கூம்பும் பருவத்தே’ _ வெற்றி தரும். யாரும் அலட்சியமாக இல்லையே!
கே4: என்னைப் போன்ற தொண்டர்கள், ஓராயிரம் பேர் கிடைக்கலாம்! தங்களைப் போன்ற ‘ஒப்பற்ற தலைமை’ கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டுமோ! எனவே, ‘இயக்க நலன்’ கருதியாவது, தங்கள் உடல் நலனில் இன்னும் அக்கறை எடுத்துக் கொள்வீர்களா?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
ப4: தங்களது பாசம், அன்புக்கு மிக்க நன்றி! அக்கறை எடுக்காமல் நான் எப்போதும் அலட்சியம் காட்டுவதே இல்லை. ஆனால், கடமையாற்றுதலை அலட்சியப்-படுத்த முடியாதல்லவா?
கே5: ‘திரவ்பதி’ படத்தைக் கண்டிக்காமல் பாராட்டியவர்களுக்கு ‘ஜெய் பீம்’ படத்தில் குற்றம் சொல்ல என்ன தகுதியுள்ளது?
– வே.சண்முகம், விருதுநகர்
ப5: கல்வி வள்ளல் காமராசர் மேடைகளில் ஒரு கேள்வி கேட்பார், “உன் வீட்டில் நடந்தால் கல்யாணம்; என் வீட்டில் அது நடந்தால் எழவா?’’ என்று. அதுதான் எனக்கு நினைவுக்கு வருகிறது!
கே6: 700க்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட பின்பும் பிடிவாதம் பிடித்தவர்களின் மனமாற்றம் தேர்தல் வருவதாலா? சட்டங்களைத் திரும்பப் பெறுவதால் வெறுப்பு நீங்குமா? பா.ஜ.க.வை படுதோல்வியடையச் செய்தால்தான் நல்லது நிறைய நடக்கும் என்று விவசாயிகள் சிந்திப்பார்களா?
– க.கன்னியப்பன், விருதாச்சலம்
ப6: பிரதமர் மன்னிப்புக் கேட்டவுடன், ‘வெற்றி, வெற்றி’ என்று தலைதுள்ளி ஆடாமல், அடுத்து நிறைவேற்றப்பட வேண்டியது தங்களின் நியாயமான கோரிக்கைகள் _ ஆறு என்பதை வலியுறுத்திய பாங்கிலிருந்தே, அவர்-களை எளிதில் ‘மயக்க பிஸ்கட்டு’களைக் காட்டி ஏமாற்ற முடியாது என்பது பெரும் அளவுக்குப் புரிகிறதே!
கே7: சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற தற்போதைய தடை என்ன? தீர்வு என்ன?
– தோ.மலர்விழி, சேலம்
ப7: எல்லோரும் மறந்துவிட்டதை நினைவூட்டி, நாம் முன்னெடுத்து, தமிழ்நாட்டில் ஓர் அணியைத் திரட்டுவது அடுத்த நம் வேலையாகும்.
கே8: ஒன்றிய அரசுக்கு ஆதரவானவர்களுக்குப் பணி நீட்டிப்புச் செய்வதை நீதிமன்றங்கள் தலையிட்டு தடுக்க முடியாதா?
– மகிழ், சைதை
ப8: நீதிமன்றங்கள் தங்களது சட்ட வரம்புகளை மீற முடியாதே! அந்த எல்லைக்குள் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்வார்கள்; செய்து கொண்டும் இருக்கிறார்கள்.
கே9: கிரிக்கெட் வீரர்களுக்கு மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி உணவுக்குத் தடை என்பது பற்றி தங்கள் கருத்து என்ன?
– முருகன், வேலூர்
ப9: வெளிநாட்டு அணிகளும் வந்து விளையாடும் நிலையில் இப்படி உணவுப் பழக்க வழக்கத்தில் ஊடுருவுவது ஏற்கத்தக்கதல்ல. உணவு, உடை அவரவரது தனி உரிமை. அதனைத் தடுப்பது நியாயமல்ல.