ஈழப் படுகொலைக்கு எதிராய் கடைகள் அடைப்பு
கி.வீரமணி
தமிழ்நாட்டின் பிரபல வயிற்றுநோய் மருத்துவர் (Gastro – Entrologist) டாக்டர் மதனகோபால் அவர்கள் 28.5.1997 அன்று திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு கண்ணீர் வடித்தேன்.
உலக நிபுணர்களில் ஒருவராக உயர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினைச் சார்ந்த ஆற்றலும், அனுபவமும், திறமையும் வாய்ந்த டாக்டர் ஆவார்.
ஏராளமான பணம் சம்பாதிப்பதை தனது மருத்துவத்தின் நோக்கமாகக் கொள்ளாது. ஏழைகளுக்குத் தொண்டாற்றுவதையே தனது அரும்பெரும் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த _ ஏழை எளிய மக்களின் தோழர் அவர்!
அவருடைய எளிமை எவரையும் வியக்கவைக்கும். அவர் எவரிடத்திலும் எதனையும் கேட்டுப் பெறத் தயங்கும் கூச்ச சுபாவம் உடைய பெருமகன்.
எந்தப் பணியை அவர் எடுத்துக் கொண்டாலும் அதில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் இணையற்ற அற்புத செயல்வீரர்!
சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மருத்துவமனையின் கவுரவ இயக்குநர்களில் ஒருவராக அவரே முன்வந்து வாரந்தோறும் தமது மருத்துவத்தை இலவசமாக அளித்துவந்த மருத்துவக் கொடைவள்ளல் அவர்!
அவர் இனிய _ அடக்கம் மிகுந்த சுபாவத்தோடு வாழ்ந்தவர். அவரது இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல; நமது சமுதாயத்திற்கே ஒரு மாபெரும் இழப்பு ஆகும்!
அண்ணாநகர் புறநகர்ப் பகுதி அரசு மருத்துவமனையை உயர்த்த அவர் பட்டபாடு நாம் அறிவோம். அங்கு பணிபுரிந்த தோழர்களும், தோழியர்களும் அறிவர்.
அப்படிப்பட்ட பொதுநல மனப்பான்மை பொங்கிய டாக்டர் ஒருவரை இனி பார்ப்பது எளிதல்ல! அவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம்.
ஈழத்தில் நடைபெறும் சிங்கள இராணுவத்தின் தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்து, அங்குள்ள மக்கள் நாட்டிலிருந்து காட்டிற்குத் துரத்தப்பட்டும், காட்டிலும், நாட்டிலும் உள்ள தமிழர்கள்மீது சிங்கள விமானப்படை குண்டுவீச்சு, தரைப்படையின் தாக்குதல், கடற்படையின் தாக்குதல் என்று சொல்லொண்ணாக் கொடுமைக்கு ஆளாகின்ற அவலம் தொடர்கதையாகியே வருகிறது என்பதை கண்டித்தும், அனைவரையும் ஒருங்கிணைக்க முக்கிய அறிக்கையை 29.5.1997 வெளியிட்டோம்.
வட ஆர்க்காடு மாவட்டம் சம்பத்துராயன் பேட்டையில் அறிவு ஆசான் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா 29.5.1997 அன்று நடைபெற்றது. முன்னதாக மாலையில் சம்பத்துராயன் பேட்டையில் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெற்றது. அதில் தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்தி அம்பாசிடர் கார் இழுத்தல், தீ மிதி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து வியந்தனர். பள்ளிக் குழந்தைகளின் பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி காண்போரை கவரச் செய்தது. இரவு 7:00 மணியளவில் தந்தை பெரியார் முழு உருவச் சிலையைத் திறந்து வைத்தேன்.
பொதுக் கூட்டத்திற்கு கு.சோமசுந்தரம் தலைமை வகித்தார். அங்கு உரையாற்றுகையில், கடவுள், ஜாதி, மத மூடநம்பிக்கைகளுக்கு மக்கள் ஆளானதால் ஒற்றுமை குறைந்து, இன எழுச்சி அற்றவர்களாக ஆயினர். ஜாதி, மதப் பற்றுகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது என்பன போன்ற பல வரலாற்றுச் செய்திகளை எடுத்துக் கூறினேன். சிலை திறப்பு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பெரியார் பெருந்தொண்டர்கள், கழக உறுப்பினர்களைப் பாராட்டி பயனாடை அணிவித்தேன்.
தலைவர்களை மதிப்பது என்பது அவர்களின் கொள்கைகளை மதிப்பதாகும். வெறும் பெயர்களைச் சூட்டுவதைவிட அதுதான் மிகவும் முக்கியம்! இந்த நிலையில் மாவட்டங்களுக்கு வைக்கப்படும் பெயர்களை ஜாதி உணர்வுகளுக்குத் தீனிபோடுவதாக அமைந்திடக் கூடாது. ஜாதி ஒழிப்புக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் பெயர்களை வைத்ததைக்கூட தவிர்க்கலாம் _ அதனை திராவிடர் கழகம் ஏற்றுக்கொள்கிறது என்று கூறி 30.5.1997 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஜாதி வேறு-பாட்டால் எழுந்த சூழ்நிலையால் எல்லா ஊர்களிலும் அல்ல; சில ஊர்களில் _ ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டு 14 பேர் (பதினான்கு பேர்) இறந்துள்ளனர். துப்பாக்கிப் பிரயோகம் துறையூரில் நடைபெற்று மொத்தம் 6 பேர் இறந்துள்ளனர்.
1. ஜாதிப் பெயரிலோ, தலைவர்கள் பெயரிலோ, மாவட்டங்களோ, போக்குவரத்துக் கழகங்களோ ஏற்கெனவே வைக்கப் பட்டவைகளைக்கூட துணிந்து அகற்றிட தமிழக அரசு முன் வருமானால் திராவிடர் கழகம் அதனை வரவேற்கும்; ஆதரவளிக்கும்.
பெரியார், அண்ணா, அம்பேத்கர் போன்ற நமது வழிக்காட்டித் தலைவர்கள் ஜாதியற்ற சமூகம் அமைவதைத்தான் விரும்புவார்களே தவிர, வெறும் வெற்று ஆரவார, ஆடம்பரப் பெயர் சூட்டி, தத்துவத்தில் கொள்கையை குழிதோண்டிப் புதைக்கும் நிலை உருவாவதை ஒருக்காலும் விரும்பமாட்டார்கள்.
ஏற்கெனவே கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் நல்லக்கண்ணு அவர்களும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களும் இக்கருத்தைக் கூறியிருப்பதும் சுட்டிக்காட்டத் தகுந்தது. திராவிடர் கழகம் அதனை வரவேற்கிறது.
மாவட்ட தலைநகரின் பெயர்களில் மாவட்டங்களும், தமிழ்நாடு முழுவதும் ஒரே போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்றும் இயங்கினால் போதுமானது!
2. இடஒதுக்கீட்டுக் கொள்கை ‘socially and educationally’ – கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் என்பதை ஜாதிதான் பிரதிபலிப்பது என்பதால் அதற்கு மட்டும் அது பயன்படலாம்; நீடிக்கலாம்!
அதில்கூட, தனித்தனி ஜாதிப் பெயர்களை சான்றிதழ்களில் குறிப்பிடாமல், FC என்பது-போல், OBC, MBC, SC, ST என்று மட்டுமே தற்போதுள்ள ஜாதித்தொகுப்புகளில் உள்ள ஜாதிகளையே அதற்கு ஆதார அளவுகோலாகக் கொண்டு குறிப்பிட _ அரசு ஆணை வழங்கலாம்.
இதை ஒரு காலவரையறைக்கு உட்படுத்தலாம். அது தவறு அல்ல. பிறகு மறு ஆய்வு செய்து கைவிட முன்வரலாம்.
“There can be no equality among unequals” _ சமமாக இல்லாதாரிடையே சம போட்டி நிலவ முடியாது என்பதால்தான் இப்போது இந்த ஏற்பாடு; எப்போதும் தேவை இல்லை.
3. ஜாதி மறுப்புத் திருமண தம்பதிகளுக்கும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளித்து, ஜாதி ஒழிப்பினை வெற்றியாக்கலாம்.
4. இந்திய அரசியல் சட்டத்தில் 17ஆவது விதியில் உள்ள தீண்டாமை ஒழிக்கப்பட்டு-விட்டது என்ற வாசகத்திற்குப் பதில் ‘Caste and Untouchability’ ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றலாம். தந்தை பெரியார் அவர்கள் இறுதியாகக் கூறிய கருத்து இது!
5. ஜாதி அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் இல்லாது அனைத்து ஜாதியினரும் ஆதிதிராவிடர் உள்பட _ அர்ச்சகர் (பயிற்சி பெற்று) ஆகும் வண்ணம் _ தந்தை பெரியார் வலியுறுத்தி, தி.மு.க ஆட்சி ஆணை பிறப்பித்து, அ.தி.மு.க ஆட்சியில் அர்ச்சகர் பயிற்சி பள்ளி முதற்கொண்டு உருவாக்கப்பட்ட திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தவேண்டும்.
தந்தை பெரியார் கருத்து மட்டுமல்ல; மத்திய அரசு பல ஆண்டுகளுக்கு முன் நியமித்த தீண்டாமை ஒழிப்பு கமிட்டி (திரு. இளையபெருமாள் தலைமையில் அமைக்கப்-பட்ட கமிட்டி)யின் பரிந்துரைகளில் இதுவும் ஒன்றாகும்.
6. சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடும் நாட்டில், இன்னமும் கிராமங்களில் இரண்டு தேநீர் கோப்பைகளில் தேநீர் தருவது, தனித்தனிச் சுடுகாடுகள் இருக்கும் நிலையை மாற்றி ஒரே சுடுகாடு எல்லோருக்கும் என்ற நிலையை உண்டாக்க-வேண்டும்.
7. ஆட்சியாளர்கள், அதிகாரிகள் எந்த ஜாதி சங்கத்துடனும் தொடர்பு கொள்ளுவது, பங்கேற்பது கூடாது என்ற நிலையை உருவாக்கவேண்டும். ஆணைகள் நடை-முறைகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.
8. அரசு வீடு கட்டுமான அமைப்புகள் ஆதிதிராவிடர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுப்பதை தனியாகச் செய்யாமல் எல்லா ஜாதியினரும் கலந்து வாழுமாறு அதன்மூலம் ஜாதி நல்லிணக்கம் ஏற்படுமாறு செய்வதை அரசு துணிந்து செயல்படுத்த-வேண்டும். (பலமாடி குடியிருப்புகளில் இப்போது ஜாதி இல்லையே!
9. எங்கே ஜாதி மதக் கலவரம் வெடித்தாலும், அந்தப் பகுதியில் தண்டவரி (Punitive tax) போடப்படும் என்பதை கண்டிப்பாக அமலாக்கவேண்டும்.
10. ஜாதிக்கான வேர்களைக் கண்டறிந்து, வெட்டி எறிதலும் நீண்ட கண்ணோட்டத்தில் அவசியம்.
ஜாதி ஒழிப்பினை உடனடியாக செயல்-படுத்தி மனித நேயத்தைக் காப்பாற்றி, தமிழ்நாட்டின் மதிப்பை உயர்த்தவேண்டும். எந்த விலை கொடுத்தேனும் ஜாதி ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும்!
அரசும், அனைத்துக் கட்சியினரும், சமுதாய அமைப்புகளும் விருப்பு, வெறுப்பு இன்றி இதற்கு ஒத்துழைக்கவேண்டும் என அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டோம்.
வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிபுரியும் மு.இராஜப்பா _ எஸ்.சாந்தி ஆகியோரின் மணவிழா 1.6.1997 அன்று தலைமையேற்று, மணமக்களை வாழ்க்கைத் துணைநல உறுதி மொழியினை கூறச் செய்து, மாலை மாற்றச் செய்து நடத்திவைத்தேன். மணவிழாவிற்கு ஏராளமான கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், கல்லூரி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அன்றே, தஞ்சை-யில் பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ந.இராமநாதன் _ ஆய்க்கண்ணு ஆகியோரின் வளர்ப்பு மகளும், பேராசிரியர் அவர்களது சகோதரர் புலவர் ந.பழநிநாதன் _ கஸ்தூரி ஆகியோரின் செல்வியுமான ப.பவளக்கொடிக்கும், அரித்துவாரமங்கலம் ஆர்.கலியபெருமாள் _ இராசேசுவரி ஆகியோரின் செல்வன் க.சாமிநாதனுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழாவை சீனிவாசபுரம் சிவசிதம்பரம் திருமண மண்டபத்தில் தலைமையேற்று நடத்திவைத்தேன்.
அவ்விழாவில் பேசுகையில், “புரட்சிக்-கவிஞர் அவர்களைப் பற்றி எந்த ஒரு செய்தியையும் தெரிந்துகொள்ள இராமநாதன் அவர்களே ‘அத்தாரிட்டி’ ஆவார். பெண்கள், நாடாளுமன்றத்திலும், சட்ட-மன்றத்திலும் 33 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்று முன்னேறுவதற்-காக திராவிடர் கழகம் போராடிக் கொண்டிருக்கிறது. பெண்களே! தங்களை எப்பொழுதும் அழகுப் பதுமைகளாகக் காட்டிக் கொள்வதையே விரும்பாதீர்கள். அழகு என்பது நிரந்தரமானதல்ல. எந்தக் காலத்திலும் பயன்படக்கூடிய அறிவே நிரந்தரமானது. அதனை வளர்த்துக்கொண்டு வாழ்வில்வெற்றி பெறுங்கள்’’ எனக் கூறினேன். பெண்கள் அதிகம் கூடிய அந்த மண-விழாவில் அவர்கள் கைதட்டி வரவேற்றனர்.
நன்னிலம் ஒன்றியக் கழக இளைஞரணிச் செயலாளர் தன.சஞ்சீவி _ மு.லதா ஆகியோரின் மணவிழா 2.6.1997 அன்று என்.எஸ்.எம். திருமண அரங்கில் நடை-பெற்றது. விழாவிற்கு கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் நன்னிலம் பகுதியில் உள்ள பெரியார் பெருந்-தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மணமக்கள் இருவரையும் வாழ்க்கை ஒப்பந்த விழா உறுதி-மொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்து வாழ்த்திச் சிறப்புரை-யாற்றினேன்.
திருச்சி மாவட்ட முன்னாள் திராவிடர் கழகத் தலைவர் கோமாக்குடி தி.பிச்சையப்பா _ விசாலாட்சி ஆகியோரின் செல்வி ரஜினி, திருச்சி மாவட்டம் அசூர் மாரிமுத்து _ தெய்வானை ஆகியோரின் செல்வன் மா.நாகராஜன் இவர்களின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 4.6.1997 அன்று அரிஸ்ட்டோ ஓட்டலில் நடைபெற்றது. விழாவிற்குத் தலைமை தாங்கி மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதிமொழியினை ஏற்கச் செய்து மாலை மாற்றிக்கொள்ளச் செய்து நடத்திவைத்தேன். விழாவிற்கு பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ச.இராசசேகரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
ஈழத்தமிழர் _ தமிழக மீனவர் பிரச்சினைக்காக 6.6.1997 அன்று திராவிடர் கழகம், தமிழ்நாட்டின் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இணைத்து மாபெரும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து, அதனை கடைப்பிடிக்கச் செய்தோம். சென்னையில் பல்வேறு பகுதியில் கடைகள், போக்குவரத்துகள் இயக்கப்பட-வில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஆதரவு தெரிவித்திருந்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்-பட்டனர். திராவிடர் கழகத் தோழர்களும் முழு அடைப்பில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு கைது ஆனார்கள். பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மக்களின்றி இயக்கப்பட்டன. சென்னை பெரியார் நெடுஞ்சாலையில் கழகத் தோழர்கள், “கொல்லாதே! கொல்லாதே!’’ ஈழத் தமிழரைக் கொல்லாதே! என குரல் எழுப்பிக் கொண்டு சாலை மறியல் செய்து கழகப் பொறுப்பாளர்களுடன் கைது செய்யப்-பட்டனர்.
மாலை செய்தியாளர்களின் சந்திப்பின்-போது, தமிழர்களிடையே இந்த முழு அடைப்புப் போராட்டம் ஒற்றுமையை விரிவாக்கி உள்ளது. மாநில அரசால் இன்னும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துச் சாதிக்க முடியும் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்திவுள்ளது. அமைதியான முறையில் நடைபெற்ற இப்போராட்டத்தில 15,000 பேருக்கு மேல் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., தி.க., போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஈழத்தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்திட, தமிழக மீனவர்கள் படுகொலையைத் தவிர்த்திட மத்திய அரசினை மாநில அரசு வற்புறுத்திடவும், நமது தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்தும் மத்திய அரசிடம் வற்புறுத்தி நாடாளுமன்றத்தில் உரத்த குரல் எழுப்பியும் கடமையாற்றிட வேண்டுமென அனைத்துக் கட்சிகளின் சார்பில் செய்தியாளர்களிடம் கூறினேன்.
அதனைத் தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை தேரடித் தெருவில் 17.6.1997 அன்று ஈழத்தமிழர் படுகொலை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்தும், விளக்கும் வகையில் மாபெரும் பொதுக்-கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டம் ஒரு பொதுக்கூட்டமாக இல்லாது, தமிழ்நாட்டுத் தமிழர்களின் தன்மான உணர்வை, மனிதநேய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் பார்க்கப்பட்டது. பொதுக்கூட்ட உரையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் மாநில அரசு, மத்திய அரசுக்கு ஈழத் தமிழர் நலனில் மேலும் அழுத்தம் தர வேண்டுமெனப் பேசினார்கள்.
வட செங்கை மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் இரா.கி.பேட்டையைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் க.ராமன் அவர்கள் 6.6.1997 அன்று தனது 75ஆவது வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தைத் தந்தது. பெரியார் பெருந்தொண்டர் க.ராமன் அவர்கள், தந்தை பெரியார் காலம் முதல் இன்றுவரை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பல்வேறு ஆர்ப்பாட்டங்களிலும், போராட்டங்-களிலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றுள்ளார். அவரது மறைவு கழகத்திற்குப் பேரிழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு பெரியார் பெருந்தொண்டர் க.ராமன் அவர்களுக்கு எங்களது வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என இரங்கல் அறிக்கை வெளியிட்டோம்.
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கை ஒட்டி நடத்தப்பட்ட யாகக் குண்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து பல உயிர்களைப் பலி வாங்கியதைக் கண்டித்து 8.6.1997அன்று கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிட்-டோம். அதில்,
தஞ்சை பெரியகோவிலின் கும்பாபிஷேகத்திற்கு என்று 7.6.1997 (2ஆவது நாளாக) 122 ஓமகுண்டங்கள் வளர்க்கப்பட்டு யாக சாலையில் தீ பிடித்தது என்று தெரிகிறது. தஞ்சையிலிருந்து கிடைத்த செய்திப்படி சாவு எண்ணிக்கை 110 பேருக்கு மேல் என்றும், படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 300 பேருக்கு மேல் என்றும் தகவல் வந்துள்ளது.
இது மிகுந்த வேதனையும், துயரமும் தரக்கூடிய செய்தியாகும். பக்தி என்ற நிலையில் பல லட்சக்கணக்கான பக்தர்-களைத் திரட்டி மூடநம்பிக்கைகளை வளர்க்கிறார்களே என்ற வேதனை நமக்கு ஒருபுறம் இருந்தபோதிலும் உயிர்கள் இப்படியா இழக்கப்படுவது? படுகாயம் ஏற்பட்டு மக்கள் இப்படியா அவதிப்படுவது என்ற தீராத துன்பத்தினால் நாம் துயரமடைகிறோம்.
இறந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்! இவ்வளவு கவனக்குறைவாக எப்படி தீவிபத்து ஏற்பட்டது என்பதைக் கண்டு-பிடித்துக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
முந்தைய ஆட்சியில் குடந்தை மகாமகத்தில் ஒரு பெரும் இழப்பு ஏற்பட்டது. இப்போது தஞ்சை பெரிய கோவிலில் இப்படி ஒரு கொடுமையான வேதனை!
அதிர்ச்சியிலிருந்து நம்மைப் போன்ற-வர்களே மீளாதபோது, பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வு எப்படி இருக்கும் என்பதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. தமிழ்நாடு அரசு தக்க வகையில் எல்லா உதவிகளையும், இழப்பீடுகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டு அறிக்கை வெளியிட்டோம்.
திராவிடர் கழக சீரிய தோழர் சமா.விசுவாசவரம் _ கவுரி ஆகியோரின் செல்வி தமிழ்ச்செல்வி, கவிஞர் இன்குலாப் சாகுல் அமீது _ கமருன்னிசா ஆகியோரின் செல்வன் சா.இன்குலாப் இவர்களின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 8.6.1997 அன்று சென்னை இராயப்பேட்டை உட்லண்ட்ஸ் உணவு விடுதியில் நடை-பெற்றது. விழாவிற்கு தலைமையேற்று மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த விழா உறுதி மொழியினைக் கூறச் செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து நடத்திவைத்தேன். விழாவிற்கு முக்கிய எழுத்தாளர்கள், கழகப் பொறுப்பாளர்கள், அனைத்துக் கட்சி சார்ந்த பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அங்கு உரையாற்றுகையில், “இதுமாதிரி ஒரு சுயமரியாதைத் திருமணத்தை வடநாட்டிலே இவ்வளவு வெளிப்படையாக நடத்திவிட முடியாது. இன்னமும் உத்தரப்பிரதேசத்திலே நடத்திவிட முடியாது. எங்கள் கல்வி நிறுவனத்தில் நடந்த சுயமரியாதைத் திருமணத்தைக் காண வடநாட்டைச் சார்ந்த இருவர் வந்திருந்தனர். அவர்கள், “என்ன? இதை இவ்வளவு சாதாரணமாக நடத்திக் கொண்டிருக்கிறீர்களே! எங்களுடைய மாநிலத்தில் (உத்தரப்பிரதேசம்) இதுபோன்ற மணவிழாவை நடத்த முடியாது. இப்படி ஒரு மணவிழா எங்கள் பகுதியில் நடந்திருந்தால், இந்தப் பக்கம் ஒரு 300 பேரும் அந்தப் பக்கம் ஒரு 400 பேரும் கலவரத்தில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், நீங்கள் மகிழ்ச்சியாக நடத்தி வைக்கிறீர்கள்’’ என்றனர். இதுதான் தந்தை பெரியார் செய்த அமைதிப் புரட்சி. தந்தை பெரியார் அவர்கள் ஒரு சமுதாய சீர்திருத்த மருத்துவர்.
எங்கே இதுபோன்ற திருமணங்கள் நடந்தாலும் அது தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவம்தான் என்று பொருள். கவிஞர் இன்குலாப் அவர்கள் எதைப் பேசுகிறார்களோ _ எதை எழுதுகிறார்களோ அதைக் குடும்பம் முழுவதும் பின்பற்றுகிறார்கள் என்று சொல்லும்பொழுது, இந்தக் குடும்பம் பெருமைப்படத்தக்க பெரியார் குடும்பம் இது’’ என்பன போன்ற பல கருத்துகளை எடுத்துக் கூறினேன்.
(நினைவுகள் நீளும்…)