ஆசிரியர் பதில்கள்

ஜனவரி 01-15

கேள்வி : நீங்கள் எப்போதாவது மக்கள் இவ்வளவு முட்டாள்களாக இருக்கிறார்களே என்று நினைப்பதுண்டா? – இ.கிருபாகரன், சோளிங்கர்

பதில் : இல்லை; இல்லவே இல்லை. எப்போதாவது நம் மக்கள் இவ்வளவு புத்திசாலிகளாகவும் இருக்கிறார்களே என்று நினைத்து மகிழ்ந்தது உண்டு.

கேள்வி : அச்சு ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்ற இந்திய பிரஸ் கவுன்சில் இருப்பதுபோல் மின்னணு ஊடகத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொணரும் அதிகார அமைப்பு தேவையா? – வேங்கடம், ஊற்றங்கரை

பதில் : நிச்சயம் தேவை. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் கென்னடி பங்களாக்களில் ஒன்றைப் படம் பிடித்து இதுதான் மத்திய அமைச்சராக இருந்த ஆ.இராசா வீடு என்று துணிந்து கொயப்பெல்ஸ் அவதாரம் எடுப்பார்களா? அப்படிக் கட்டுப்படுத்தினால் 100 கோடி கோர்ட் அபராதம் வராதே _ மிச்சமாகுமே அவைகளுக்கு.

கேள்வி : ஆட்சியில் இல்லாதபோது விலைவாசி ஏறிவிட்டது என்று தெருமுனைதோறும் முழங்கியவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இன்னும் அதிக விலை ஏற்றத்தை உண்டு பண்ணுவது முறையா? – ஜே.அய்.ஏ.காந்தி, எரும்பி

பதில் : மற்றவர் ஆளும்போது அவாள் எதிர்க்கட்சி. எனவே அம்முழக்கம் தேவைப்பட்டது. இப்போது ஆட்சிக்கு வந்தவுடன் (எக்கட்சியும்) அவர்களது செய்கையை நியாயப்படுத்தவே முனைவது வாடிக்கை தானே!

கேள்வி : தாங்கள் இதுவரை செய்திருக்கும் சமுதாயப் பணிகளில் தாங்களே நினைத்துப் பெருமைப் படத்தக்க பணி என எதனைக் கருதுகிறீர்கள்?

நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

பதில் : 1. பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வருமான வரித்துறையிலிருந்து அறக்கட்டளை அங்கீகாரம் பெற்றது. 2. 69 சதவிகித 9ஆவது அட்டவணை பாதுகாப்புடன் கூடிய 76ஆவது அரசியல் சட்டத்திருத்தம் 69 நிலைநாட்டப்பட்டது.

கேள்வி : அன்றைக்கு புத்தமதத்தில் ஊடுருவி, அதனை அழித்த ஆரியம் _ இன்றைக்கு திராவிடர் இயக்கத்தில் ஊடுருவி தமிழன் (தமிழரின்) அடையாளங்களை அழிக்க முற்பட்டுவிட்டதே! எப்படித் தடுக்கப்போகிறோம்?
காழி கு.நா. இராமண்ணா, சென்னை

பதில் : மில்லியன் டாலர் கேள்வி. விழிப்போம். மக்களை – இயக்கத்தவர்களை விழிக்க வைப்போம். தடுப்போம்!

கேள்வி : டெல்லியிலிருந்து கேரளத்திற்குச் செல்லும் தமிழ்நாட்டின் வழியாக உள்ள ரெயில் போக்குவரத்து, வாகனச் சாலைகள் அனைத்தையும் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினால் மத்திய அரசின் நிலைப்பாடு எப்படி இருக்கும்? – பெ. கூத்தன், சிங்கிபுரம்

பதில் : உச்ச நீதிமன்றம் தெளிவாக உள்ளது; இது இப்போது தேவையற்றதாகும்.

கேள்வி : தமிழகத்தில் சமூகநீதி ஆட்சி நடக்கிறதா இல்லை மனுநீதி ஆட்சி நடக்கிறதா? – தி.இரமணன், காஞ்சி

மனுநீதிதானே அவாள் சமூகத்தின் நீதி! அது நடக்கிறது!

கேள்வி : சமீபத்தில் மதுரை காவல் நிலையத்தில் தன் மனைவியைக் குத்திக் கொலை செய்துள்ளான் ஒருவன். இது எதைக் காட்டுகிறது? – அழகிரிதாசன், கல்மடுகு

பதில் : சட்டம் ஒழுங்கு பலே பலே! முன்பு தி.மு.க. ஆட்சியில் மோசம். இப்போது பலே பலே ஜோர்!

கேள்வி : பக்தி வளர்ச்சி அதிகமில்லாத இக்காலகட்டத்தில் நமது அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்? – கல்மடுகன், கல்மடுகு கிராமம்

பதில் : பகுத்தறிவுப் பிரச்சாரம் _ சமூக நீதிப் போராட்டத்தின் அடுத்த கட்டம். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு தேவை என்பதே.

கேள்வி : படித்தவர்கள் அதிகமாக அரசிய லுக்கு வர ஆரம்பித்துவிட்டார்களே? – அ.கவிதா, பிள்ளையார்பட்டி

அவர்கள் படித்தவர்களைவிட புத்திசாலிகளாயின் வரவேற்கத்தக்கதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *