முனைவர் வா.நேரு
திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் அய்யா மானமிகு. கோ.கருணாநிதி அவர்கள் யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டிருந்த இந்தியாவில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்-களைப் பற்றிய அறிக்கையை 6.10.2021 அன்று எனக்கு வாட்சப் மூலமாக அனுப்பியிருந்தார். அந்த அறிக்கையை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில இதழ் வெளியிட்டிருந்தது.
இந்தியா முழுவதும் 11.16 இலட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்கள் இல்லை, ஆதலால் மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் இல்லை, பாடம் நடத்துவது இல்லை என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்தும் விதமாக அந்தச் செய்தி உள்ளது. அதில் முதலாவதாக உத்தரப்பிரதேசம் (3.3 இலட்சம் காலியிடங்கள்), பிகார் (2.2 இலட்சம் காலியிடங்கள்) என்றும் குறிப்பிடப்-பட்டுள்ளது.
11.16 இலட்சத்தில் உத்தரப்பிரதேசமும், பிகாரும் இணைந்து 5.5. இலட்சம் ஆசிரியர் இடங்களைக் காலியாக, நிரப்பாமல் வைத்திருப்பதாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஏதோ உத்தரப்பிர-தேசத்தில் சாமியார் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பாலும் தேனும் ஓடுவது போலவும், கடந்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் தமிழ்நாடு பின்தங்கி நிற்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் இந்துத்துவா அமைப்பினர் படாத பாடுபடுகிறார்கள். ஆனால், உண்மை உள்ளூரில் மட்டுமல்ல; உலக அளவிலும் உரக்கச் சொல்லப்படுவதுதான் அவர்களுக்கு கோபம் வரவைக்கிறது.
இந்தியாவில் உள்ள 11.16 இலட்ச காலியிடங்களில் 69 சதவிகிதம் இடங்கள் கிராமப்புறங்கள் என்று யுனெஸ்கோ சுட்டிக் காட்டுகிறது. அதிலும் உத்தரப்பிரதேசத்தில் 3.3. இலட்சம் காலியிடங்களில் 80 சதவிகிதம் கிராமப்புறங்களில். அதனைப் போல பிகாரில் இருக்கும் 2.2 இலட்சம் காலியிடங்களில் 89 சதவிகிதம் கிராமங்கள் என்று புள்ளி விவரம் குறிப்பிடுகிறது.
கிராமங்களில் இருக்கும் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் படிப்பதற்கு வசதியற்ற நிலைமையாக, வாத்தியார்கள் இல்லாத நிலைமையாக உத்தரப் பிரதேசத்திலும், பிகாரிலும் அதனைப்போல பல மாநிலங்களிலும் நிலவும் சூழலை யுனெஸ்கோ நிறுவனம் எடுத்துக்காட்டி இருக்கிறது.
“கிராமத்தானுக்குக் கல்வி இல்லாமல் இருந்தால்தானே பயிரிட்டு உழைத்து உழைத்து, அறுத்து மூட்டையாக்கி தைத்து வண்டியில் போட்டு நகரத்துக்கு அனுப்பிவிட்டு சாவியாய்ப் போன தானியத்தை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போய் கஞ்சியாகக் காய்ச்சி கலயத்தில் ஊற்றி பிள்ளைகுட்டிகளை சுற்றி வைத்துக் கொண்டு “இன்று கடவுள் நமக்கு இவ்வளவுதான் கொடுத்தார்” என்று வாழ்த்துப்பாடி எருமை மாடு தவிட்டுத் தண்ணீர் குடிப்பது போல் வயிறு முட்டக் குடிக்க முடியும்; அதோடு அவன் திருப்தி அடையவும் முடியும்.
அப்படி இல்லாமல் கிராமத்தானுக்குக் கல்வி கொடுத்துவிட்டால், நாம் உழைக்கிறோம்; நாம் விளைவித்தோம்; நாம் உருப்படி பண்ணினோம்; அப்படி இருக்க நாம் கஞ்சி குடிப்பதும், உழைக்காதவன் தரித்துப் புடைத்து ஆக்கிப் படைத்துக் கொண்டு இப்படி தொப்பை வெடிக்க அமுக்குவதா என்கின்ற எண்ணம் ஏற்பட்டு விடாதா? அதனால்தான் கிராமம் ஒரு பஞ்சமனுடைய நிலையில் வைக்கப் பட்டிருக்கிறது” என்று தந்தை பெரியார் அவர்கள் பேசியதை அவரின் ‘கிராமச் சீர்திருத்தம்’ என்னும் நூலில் படித்த நினைவு வருகிறது.
எப்படி வர்ண அடிப்படையில் பஞ்சமர்களும் சூத்திரர்களும் வைக்கப்படு கிறார்களோ அதனைப் போல கிராமத்தார்கள் கல்வி இல்லாமல் ஆக்கப்படுகிறார்கள் என்பதனைத் தந்தை பெரியார் 1944இல் (ஏறத்தாழ 77 ஆண்டுகளுக்கு முன்னால்) பேசியிருப்பது அந்தப் பேச்சு. சுதந்திரம் பெற்றதாகச் சொல்லி 75 ஆண்டுகள் முடிந்த பின்னும் இன்னும் வட மாநிலங்களில் நிலைமை மாறவில்லை. அப்படியேதான் இருக்கிறது.
உத்தரப்பிரதேச அரசு, “பள்ளிக்கூடம் இருக்கு, வாத்தியார்கள் இல்லை பாடம் நடத்த” என்று சொல்லிக் கொண்டிருக்-கிறார்கள். அயல் நாட்டு சதி, யுனெஸ்கோ மன்றத்துக்காரர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுகூட சில இந்து மத அடிப்படை-வாதிகள் இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவிடுவார்கள். உண்மையை ஒத்துக்-கொள்ளும் மனம் எப்போதும் அவர்-களிடம் இருந்தது இல்லை. சாதாரண கிராமத்து மாணவ, மாணவியர்க்கு கல்வி போய்ச் சேரவேண்டும் என்னும் உந்துதல் அந்த அரசுக்கு இல்லை என்பதுதான் அடிப்படை. ஏனென்றால், அவர்கள் மதவாதிகள். அடிப்படைவாதிகள். பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டவர்-களுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என்னும் உந்துதல் இல்லாதவர்கள். மறைமுகமாக புதிய கல்விக்கொள்கை போன்ற கொள்கை வகுத்து அவர்களுக்கு கிடைக்கும் கல்வியையும் கிடைக்கவிடாமல் செய்ய-வேண்டும் என்று நினைப்பவர்கள். இராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கோடி, கோடியாகப் பணம் திரட்டுபவர்கள். ஆனால் அடிப்படைக் கட்டமைப்பான கல்வி குறித்து சிந்தனையும், புரிதலும் இல்லாதவர்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் நமக்கு மிகப் பெருமையாக இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியில் நாம் பெற்றிருக்கும் முன்னேற்றம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. பெருந்தலைவர் காமராசர் காலம் தொடங்கி, இன்று ‘சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் காலம்வரை தொடர்ச்சியாக கல்விக்குக் கொடுக்கும் முன்னுரிமையும், கிராமங்களிலும் கல்வித்தரம் நன்றாக அமையவேண்டும் என்பதற்காக எடுக்கும் அக்கறையும் நமக்குக் பெருமையை அளிக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அமைதிப் பூங்காவாக திகழ்வதும், எல்லா மதத்தினரும், எல்லா ஜாதியினரும் நன்றாகக் கல்வி கற்பதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் மிகப்பெரிய விளைச்சலைக் கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்குக் கொடுத்திருக்கின்றன.
“சோசியல் இன்வெஸ்ட்மெண்ட், கல்விக்காக எவ்வளவு செலவழித்தாலும் அது செலவா? என்றால் இல்லை. அது சமூகத்திற்கு வரவு. சமூகத்திற்கு முதலீடு. சமுதாயத்திலே இருக்கிற இளைஞர்களுக்கு நாம் எவ்வளவுக்கெவ்வளவு கல்வியைப் பரப்புகின்றோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அறிவு வளரும். அதன் மூலமாகத்தான் உண்மையான வளர்ச்சி Sustained Growth என்று சொல்லக்கூடிய தொடர்ச்சியான வளர்ச்சி இருக்கிறதே, அது வளர்வதற்கு முக்கியமான அடிக்கட்டுமானம் கல்விதான். சமூகத்திலே மூளை வளர்ச்சி, அறிவு வளர்ச்சி என்று இருக்கிறதே, அந்த அறிவு ‘அற்றங்காக்கும் கருவி’ என்று சொல்லப்-படுவது இருக்கிறதே, அதைக் காண வழிகாட்டுவது தானே கல்வி? ஆகவே, அந்தக் கல்வியை எல்லா மக்களுக்கும் கிடைக்க விடாமல், விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுக்கு மட்டுமே _ உயர் ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்பது அவர்கள் ஏற்படுத்திய ஒரு சூழல்; மீதி உழைப்பாளிகளாக இருக்கக்கூடிய மக்களுக்குக் கதவு திறந்து, மடை திறந்து விட்டது போல கல்வியைத் திறந்துவிட்ட சூழல்தான் எல்லாருக்கும் எல்லாமும் என்ற திராவிடச்சூழல் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இன்றைக்கு பொறியியல் கல்வியாக இருந்தாலும், மருத்துவக் கல்வியாக இருந்தாலும் ஏராளமான கல்விகள், வேலைவாய்ப்புகள் வந்தன. இந்த வாய்ப்புகள், காலங்காலமாக யாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அவர்களுக்கு திராவிட மாடல் முன்னுரிமை கொடுத்தது” என்று திராவிட மாடல் என்னும் புத்தகத்தைப் பற்றிப் பேசுகின்ற-போது திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
யுனெஸ்கோ நிறுவனத்தின் புதுடெல்லி அலுவல் வலைத்தளத்தில் (UNESCO New Delhi Cluster Office) சென்று பார்த்தால், மேற்சொன்ன செய்திகளோடு வேறு பல செய்திகளையும் இணைத்துக் கொடுத்திருக்-கிறார்கள். அக்டோபர் 5 என்பது உலகக் கல்வி நாள். அந்த உலகக் கல்வி நாளை முன்னிட்டு இந்தியாவில் நிலவும் கல்விச்சூழல் பற்றி ‘ஆசிரியர் இல்லை, வகுப்புகள் இல்லை’ (NO TEACHER, NO CLASS) என்னும் தலைப்பிட்டு விவரமான அறிக்கைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.
யூ டியூப்பில் சின்னச்சின்ன உரைகளாக இந்தியாவில் நிலவும் கல்விச்சூழல், அதனை மேம்படுத்துவது எப்படி என்று பல்வேறு செய்திகளைக் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.
சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று யுனெஸ்கோ நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. சிறப்புக் குழந்தைகள் என்றால் கற்றல் குறைபாடு உள்ள, மூளை முடக்குவாதம் உள்ள, அறிவுத்திறன் குறைபாடு மற்றும் ஆட்டிசம் போன்றவைகளால் பாதிக்கப்-பட்டிருக்கும் குழந்தைகள். இதற்கென சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒவ்வொரு பள்ளியிலும் நியமிக்கவேண்டும். அதன் மூலமாக இப்படிப்பட்ட குழந்தைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, முன்னேற்றமடையச் செய்ய முடியும். ‘ஒரு விரலால் ஜெயித்தவர்’ என்று மாலினி சிப் என்னும் பெண்ணின் சுயசரிதையை ‘ஆனந்த விகடன்’ நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த மாலினி சிப் என்பவர் இளம் வயதில் சிறப்புக் குழந்தையாக அதாவது மூளை முடக்குவாதம் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் தன்னுடைய சுயசரிதையில் தான் படிக்க பட்ட பாடுகளை மிக விரிவாக எழுதியிருப்பார். வெளி நாடுகளில் இத்தகையை குழந்தைகளுக்கு மிகச் சிறப்பான கவனம் கொடுக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் விதிக் கோட்-பாட்டினால், இப்படிப்பட்டவர்கள் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால் இப்படிப் பிறந்திருக்கிறார்கள் என்று நினைத்துக்-கொண்டு கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள் என்று எழுதியிருப்பார். அதனைப் போல அல்லாது இப்படிப்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியர்களை நமது தமிழ்நாட்டிலும் கூட ஒவ்வொரு பள்ளியிலும் நியமிக்க வேண்டும். ஏதேனும் ஒரு பாடத்தை நடத்துவதோடு, இப்படிப்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட பயிற்சி கொடுப்பது என்பதனையும் அவர்கள் மூலமாக மற்ற ஆசிரியர்களும் கற்றுக்கொள்ள முடியும்.
யுனெஸ்கோ நிறுவனம் ஆசிரியர்களை முன் களப் பணியாளர்களாக (Frontline Workers)க் கருத வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் அவர்களுக்கு ஊதியமும் மற்ற சலுகைகளும் கொடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆசிரியர்கள் சமூகத்தின் மிக முக்கியமானவர்கள் என்பதை அரசும், சமூகமும், ஆசிரியர்களும், மாணவர்களும் உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு நல்ல சமூகத்தை நாம் கட்டமைக்க முடியும். அதனை நோக்கிப் பயணமாக யுனெஸ்கோ கொடுத்திருக்கும் அறிவுரைகள் பயன்படட்டும்.ஸீ