சிறுநீரகங்களும் நோய்த் தொற்றும்
KIDNEYS & INFECTIONS
மரு.இரா.கவுதமன்
மருத்துவம்:
சிறு நீர்ப் பாதை நோய்த் தொற்றை எளிதில் குணமாக்கலாம். ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போது மருத்துவம் செய்து, நோயை எளிதில் குணமாக்கலாம். நோய்க்கு அடிப்படைக் காரணமான நோய்க் கிருமிகளை அழிப்பதன் மூலம் நோயை எளிதில் குணமாக்கலாம். கிருமிக் கொல்லிகள் (Anti-biotics) மூலம், நோய்க் கிருமிகளை அழித்தால் நோய் எளிதில் குணமாகும். பொதுவாக, நைட்ரோப்யூரன்டைன், சல்பா, அமாக்ஸிசிலின், செஃபலோஸ்போரின் பாக்டிரிம், டாக்ஸிசைக்ளின், சிப்ரோப்ளாக்ஸின் போன்ற மருந்துகள் நோயை எளிதில் கட்டுப் படுத்துபவை. மருத்துவர் ஆலோசனையின் பேரில் மேற்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒரு மருந்தையோ அல்லது கூட்டாக இரு மருந்துகளோ மருத்துவர் அறிவுரைப்படி உண்ண வேண்டும். அறிகுறிகள் நின்ற உடன், குணமாகி விட்டதாகக் கருதி, மருந்துகள் உண்பதை நிறுத்தி விடக் கூடாது. மருந்துகளை முழுப் பருவமும் முடிய உண்ண வேண்டும். மருத்துவர் அறிவுறுத்திய காலம் முடிய மருந்துகளை தவறாமல் உண்ண வேண்டும்.
சிலருக்கு அடிக்கடி சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று ஏற்படும் நிலை இருக்கும். பொதுவாக ஆண்களில் சிலருக்கு, நோய்த் தொற்று இரண்டாம் முறையும் ஏற்படும். ஆனால், பெண்களுக்கு அய்ந்து பேரில் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் நோய்த் தொற்று ஏற்படும் நிலை உண்டாகும். பொதுவாக ஒரே வகை நோய்க் கிருமிகள் (ஈ கோலி _ E.Coli) காரணமானாலும், அடுத்தடுத்து வரும் நோய்த் தொற்றுக்கு வேறு நோய்க் கிருமிகளும் காரணமாகக் கூடும். சில நேரங்களில் சில வகை நோய்க் கிருமிகள் இரத்தத்தோடு கலந்து, அதிக அளவில் பெருகி, மீண்டும் சிறுநீர்ப் பாதையைத் தாக்கும். சில வகைக் கிருமிகள் வழக்கமான மருந்துகளுக்குக் கட்டுப்படாதவை. பொதுவாக ஒருவருக்கு ஆண்டுக்கு மூன்று முறையும், அதற்கு மேலும் சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று ஏற்பட்டால், நோயாளியை தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வகை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சற்று நீண்ட நாள்கள் கிருமிக் கொல்லி மருந்துகளை (Anti-biotics) உண்ணச் சொல்வர். உடலுறவு முடிந்தவுடன் ஒரு நேரம் உயிர்க்கொல்லி மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய்த் தொற்றைத் தவிர்க்க உதவும். நோய்த் தொற்றின் அறிகுறிகள் தோன்றும் ஆரம்ப நிலைகளிலேயே, ஓரிரு நாள்கள் கிருமிக்கொல்லி மருந்துகளை எடுத்துக் கொள்வதால் நோய் மேலும் வலுவடையாமல் தடுக்கும். சிறுநீர் ஆய்வுகள் நோய்த் தொற்றை அறிய உதவும்.
நோய்த் தொற்றைத் தவிர்க்கும் வழிகள்:
¨ சிறுநீர்க் கழிக்கும் உணர்வு தோன்றியவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும்.
¨ ஒவ்வொரு முறையும், சிறுநீர்ப்பையில் இருக்கும் சிறுநீர் முழுமையாக வெளியேறும் வரை பொறுமையாக சிறுநீரை வெளியேற்ற வேண்டும்.
¨ சிறுநீர் கழிப்பதை அடக்கி வைக்கும் நிலையை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
¨ அதிகம் தண்ணீர் பருக வேண்டும்.
¨ அதிக வீரியமற்ற சோப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.
¨ உடலுறவுக்கு முன், பிறப்புறுப்புகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
¨ உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழிப்பது நலம். அதனால் சிறுநீர்ப் பாதையில் ஏதேனும் கிருமித் தொற்று இருந்தாலும் அவை சுத்தமாக்கப்பட்டுவிடும்.
¨ கருத்தடைச் சாதனங்கள், ஆணுறைகள் போன்றவை கூட ஒவ்வொரு வகையில் நோய்த் தொற்றை உண்டாக்கக் கூடும். அதை மாற்றி வேறு வகைக் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தலாம். மருத்துவரின் அறிவுரையைக் கேட்கலாம்.
¨ உள்ளாடைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
¨ பருத்தி உள்ளாடைகள் பயன்படுத்த ஏற்றவை. இறுக்கமான உள்ளாடைகள் அணியக் கூடாது.
¨ இறுக்கமான ஆடைகள் நோய்த் தொற்றை எளிதில் உண்டாக்கும்.
¨ நோயின் அறிகுறிகள் தெரியும் ஆரம்ப நிலையிலேயே மருத்துவரின் அறிவுரை பெற வேண்டும்.
¨ அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்றைத் தவிர்க்க, சிறிது காலம் தொடர் மருத்துவம் தேவை. மருத்துவர் அறிவுரை பெறுவது கட்டாயத் தேவை.
¨ தன்னிச்சையாக மருந்துகள் சாப்பிடக் கூடாது.
சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்று – சிக்கல்கள்(Complications)
சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றை மருந்துகளால் எளிதில் குணமாக்கலாம். சீரான மருத்துவம் செய்யப்படாத நோய்த் தொற்றே பல சிக்கல்களை உண்டாக்கும். இச்சிக்கல்கள் நாளடைவில் ஆபத்தான அறிகுறிகளை உண்டாக்கும்.
சிறுநீரக நோய்த் தொற்று (Kidney Infection – Pyelonephritis):
நோய் சீராக மருத்துவம் செய்யப்படாத நிலையில் நோய்க் கிருமிகள், சிறுநீர்ப்பையையும் தாக்கி அழற்சியை (Cystitis) ஏற்படுத்தும். பின் அங்கிருந்து சிறுநீர்க் குழாய்கள் (Ureters) வழியே சிறுநீரகங்களுக்குப் பரவும் நிலையேற்படும். சிறு நீரகங்களில் உள்ள வடிப்பான்களில் அழற்சி (Nephritis) யை உண்டாக்கும். வடிப்பான்களில் அழற்சி பெருகி, வடிநீர்க் குழாய் முடிச்சுகள் அழற்சி (Glomarular Nephritis) யாக மாறிவிடும். முடிவில் சிறுநீரகம் முழுவதும் அழற்சியாக (Pyelonephritis) என்ற நிலை ஏற்பட்டு விடும்.
நோய்க்கிருமிப் பரவல் (Sepsis):
சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்பட்டு முற்றிய நிலையில் அங்கிருக்கும் தந்துகிகள் மூலம், கிருமிகள் இரத்தத்தோடு கலந்து உடல் முழுவதும் பரவிவிடும். கிருமிகள் நச்சும் உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவும் (Septicemia). இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure):
பெரியவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று, சிறுநீரகத்தில் காயங்களை ஏற்படுத்தும். அது வடிப்பான்களில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்தி விடும். வடிப்பான்கள் பாதிப்பால், சிறுநீர் வடிப்பது நின்றுவிடும். சிறுநீரகம் முழுமையாகச் செயலிழந்துவிடும்.
கருவுறுதலும், சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றும் (Pregnancy & Urinary Tract Infection):
சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று கருவுற்ற தாய்மார்களையும், கருப்பையில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். சிறுநீர்ப்பாதை நோய்த் தொற்றால் கருவுற்றவருக்கு மிகு இரத்த அழுத்தம் (High Blood Pressure) ஏற்படும். அதனால் குறைமாதப் பிறப்பு (Premature delivery), பேறுகால வலிப்பு (Eclampsia) போன்ற சிக்கல்கள் ஏற்படும் நிலை ஏற்படும்.
இந்நோயை முறையான மருத்துவம் மூலம் எளிதில் குணமாக்கலாம். ஆரம்ப நிலையில் மருத்துவம் மூலம் நோயை முழுமையாகச் சீராக்க முடியும். (தொடரும்)