புள்ளம்பாடியில் பெரியார் சிலைத் திறப்பு விழா!
திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர்.பட்டி என்ற இடத்தில் வட்டார மாநாடும், மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் 11.4.1997 அன்று மக்கள் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. வட்டார மாநாட்டினை யொட்டி, ‘மந்திரமா? தந்திரமா?’, பகுத்தறிவுப் பட்டிமன்றம், அலகு குத்திக் கார் இழுப்பு, தீ மிதிப்பு என மூடநம்பிக்கையை விளக்கி நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மாநாட்டு மேடையிலே த.பசுபதி _ வி.கலைச்செல்வி ஆகியோருக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை உறுதி மொழியினைக் கூறச் செய்து நடத்தி வைத்தேன். இம் மணவிழா ஜாதி மறுப்புத் திருமணமாகவும், விதவைத் திருமணமாகவும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
அங்கு கூடியிருந்த மக்களின் ஆதரவைப் பார்க்கையில் ஜாதி, மதக் கலவரத்தைத் தடுத்து மக்களுக்கு அறிவு புகட்டுகின்ற பணியையும், மனித நேயத்தையும் வளர்க்கின்ற பணிகளைச் செய்து வரும் நம் கழகத்திற்கு மக்களிடையே அபரிமிதமான ஆதரவு பெருகி வருவதைக் கண்கூடாகக் காண முடிந்தது. மாநாட்டிற்கு கழகப் பொறுப்பாளர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
திராவிடர் கழகத் தோழர்களின் அன்பிற்கும் அவர்கள் கழகத்தின் மீது வைத்துள்ள கொள்கைப் பற்றினை வளர்க்கும் வகையில், சுற்றுப் பயணத்தின் தொடர்ச்சியாக நான்கு மண விழாக்களை நடத்தி வைத்தேன். குருகூர் ஆர்.நாகராசன் _ பழனியம்மாள் ஆகியோரின் செல்வன் நா.இமயவரம்பனுக்கும், சத்திரம் கருப்பூர் ஆர்.கலியபெருமாள் _ பாப்பா ஆகியோரின் செல்வி க.நளினிக்கும் 18.4.1997 அன்று வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதியை கூறச் செய்து நடத்தி வைத்தேன். மணவிழாவில் அனைத்துக் கட்சி, பிரமுகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடியில் செந்தமிழ்க்குமார் _ மலர்விழி ஆகியோருக்கு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை 20.4.1997 அன்று தலைமையேற்று உறுதிமொழியினை கூறச் செய்து நடத்தி வைத்தேன். அங்கு உரையாற்றுகையில், “மணமக்கள் உறுதிமொழி சொன்னபொழுது நீங்கள் எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தீர்கள். சமஉரிமை பெற்றவர்களாக இங்கு அமர்ந்திருக்கின்றார்கள். உறுதிமொழியில் இன்பத்திலும், துன்பத்திலும் என்றுதான் சொன்னோம். சிலர் நல்ல நேரத்திலே துன்பமான செய்தியை ஏன் ஞாபகப்படுத்துகின்றீர்கள் என்று நினைக்கத் தோன்றும். ஆனால், அறிவியல்ரீதியாக சிந்தனை உள்ளவர்கள் பகுத்தறிவுவாதிகள். இன்பம் என்று மட்டுமே வாழ்க்கையில் இருக்க முடியாது. துன்பமும் இருக்கத்தான் செய்யும், அதனை ஏற்று எப்படி வாழ்கிறோம், எப்படி சமாளிக்கிறோம் என்பதுதான் மிக முக்கியமானது என்றேன்.
புதுக்கோட்டையில், வேன் விபத்தில் மறைந்த அமுதன் அவர்களுடைய மரணத்திற்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் புதிய பிரச்சார ஊர்திக்கு ந.அமுதன் ஊர்தி எனப் பெயர்சூட்டி மரியாதை செய்தோம்.
அதனைத் தொடர்ந்து சேந்தங்குடியில் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி விரிவுரையாளரும், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் தெ.சு.சிவந்தபெருமாள் வழுவாடியார் _ சி.இரத்தினமாலை ஆகியோரின் செல்வி மலர்விழிக்கும் 20.4.1997 அன்று வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைத்தேன். மண விழாவிற்கு பல கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சேந்தன்குடி கிராமமே கழகக் கோட்டைபோல் காட்சியளித்தது.
சென்னை ஆவடியில் செங்கை தி.க. செயலாளர் ஆவடி மனோகரனின் தங்கையும், மதுரை நாட்டார்மங்கலம் கா.இராமசாமி, காமாட்சி அம்மாள் ஆகியோரின் இளைய மகளுமான இரா.பவானிக்கும், புதுக்கோட்டை ஆர்.வி.முத்து _ எம்.வசந்தா ஆகியோரின் மகன் வி.எம்.ஆறுமுகத்துக்கும், ஆவடி மனோகரனின் தம்பியுமான இரா.முருகேசன் _ சென்னை விருகம்பாக்கம் இரா.மீனாட்சிசுந்தரம், தனபாக்கியம் ஆகியோரின் மகள் மீ.பிரமிளாவுக்கும் _ இரு வாழ்க்கை இணையர்களுக்கும் 25.4.1997 அன்று ஆவடி முல்லை திருமண மண்டபத்தில் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தினை கூறச் செய்து மணவிழாவை நடத்தி வைத்து, சிறப்புரையாற்றினேன். கழகப் பொறுப்பாளர்களும், பொதுமக்களும் பெரும் அளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சென்ற ஆண்டில் மறைந்த சமூகநீதிப் போராளி பி.எம்.சுந்தரவதனம் அவர்களின் துணைவியார் 28.4.1997 அன்று இயற்கை எய்தினார் என்னும் செய்தி அறிந்து வருந்தினோம். தந்தை பெரியார் அவர்களின் மருத்துவரான டாக்டர் சுந்தரவதனம் அவர்கள் பெரியார் பற்றாளர். அவருடைய பிள்ளைகள் சாந்தவதனம், திருவதனம் இருவரும் தந்தை பெரியார் மருத்துவமனைக்கு மருந்துகள் மற்றும் ஏராளமான உதவிகளைச் செய்து வருபவர்கள். உடனே, அவருடைய இல்லத்திற்கு கழகப் பொறுப்பாளர்களுடன் சென்று மலர்மாலை வைத்து இறுதி மரியாதையை அம்மையாருக்குச் செலுத்தினோம்.
1997ஆம் ஆண்டு மே மாதம் முழுவதும் பல முக்கியத் திருமண நிகழ்வுகளை நடத்தி வைக்க வேண்டிய பெரும் பொறுப்பை ஏற்று நடத்தி வைத்தேன்.
நெய்வேலி பொறியாளர் இரா.வெற்றியரசு _ வெ.வாசுகி ஆகியோரின் மகன் வெ.பொழிலரசுக்கும் விருத்தாசலம் வட்டம் கொளப்பாக்கம் பா.இரகோத்தமன் _ இர.சாந்தி ஆகியோரின் செல்வி இர.கீதாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தவிழா 1.5.1997 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமையேற்று வாழ்க்கைத் துணை ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறச் செய்து நடத்திவைத்துச் சிறப்புரையாற்றினேன். மணமக்கள் கருப்பு _ வெள்ளை உடையையே உடுத்திக் கொண்டு கொள்கை பூர்வமாக இருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டது.
காஞ்சி டி.ஏ. கோபால் அவர்களின் சகோதரர் டி.ஏ.சங்கர் _ ஜோதி ஆகியோரின் செல்வன் காமராஜ் என்னும் ஆர்.ராஜிக்கும், சென்னை கொடுங்கையூர் பூபதி _ கமலா ஆகியோரின் செல்வி பி.சித்தராவிற்கும் 2.5.1997 அன்று காஞ்சி வணிகர் வீதி எஸ்.பி.கே. திருமண மாளிகையில் உறுதிமொழியினைக் கூறச் செய்து மணவிழாவினை நடத்தி வைத்தேன். மணவிழாவில் திராவிடர் கழகத் தோழர்களும், பொதுமக்களும் பெரும் அளவிற்கு கலந்துகொண்டனர்.
கும்மிடிப்பூண்டியில் 7.5.1997 அன்று கழகத் தோழர்களின் பேராதரவுடன் பிரமாண்டமான மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும், பொதுக்கூட்டமும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. பொதுமக்கள் பலர் ஆர்வத்தோடு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியும், அலகு குத்தி கார் இழுக்கும் நிகழ்வும், சாமியார்களின் மோசடிகளை விளக்கும் காட்சி நாடகமும், சிறப்பாக நடத்தப்பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றது. பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறப்புரையாற்றுகையில் தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துக் கூறினேன்.
வடசென்னை திராவிடர் கழகத் தலைவர் அ.குணசீலன்_தங்கமணி ஆகியோரின் செல்வன் கு.வீரமணிக்கும், பெங்களூர் டி.பி.மனோகரன் _ தரணி ஆகியோரின் செல்வி லதாவுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தவிழா 8.5.1997 அன்று அயன்புரம் அய்.சி.எஃப் திருமண மண்டபத்தில் தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர் கோ.சாமிதுரை அவர்களது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதியை கூறச்செய்தும், மாலை அணிவிக்கச் செய்தும் நடத்திவைத்தேன். அங்கு சிறப்புரையாற்றுகையில், சுயமரியாதைத் திருமணத்தின் அவசியத்தை எடுத்துக் கூறினேன். வடசென்னைப் பகுதியில் உள்ள கழகத்தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் இராமலிங்கம் _ பட்டம்மாள் ஆகியோரின் செல்வனும் கழக சொற்பொழிவாளருமான இரா.பெரியார் செல்வன் மற்றும் தஞ்சை வ.சுப்பையன் _ அமிர்தம் ஆகியோரின் செல்வி க.சகுந்தலா ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 10.5.1997 அன்று தஞ்சை மகளிர் பொறியியற் கல்லூரியில் இரெ.இளவரி பூங்காவில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறச்செய்து நடத்திவைத்தேன். விழாவிற்கு பல்வேறு கட்சி சார்ந்த முக்கியப் பிரமுகர்களும், கழகத் தோழர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிவகாசி கழகத் தோழர் எஸ்.பி.மணியம் _ செயலட்சுமி ஆகியோரின் செல்வன் எஸ்.பி.எம்.வள்ளுவன் மற்றும் சென்னை எண்ணூரைச் சேர்ந்த எஸ்.கருப்பையா _ சாந்தகுமாரி ஆகியோரின் மகள் க.தேவி ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா நிகழ்ச்சி சிவகாசியில் நடைபெறுவதாக இருந்தது. அப்போது தென் மாவட்டங்களில் நடைபெற்ற கலவரம் காரணமாக மணவிழா 11.5.1997 அன்று பெரியார் மாளிகையில் நடைபெற்றது.
மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா உறுதி மொழியினைக் கூறச் செய்து நடத்தி வைத்தேன். மணமக்கள் தாலி இல்லாமல், மாலை மாற்றிக் கொண்டனர். பெரியார் கல்வி நிலையங்களின் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் கழகத் தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் திருவானைக் கோவில் ஏ.கே.மகாலில் திருச்சி மாவட்ட தலைவர் இ.நடராசன் மகன் ந.சவுந்திரராசன் _ கயல்விழி ஆகியோரது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவினை தலைமையேற்று நடத்திவைத்தேன். நிகழ்வில் வீகேயென் கண்ணப்பன், கழக ஒருங்கிணைப்பாளர் கோ.சாமிதுரை மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி, கு.ஞானாம்பாள் ஆகியோரின் பேரனும், தஞ்சை நகர திராவிடர் கழகச் செயலாளர் கு.வடுகநாதன் _ சியாமளா ஆகியோரின் செல்வனும், மூத்த மகனுமான வி. அறிவுமணிக்கும், புதுக்கோட்டை எம்.சீனிவாசன் _ மோகனா ஆகியோரின் இரண்டாவது மகள் எஸ்.விஜயபிரியாவுக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா 12.5.1997 அன்று நடைபெற்றது. விழாவிற்கு எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் இராம.வீரப்பன் முன்னிலை வகித்தார். மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி வரவேற்றார். விழாவினை தலைமையேற்று மணமக்களை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறி, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்திவைத்தேன். விழாவில் ஆர்.எம்.வீரப்பன் மணமக்களைப் பாராட்டி உரையாற்றினார். இறுதியாக சிறப்புரையாற்றுகையில் சுயமரியாதைத் திருமணத்தினுடைய அவசியத்தைப் பற்றி வலியுறுத்திப் பேசினேன். இந்த மணவிழா ஒரு கொள்கை விளக்க மாநாடு போல் நடைபெற்றது.
தந்தை பெரியாரின் பெருந்தொண்டர் வி.பாலசுப்பிரமணியம் ருக்மணி ஆகியோரின் செல்வன் பூமிநாதன், புதுவை கே.தியாகராசன் விமலா ஆகியோரின் செல்வி மங்கையர்க்கரசி ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழாவை 19.5.1997 அன்று புதுவை படேல் சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் தலைமையேற்று நடத்திவைத்தேன். மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பா.சித்தார்த்தன் வரவேற்றார். மணமக்கள் இருவரையும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினை கூறச்செய்து, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்திவைத்தேன். விழாவிற்கு வந்திருந்த புதுவை மாநில முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் மணமக்களைப் பாராட்டி உரையாற்றினார்.
இம்மண விழாவிற்கு கட்சி வேறுபாடு இல்லாமல் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கழகத்தோழர்களும், பொறுப்பாளர்களும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்து சிறப்பித்தனர். முடிவில் புதுவை திராவிடர் கழகச் செயலாளர் வே.அன்பரசன் நன்றி கூறினார்.
முதுபெரும் சுயமரியாதை வீரர் காரைக்குடி இராம.சுப்பய்யா அவர்கள் சென்னையில் 21.5.1997 அன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியது. சுயமரியாதை இயக்கத்தினை தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய ஆரம்ப காலத்தில், செட்டி நாடு எனப்படும் காரைக்குடி பகுதியில் அவரது கொள்கையை ஏற்று கடுமையாக உழைத்த தோழர்களில் _ தொண்டர்களில் முன்னணி வீரர் பெரியவர் இராம.சுப்பய்யா அவர்கள்.
காரைக்குடியில் அவரது குடும்பத்துடன் நெருக்கமானவர்கள் முதுபெரும் சுயமரியாதை வீரரான என்.ஆர்.சாமி அவர்கள். அதற்கு சில ஆண்டுகள் கழித்த நிலையில் அந்த அணியில் இணைந்து பணியாற்றத் தொடங்கியவர் திரு.இராம.வீரப்பன் அவர்கள்.
பூவாளூர் அ. பொன்னம்பலனார் அவர்களும், கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் அவர்களும், அவரது துணைவியார் மஞ்சுளா அவர்களும், சொ.முருகப்பா_மரகதவள்ளி தம்பதிகளும், நீலாவதி _ ராமசுப்ரமணியம், கோட்டையூர் சிதம்பரம் _ ரங்கம்மாள் தம்பதிகளும், அக்காலத்தில் அப்பகுதியில் அய்யாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து இயக்கக் கொள்கை பரப்பியவர்கள்.
திரு. சொ.முருகப்பா அவர்கள் மாறினாலும்கூட, மற்றவர்கள் மாறாமல் இறுதிவரை சுயமரியாதைக்காரர்களாகவே வாழ்ந்து மறைந்தனர்.
சுயமரியாதை வீரர் மானமிகு இராம. சுப்பய்யா அவர்கள் அய்யா, அண்ணா, கலைஞர், அன்னை மணியம்மையார் ஆகியோரிடமும் நம்மிடமும் எப்போதும் மாறாத பாசமும், மரியாதையும் கொண்டவர், கொள்கைப் பற்றுடன் வாழ்ந்தவர்.
அவரது சுயமரியாதை இயக்க நினைவுகளை உள்ளடக்கிய நூல் வெளியீட்டு விழாவிலும் சிறப்பாக பல ஆண்டுகளுக்குமுன் உரையாற்றினார்.
அவருடைய மறைவு சுயமரியாதை உலகுக்கு ஓர் மாபெரும் இழப்பு ஆகும். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் குறிப்பாக, சிறந்த இயக்குநராகப் பரிமளிக்கும் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்களுக்கும், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும் மற்ற சகோதர, சகோதரிகளுக்கும், குடும்பத்தாருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள கழகத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் அவரது இல்லம் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினேன். அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினேன்.
திராவிடர் கழப் பிரச்சாரகர் மண்ணச்சநல்லூர் உடுக்கடி அட்டலிங்கம் _ சுசீலா ஆகியோரின் செல்வன் அ.பகுத்தறிவாளனுக்கும், துறையூர் வட்டம் கண்ணனூர் வடிவேலு _ சம்பூர்ணம் ஆகியோரின் செல்வி வ.சாந்திக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தவிழா 24.5.1997 அன்று மண்ணச்சநல்லூர் பி.ஏ.ஆர். திருமண மண்டபத்தில் தலைமையேற்று நடத்தினேன். மணமக்களைப் பற்றி அறிமுக உரைக்குபின், மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழியினைக் கூறி, மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவை நடத்திவைத்தேன். விழாவிற்கு செல்லும் வழியில் கழகத் தோழர்களின் வேண்டுகோளின்படி கழகக் கொடியினை மண்ணச்சநல்லூர் பகுதியில் ஏற்றிவைத்தேன். திருமணம் ஒரு கழக மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் உரையாற்றுகையில் மக்கள் கடவுள், ஜாதி, மத மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகக்கூடாது. நல்ல சிந்தனை உள்ளவர்களாக பகுத்தறிவாளர்களாக மாற வேண்டும் என்றும், தமிழின மக்களுக்காகப் பாடுபடுகின்ற திராவிடர் கழகத்திற்கு உங்களுடைய ஆதரவு தேவை என்பதை விளக்கியும் உரையாற்றினேன். ஏராளமான தோழர்கள் கிராமப் பிரச்சாரத்திற்கு நிதியினை வழங்கி ஊக்கப்படுத்தினர்.
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் 24.5.1997 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி நடத்தினேன். புள்ளம்பாடியில் எங்கு பார்த்தாலும் திராவிடர் கழகக் கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க அவைத் தலைவர் நாவலர்
இரா.நெடுஞ்செழியன் அவர்கள் தந்தை பெரியார் முழு உருவச் சிலையை அதிர்வேட்டுகள் விண்ணைப் பிளக்கும் வண்ணம் முழங்கிட திறந்துவைத்தார். தந்தை பெரியார் வாழ்க! டாக்டர் நாவலர் வாழ்க! என ஒலி முழக்கங்கள் ஒலித்தன. சிலை அமைப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் மெ.அன்பரசு வரவேற்றுப் பேசினார். எனது உரைக்குப் பின், சிறப்புரையாக நாவலர் அவர்கள் பெரியாரின் கொள்கைகளை மக்களுக்கு எளிய முறையில் எடுத்துக் கூறினார். விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பாராட்டப்பட்டு மேடையில் கவுரவப்படுத்தப்பட்டனர். பல கட்சி சார்ந்த பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
தஞ்சை சுவாமி மலையில் சிமிழி சி. செல்வராஜ் _ லலிதா ஆகியோரின் செல்வி செ.கீதாவிற்கும், மங்கலம் டி.கோதண்டபாணி _ கமலம்மாள் ஆகியோரின் செல்வன் கோ.ஆனந்தனுக்கும் வாழ்க்கை ஒப்பந்தவிழாவை 25.5.1997 காலை அன்னபூர்ணா திருமண மண்டபத்தில் தலைமையேற்று மணமக்களை வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழியினைக் கூறி மாலை மாற்றிக் கொள்ளச் செய்து மணவிழாவினை நடத்தினேன். விழாவிற்கு பல்வேறு கட்சிப் பிரமுகர்களும் வந்திருந்தனர். தஞ்சை மாவட்ட கழகப் பொறுப்பாளர்களும், பேராசிரியர் நம். சீனிவாசன் மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பெரியார் மருந்தியல் கல்லூரிப் பேராசிரியையும் மன்னை உத்திராபதி _ பாரதா ஆகியோரின் செல்வியுமான சுபாசினிக்கும் சிங்கப்பூர் பிரம்மநாயகம் _ முனியம்மாள் ஆகியோரின் செல்வன் சந்திரசேகருக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழா 25.5.1997 அன்று மாலை 5:45 மணிக்கு இராகு காலத்தில், விதவை மூதாட்டியர்கள் எம். மாரியம்மாள், ஆர். மாசிலா ஆகியோர் பொன் அணியினை எடுத்துக் கொடுக்க மணமக்கள் இருவரும் அதை அணிந்து கொண்டனர்.
பின்னர் மணமக்களுக்கு வாழ்க்கை ஒப்பந்த விழா உறுதிமொழியினைக் கூறச் செய்து மாலை மாற்றி நடத்திவைத்தனர். மணவிழாவில் கல்லூரி முதல்வர் ஜெய்கர், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் திருச்சி டாக்டர் கு.ராஜசேகர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள், கல்லூரி அலுவலர்கள், மாணவிகள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
(நினைவுகள் நீளும்…)