ஒருவரது அறிவுத் திறனை அய்.கியூ (IQ) என்ற குறியீட்டால் குறிப்பிடுவது மரபு. அறிவியல்படி மனிதர்களின் அய்.கியூ 90 முதல் 110 வரை இருக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. உலகப் புகழ்பெற்ற அறிவாளிகளான பில்கேட்ஸ், ஸ்டீபன் ஹாக்கின்ஸ் மற்றும் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் ஆகியோரின் அய்.கியூ.160 என்று குறிப்பிடப்படுகிறது.
ஆனால், இந்தியாவைச் சேர்ந்த, அதிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி விசாலினியின் அறிவுத்திறன் குறியீடு 225! இவரது அபாரமான அறிவுத் திறனுக்கு அடையாளமாக இவர் படைத்திருக்கும் சாதனைகள் பலப்பல!
திருநெல்வேலியில் வசிக்கும் விசாலினி, தற்போது கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. மாணவி. அவருடைய அம்மா விசாலினியைப் பற்றிக் கூறுகையில்,
“விசாலினி தொடக்கப் பள்ளியில் பயிலும்போதே, தொடர்ச்சியாக இரண்டு முறை டபுள் ப்ரமோஷன் பெற்றாள். ஒன்பதாம் வகுப்பை, பாதியில் நிறுத்திவிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேரடியாக பி.டெக். படிப்பில் சேர்ந்தாள். அங்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் தன்னைவிட நான்கைந்து வயது மூத்த மாணவர்களுடன் படித்தாலும் எப்போதும் படிப்பில் முதல் மாணவியாகவே திகழ்ந்தாள். நான்கு ஆண்டுகள் பி.டெக். படிப்பை மூன்றே ஆண்டுகளில் முடித்து 96 சதவிகித மதிப்பெண்களுடன் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாக தங்கப் பதக்கம் பெற்றாள்.
அடுத்து, எம்.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் 98.2 சதவிகித மதிப்பெண்களுடன் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவியாக தங்கப் பதக்கம் பெற்றாள். தற்போது ஆர்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ் என்ற செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் பிஎச்.டி. ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறாள்.’’ அவருடைய வெற்றிப் பயணத்தைப் பற்றி அவர் கூறுகையில்,
“இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யமான இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பதினைந்து வயதிலேயே 700க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் மத்தியில் புதிய தகவல் தொழில்நுட்ப நுணுக்கங்கள் குறித்து விரிவாக உரையாற்றினேன். இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை உள்பட விஞ்ஞானிகள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி கவுரவித்தார்கள்.
‘எதிர்காலத்தில், இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறையில் விசாலினி முக்கியப் பங்காற்றுவார்’ என்று இஸ்ரோ இயக்குநர் பாராட்டியது என்னை ஊக்கப்படுத்தியது. இஸ்ரோவில் பதினைந்து வயது மாணவி ஒருவர், விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றியது அதுவே முதன்முறை. மேலும், அவர் திறமையை ஊக்குவிக்கும் வகையில் இஸ்ரோ எனக்கு ஓர் ஆராய்ச்சிப் பணியையும் வழங்கியது. இரண்டு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய அந்தப் பணியை 35 நாள்களில் முடித்து, அவர்களிடம் சமர்ப்பித்தேன். அந்தத் தொழில் நுட்பத்திற்கு என்னுடைய பெயரே சூட்டப்பட்டது தனிச்சிறப்பு.’’
தனது அறிவுத்திறன் தன் தாய்நாட்டுக்காகப் பயன்பட விரும்புகிறார். அவர் ‘விகா இன்னோவேஷன்-ஸ்’ என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன்மூலம் நிறைய சாதித்து வருகிறார்.
இன்று சோஷியல் மீடியா மீதான போதை மிக அதிகமாக இருக்கிறது. குறிப்பாக இளைய சமுதாயத்திடம் வெறும் பொழுதுபோக்குக்காக, கட்டுப்பாடில்லாமல் அவற்றில் நேரம் செலவிடுவது தவறு. அவற்றைப் பயன்படுத்தி, நாம் எப்படி வாழ்க்கையில் முன்னேறலாம் என்று இளைய தலைமுறையினர் யோசிக்க வேண்டும்’’ என்றார் விசாலினி.
தகவல் : சந்தோஷ்