ஆசிரியர் பதில்கள் : ஆசைக் குதிரை பறக்காது!

அக்டோபர் 1-15,2021

கே:       அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் தொடர் கட்டுரை மேலும் வரும் என்று எதிர்பார்க்கிறோம்! நிறைவேறுமா?

               – ரமேஷ், வேலூர்

    ப:       வாசகர் விருப்பம், எங்களுக்கு ஆணை; நிச்சயம் தொடரும்.

கே:       பெரியார் உலகத்தை ஓரிரு ஆண்டுகளில் கட்டி முடிக்க முடியாதா? நிதிதான் தடையென்றால் தமிழர்களிடம் உலக அளவில் திரட்டக் கூடாதா?

               – அருள்குமார், மயிலை

    ப:       நிதியே கையில் இருந்தால்கூட அத்தனை

கட்டடங்களைக் கொண்ட ஒரு புது உலகத்தை எப்படி ஓரிரு ஆண்டுகளில் முடிக்க முடியும்? குறைப் பிரசவம் ஆரோக்கியமாகாதே! நிச்சயம் விரைந்து முடிக்கலாம். ஆனால், உரிய காலம் ஒவ்வொரு பகுதிக்கும் தேவை அல்லவா? உங்கள் ஆர்வத்திற்கு நன்றி!

கே:       ‘நீட்’டை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைத்தால் விரைவில் தீர்வு கிடைக்குமே! செய்தால் என்ன?

               – புகழ், செஞ்சி

    ப:       காலம் கனிந்து வருகிறது. மேற்கு வங்கம், கருநாடகம், மகாராட்டிரம் வரிசையில் வருகின்றன. நிச்சயம் மற்றவர்களும் உணருவார்கள்.

கே:       உரசினாலே உதிரும் வலுவற்ற கட்டடங்கள் கட்டிய அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலை எந்தத் துணிவில் சந்திக்கிறது? அவர்களின் நிருவாகச் சீர்கேட்டை முன்னிலைப்படுத்திப் பிரச்சாரம் செய்தால் என்ன?

               – பெரியார் பித்தன், காரைக்குடி

    ப:       நல்ல யோசனை. இதை தி.மு.க. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் கவனிக்க; செயல்படுத்துக.

கே:       ஆழி செந்தில்நாதன் திராவிட இயக்கக் கோட்பாடுகளை முன்னிறுத்தி, தமிழ் தேசியப் போலிகளைத் தோலுரிக்கும் ஆற்றல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

               – சீனிவாசன், தாம்பரம்

ப:       அருமையான பணி செய்யும் சிறந்த கருத்தாளர். தொண்டு தொடர வாழ்த்துகள்!

கே:       எழுச்சித் தமிழர் திருமாவுக்கு கண்ணி வைக்கும் கயவர்கள் எந்த நம்பிக்கையில் அணுகுகிறார்கள்? திருமா மூன்றாவது குழல் அல்லவா?

               – லட்சுமி, கோவை

ப:       எழுச்சித் தமிழருக்கு மட்டுமல்ல; இந்த மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி தி.மு.க. தலைமையில் உள்ளதே, அதில் உள்ள எவருக்குக் கண்ணி வெடி வைத்தாலும் அதைக் கண்டறிந்து அகற்றும் பணி நம் அனைவரின் பணியாக என்றும் இருக்கும்; இருக்க வேண்டும்.

கே:       ஆளுநரை வைத்து அரசியல் நடத்த முற்பட்டால் நடக்குமா?

               – சங்கர், திருச்சி

   

ப:       ஆசைகளைக் குதிரைகளாக்கினாலும் பறக்க முடியாது.

கே:       கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கும்போது, ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடிவு மேற்கொள்வதை உச்சநீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது?     

– அசோக், பெரம்பலூர்

    ப:       மில்லியன் டாலர் கேள்வி இது! பதில் அளிக்க இயலாத நெற்றியடி!

கே:       ‘விடுதலை’, ‘முரசொலி’ ஏடுகளின் பக்கங்களை நான்காகக் குறைத்து, நறுக்காக செய்திகளைச் சுருக்கி, மலிவாக மக்கள் மத்தியில் அதிக அளவில் கொண்டு சென்றால் அதிகப் பயன் கிடைக்குமல்லவா?

               – தமிழோவியன், சிதம்பரம்

    ப:       நறுக்குகளும் கட்டுரைகளும் உரைகளும் முக்கியம் இல்லையா? 4 பக்கங்களில் முடியுமா? ஒரு டீயின் விலையைவிடக் குறைவுதானே? இதைவிட பேப்பர் விலையோ அதிகம். மலிவாக்க முடியாது.    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *