மஞ்சை வசந்தன்
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாளை ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாள்’ ஆகக் கடைப்பிடிப்பது, உறுதிமொழி மேற்கொள்வது என ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, 13.9.2021 அன்று தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது.
அதனையொட்டி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் காலை 10:00 மணியளவில் வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்தும், பின்னர் பெரியார் திடலில் உள்ள 20 அடி உயர முழு உருவ தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் ஆகியோர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப்பட்டது.
தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை
தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்,
தமிழர் தலைவர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழியான:-
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் –
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும்-பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!”
என கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சொல்ல கழகத் தோழர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
மகளிரணி சார்பில் ச.இன்பக்கனி, அ.அருள்மொழி தலைமையிலும், திராவிடர் கழக வழக்குரைஞரணி சார்பில் த.வீரசேகரன் தலைமையிலும், திராவிடன் நல நிதி சார்பில் அருள்செல்வன் தலைமையிலும், திராவிட தொழிலாளரணி சார்பில் திருச்சி சேகர் தலைமையிலும், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அதன் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் மலர் வளையம் வைத்தும் உறுதிமொழி கூறியும் மரியாதை செலுத்தினர். அதன் பின்னரும் பல்வேறு அமைப்பினரும், பெரியார் பற்றாளர்களும், பொதுமக்களும் என அன்றைய தினம் முழுவதும் பெரியார் திடலுக்கு வந்து தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திய வண்ணமிருந்தனர்.
நூல் வெளியீடு
காலை 11:00 மணியளவில் பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தந்தைபெரியார் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் வைக்கம் போராட்டம் தலைப்பில் ஜப்பானிய மொழியில் இரண்டு புத்தகங்கள் வெளியீட்டு விழா தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நூல்களை வெளியிட்டு உரையாற்றினார். ஜப்பானியத் தூதரக கலாச்சார மற்றும் தகவல் பிரிவு ஆராய்ச்சியாளர், ஆய்வாளர் செல்வி மியூகி இனோஉவே சான் நூல்களைப் பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.
அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மியூகி இனோஉவே சான் ஆகியோருக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்றார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நோக்கவுரை ஆற்றினார். சமூக நீதி நாள் உறுதி மொழியை கழகத் துணைத் தலைவர் கூற பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று அரங்கம் அதிர உறுதிகூறினர்.
திராவிடர் கழக தொழில் நுட்பப்பிரிவு வி.சி.வில்வம், ÔவரலாறுÕ இணைய இதழாசிரியர் ச.கமலக்கண்ணன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து ஜப்பானியர் கோரோ ஒசிதா உரையாற்றினர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘கற்போம் பெரியாரியம்‘ நூல் வெளியீடு
திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நூலை வெளியிட்டு உரையாற்றினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் நா.சுலோசனா நூலைப் பெற்றுக்கொண்டார்.
தந்தைபெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலர் வெளியீடு
கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி மலரை வெளியிட்டு உரையாற்றினார்.
சிறப்புவிருந்தினர்கள் அனைவருக் கும் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
விழாவுக்குத் தலைமை ஏற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அய்ந்து தீர்மானங்கள் என்ற ஓர் அறிவிப்பைத் தந்தார்.
(1) தந்தை பெரியார் பிறந்த நாளை “சமூகநீதி நாளாக” அறிவித்து அரசுப் பணியாளர்களை உறுதிமொழி எடுக்கச் செய்த தமிழ்நாடு அரசுக்கு _ சிறப்பாக மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு இடஒதுக்கீடு சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்திட கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டதை வரவேற்கிறது. ஒன்றிய அரசும் இது போன்ற கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பதும் அத்தீர்மானத்தின் முக்கிய பகுதியாகும்.
(2) அடல்பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்து பொதுத்துறையை விற்பதற்கென்றே
(Disinvestment) ஒரு தனித்துறை உருவாக்கப் பட்டது (அருண்ஷோரி என்பவர் அத்துறைக்கான அமைச்சராகவும் இருந்தார்).
வாஜ்பேயி அரசு சொத்துகளை விற்றது என்றால் தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (NDA) அரசு சொத்துகளை அடமானம் வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
அரசுத்துறை தனியார் கைக்கு மாற்றப்படும்போது இட ஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்படுகிறது. ஏன் எனில் தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லை. இந்நிலையில் தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு தேவை என்பதை வற்புறுத்துகிறோம்.
3) சமூகநீதி என்று சொல்லும் பொழுது – அது பாலியல் நீதியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
4) நீதித்துறையில் தற்போது மாவட்ட நீதிபதிகள் வரை இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால் உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இந்த நிலையில் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு அவசியம்பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
5) ‘நீட்’ தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிரானது என்றும், ‘நீட்’ ஒன்றும் தகுதிக்கு அளவுகோல் இல்லை என்றும், ‘நீட்’ கேள்வித்தாள்
34 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதும் – இது யாருக்குப் பயன்படக்கூடியது என்பதும் விளங்கக் கூடியதாகும். முறைகேடுக்கு அப்பாற்பட்ட முறையே ‘நீட்’ என்பது சுத்தப் புரட்டு என்பதும் அம்பலமாகிவிட்டது. மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டி இது தொடர்பாக மக்கள் கருத்தைப் பெரும் அளவில் உருவாக்கிட சமூகநீதியில் ஒத்த கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து முடிவு செய்யும் வகையில் வரும் 21ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் சென்னையில் பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அய்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜப்பானிலிருந்து கோரா ஒசிதா
இந்நிகழ்வில் காணொலி மூலம் ஜப்பானில் இருந்து வாழ்த்துரை வழங்கிய கோரா ஒசிதா தம் உரையில், “நான் நாற்பத்தி நான்கு ஆண்டுகள் டோக்கியோவில் துப்புரவுப் பணியில் இருந்துள்ளேன். இப்போது ஜப்பானில் நிகழும் மனித உரிமைப் பிரச்சினை களுக்கான தீர்வுகளுக்காக இயங்கி வருகிறேன். இந்தியாவிற்கு குறிப்பாக சென்னைக்கு அய்ந்து முறை என் பணி சார்ந்து பயணம் செய்துள்ளேன்.
சென்னையில் இயங்கும் தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களுடன் இணைந்து, குழந்தைகளுக்கான கல்வி உதவி பெற்றுத் தருவதில் பணி புரிந்திருக்கிறேன். ‘Sanitation Workers Soceity For Human Rights’ என்கிற அமைப்பின் தலைவராகவும் இருந்து வருகிறேன்.
இந்தியாவில் ஜாதிய அடக்குமுறைக்கு ஆளான பெரும் சமூகமாக, அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களிடையிலும்கூட ஒடுக்கப்பட்ட சமூகமாகத் துப்புரவுப் பணி யாளர்கள் இருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்.
ஜப்பானிலுள்ள துப்புரவுப் பணியாளர்களின் உரிமைக்காக பாடுபடும் இயக்கத்தை சார்ந்தவன் என்கிற முறையில், இந்தியாவிலுள்ள சக தோழர்களின் உரிமைகளுக்கு எப்படியெல்லாம் உதவலாம் என்று தொடர்ந்து இயங்கி வருகிறேன்.
மனித உரிமைக்காக ஜப்பானில் தொடர்ந்து இயங்குவதோடு, உலகின் எந்த மூலையில் இவ்வகைப் பிரச்சினை இல்லாது ஒழிக்கும் வகையில் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்’’ என கோரா ஒசிதா பேசினார்.
பெரியார் உலகமயம்!
தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய ஜப்பானியர் ஜூன்இச்சி ஹூக்காவோ, “நான் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆய்வுப் படிப்புப் படித்தேன். அங்கு இருக்கும் போது பெரியார் குறித்துப் படித் திருக்கிறேன். பெரியார் மற்றும் பொதுவுடைமைத் தோழர்களுடன் நட்பில் இருந்தேன். உலகம் முழுக்க சமநீதி என்பது கண்டிப்பாகத் தேவை! பெரியார் கொள்கைகளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்’’ என்றார்!
ஜப்பான் மொழியில் பெரியார்
பெரியார் நூல்களை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த ஜப்பான் வாழ் தமிழர் ச.கமலக்கண்ணன் பேசும் பொழுது, “சமூகநீதி நன்னாளில் சுயமரியாதைச் சுடரொளியைப் போற்றும் இத்திராவிடத் திருவிழாவிற்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் அவையத்து ஆன்றோர் அனைவரையும் வரலாறு.காம் சார்பில் வணங்கி மகிழ்கிறேன்.
2004ஆம் ஆண்டு நண்பர்களுடன் இணைந்து துவங்கிய வரலாறு.காம் மின்னிதழில் சோழர் காலக் கட்டடக்கலை மற்றும் வரலாறு தொடர்பாகப் பல கட்டுரைகளை எழுதியிருந்தாலும், பெரியார் டென்கி மற்றும் வைக்கம் நோ ஹெய்ஷி ஆகிய இந்நூல்கள் தான் என் உழைப்பைத் தாங்கி அச்சில் வரும் முதல் நூல்கள்.
இதற்கான வாய்ப்பை வழங்கிய திராவிடர் கழகத்திற்கு நன்றி கூறும் இவ்வேளையில், என் சிந்தனைக்கும் எழுத்துக்கும் உரமிட்ட இரு நல்ல உள்ளங்களை நினைவு கூர வேண்டிய கடமையும் எனக்கு உள்ளது.
சிறு வயது முதலே எதற்கும் யாருடைய தயவையும் எதிர்பார்த்து இருக்காதே, யாரிடமும் உதவியைப் பெற தன்மானத்தை விட்டுக் கொண்டிருக்காதே எனத் தற்சார்பையும், சுயமரியாதையையும் என்னுள் விதைத்த என் தந்தையார் என் முதல் நூலைக் காண இப்போது இல்லை என்ற வருத்தம் மேலிடுகிறது.
இரண்டாமவர் திருச்சிராப்பள்ளி டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மய்ய இயக்குநர் முனைவர் இரா. கலைக்கோவன் அவர்கள். வரலாற்று ஆய்வையும், ஆய்வு நெறிமுறைகளையும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர். என் எழுத்துகள் மேம்பட உதவிய அவருக்கு இந்நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொள்ள இயலாத வருத்தத்துடன் நன்றி கூறி என் உழைப்பை இருவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.
இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்தாலும், தமிழ்நாடு தனித்தன்மை யுடையது. வள்ளலார் போன்றோர் இத்தமிழ் மண்ணில் சமநீதியைப் பேசி இருந்தாலும், பெரியாரின் சிந்தனை ஓட்டமும், சமூகநீதிக் கண்ணோட்டமும் முற்றிலும் வேறானது.
முற்றிலும் வேறான பின்புலம் கொண்ட மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்ற பணி மிகப்பெரிய சவாலாக இருந்தது. உதாரணமாக ஆலய நுழைவு என்பது ஒரே சொல்லில் இன்று தமிழ்நாட்டில் எளிதாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியது. ஆனால், இப்பிரச்சினை இல்லாத ஜப்பானியர்களுக்கு இதன் பின்புலத்தை விளக்க வேண்டியது அவசியமாகிறது. இம் மூலநூலில் இத்தகைய பின்புல விளக்கங்கள் எளிதான நடையில் எழுதப்பட்டிருந்தது எங்களுக்கு உதவியாக இருந்தது.
இதற்கு எதிர்மாறானதும் உண்டு. சுயமரியாதைத் திருமணம் என்பது இயல்பான ஒன்றாக மாற பெரியார் பட்டபாடுகள் தமிழ்நாட்டில் வாழும் இன்றைய தலைமுறைக்கே புரிந்து கொள்ளக் கடினமானது. கடந்த அரை நூற்றாண்டில் இத்தகைய திருமணம் ஜப்பானில் நடைமுறையாகி விட்டது. திருமணம் செய்வதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் பெண்கள் முடிவெடுக்க வேண்டிய விசயங்கள் எனப் பெரியார் சொன்னது போல இன்றைய ஜப்பானியப் பெண்கள் பொருளாதாரத் தற்சார்பு பெற்று அதே சிந்தனையைக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களால் இவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
இந்த வாய்ப்பிற்குத் திராவிடர் கழகத்திற்கும் இம்முயற்சிக்குப் பாலமாகவும், உறுதுணையாகவும் நின்ற திரு. வி.சி.வில்வம் அவர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்!’’ என்றார்.
மொழிபெயர்ப்பாளர் ரா.செந்தில்குமார்
இந்நூல்களை மொழி பெயர்த்த ஜப்பான் வாழ் தமிழர் ரா.செந்தில்குமார் பேசும்போது, பெருமைக்குரிய இந்த அவையில் கூடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் தந்தை பெரியார் பிறந்த நாளான செப் 17 ஆம் தேதியான இன்று உங்களை எல்லாம் இணையம் வழி சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.
சிறு வயதிலேயே குடும்பத்தின் திராவிடப் பின்னணி காரணமாகப் பெரியார் ஒரு பிம்பமாக உள்ளேறியிருந்தார். பிறகு வாசிக்கும் வழக்கத்தினால், பெரியார் பற்றி படித்தவையெல்லாம் அவரைப் பற்றிய பெரும் வியப்பைத் தான் ஏற்படுத்தியது. 2002 ஆம் ஆண்டு டோக்கியோவிற்கு பணி நிமித்தம் வந்தடைந்தேன்.
அந்த காலக் கட்டத்தில் ஜப்பானி யர்களிடம் இந்தியா பற்றி பேசும் போதெல்லாம் பெரும்பாலானோருக்கு காந்தியார் அவர்களைத் தெரிந்திருந்தது. அவர்களுடைய பள்ளிப் பாடங்களிலேயே காந்தியாரைப் பற்றிய ஓர் அறிமுகம் கிடைத்திருக்கிறது என்பதைக் கண்டேன். ஆனால், காந்தியாரை விடுத்து மற்ற தலைவர்கள் குறித்துப் பெரிய அறிமுகம் இல்லை.
காந்தியாரைப் போலவே அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் இந்த மண்ணில் தோன்றிய மிக முக்கியமான வரலாற்று நாயகர்கள். தந்தை பெரியாரும், காந்தியாரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றே நான் கருதுகிறேன். இவர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் நிரப்புபவர்கள். ‘விஹ் றீவீயீமீ வீs னீஹ் னீமீssணீரீமீ’ என்று இந்த மண்ணில் முழங்கியவர் காந்தி. அப்படியே வாழ்ந்தவர்தான் பெரியார்!
மாபெரும் புரட்சியாளரான பெரியார், எதை முன்னிட்டும் மனிதன் அடிமைப்படவோ, அச்சப் படவோ கூடாது என்கிற மாபெரும் நம்பிக்கையைத் தமிழ் மண்ணில் விதைத்தவர். ஜாதியத்தின் வேரான பிராமணியத்தை எதிர்க்கின்ற மன நிலையை இந்த மண்ணில் எழுப்பியவர். எவையெல்லாம் சக மனிதனை இழிவுபடுத்துகிறதோ, அவையெல்லாம் தூக்கி எறியப்பட வேண்டியவை என்கிற கலகக் குரலுக்குச் சொந்தகாரர். அதே சமயத்தில் நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் ஏற்க வேண்டியதில்லை, உன்னுடைய அறிவுக்கு உட்படுத்தி அதை பரீசிலனை செய், சரி என்றால் ஏற்றுக் கொள், இல்லையென்றால் நிராகரி என்று சொன்ன மாபெரும் ஜனநாயகவாதி.
இன்றைக்குக் “கிச்சன்லெஸ் சொசைட்டி” பற்றி பேசுகிறோம். நூறாண்டுகளுக்கு முன்பே பெரியார் ”பெண்களை அடிமைப்படுத்தும் அடுப்பங்கரைகள் இடித்துத் தள்ளப்பட வேண்டியவை’’ என்றார்.
தன்னுடைய வீட்டுப் பெண்களை தான் நம்பிய, வழி நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் ஈடுபடுத்தியவர். காலங்காலமாக இந்த மண்ணில் வேரூன்றிய ஆணாதிக்கத்தின் சொச்சம், எப்போதெல்லாம் என்னையும் மீறி என்னுள் எழுகிறதோ, அப்போதெல்லாம் அதன் மீது விழும் அடி பெரியாரின் கைத்தடி யினுடையது. அவ்வகையில் பெரியாருக்கு நான் நன்றிக் கடன்பட்டவன்.
கி.வீரமணி அவர்கள் பெரியார் பற்றிய நூலை ஜப்பானிய மொழியில் கொண்டு வர இயலுமா என்று வினவிய போது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஆசிரியர் வினவியது ஜூன் மாத இறுதியில். அதற்குப் பிறகும், சீரான கால இடைவெளியில் அக்கறையுடன் நூலைப் பற்றிக் கேட்டுக் கொண்டே இருந்தார். எங்களுடைய மொழி பெயர்ப்பைச் சரி பார்த்துப் பிழை திருத்திய ஆசிரியர் யுதாகோ நகனோ சான் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூல் ஆக்கத்திற்குக் காரணமாக இருந்த ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
சிறந்த யூ டியூபர் (You Tuber)
சமூக ஊடகத்தளமான யூடியூபில் (You Tube) மக்களுக்குத் தேவையான பகுத்தறிவுக் கருத்துகளையும், பெரியார் சிந்தனை களையும், நகைச்சுவை நையாண்டிகளை எளிய வடிவில் புரியும் வகையில் கொண்டு சேர்ப்பதில் சிறந்து விளங்கும் நபருக்கு சிறந்த‘You Tube brochure’ என்னும் இவ்விருது இந்த ஆண்டு முதல், அமெரிக்க பன்னாட்டு பெரியார் அமைப்பின் உதவியுடன் விருதும், ரூ.25,000க்கான பரிசுத் தொகையையும் அறிவித்தது. அதனை முதல் சமூகநீதி நாளான இன்று அறிமுகப்படுத்தி சிறந்த You Tuber ஆக மைனர் வீரமணி தேர்வு செய்யப்பட்டு விருது கொடுக்கப்பட்டது.
கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்களின் உரை
மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர் பாபு
“தந்தை பெரியாரின் கனவை வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர்தான் என்றும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு குறிப்பிட்டார். ஆசிரியர் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் நூறாண்டு கண்டு நலமுடன் வாழ வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்’’ என்று தன் உள்ளத்தின் உணர்வை வெளிப்படுத்தினார்.
பேராசிரியர் சுலோச்சனா
“எங்களைப் போன்றவர்கள் படித்து ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக வளர்வதற்குக் காரணம் தந்தை பெரியாரே _- அவர்களின் சமூகநீதிக் கொள்கையே என்று நன்றி உணர்வுடன் வெளிப்படுத்தினார்.
கொசுவை ஒழிக்க அதன்மூலமான சாக்கடையை ஒழிப்பதுபோல, ஜாதி சமூக அமைப்பை ஒழிக்க அதன் மூலத்தோடு போர் புரிந்தவர் தந்தை பெரியார் என்றும் பெருமைப்படக் கூறினார்.
பார்ப்பனர் அல்லாதாரைக் குறிக்க திராவிடர் என்பதைத் தந்தை பெரியார் பயன்படுத்தியதன் காரணத்தை இந்நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார்.
தந்தை பெரியார் ஒரு தொலைநோக்காளர் – சமூக விஞ்ஞானி என்பதற்கு 1938-களில் சோதனைக் குழாய்க் குழந்தை குறித்து தந்தை பெரியார் கூறிய கருத்தும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
தந்தை பெரியார் தன்னைப்பற்றி சுய விமர்சனம் செய்து கொள்ளும்போது, “தான் ஓர் எழுத்தாளனோ, பேச்சாளனோ அல்ல; கருத்தாளன்’’ என்று குறிப்பிட்டதை வியந்து பாராட்டினார் சுலோச்சனா அம்மையார். ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் பள்ளிகளில் பாட நூலாக வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் உறுதி படக் கூறினார்.
ஜோதிமணி எம்.பி.
தந்தை பெரியார் 143 ஆம் ஆண்டு பிறந்த நாள் ‘விடுதலை’ மலரை வெளியிட்ட கரூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
“தந்தை பெரியார் ஒரு கலகக்காரரே தவிர, கலவரக்காரர் அல்ல. பெண்கள் விடுதலை என்று வரும்போது, பெண்களிடத்திலேகூட மனத்தடை உண்டு. அதற்கு மரபணுக்கள் நம்முள் பரம்பரையாக இருந்து வருகின்றன. அந்தத் தடைகளை உடைத்தது தந்தை பெரியாரின் கைத்தடி என்றார்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பதில் கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் இம்மூன்றும் முக்கியமானவை. ஆர்.எஸ்.எஸ். இந்த மூன்றையும் குறி வைத்துத் தாக்கி அழித்து வருகிறது என்ற நுட்பமான கருத்தினை அவர் பதிவு செய்தார்.
தங்கள் கலாச்சாரத்தைத் தவிர, வேறு கலாச்சாரம் தலைதூக்கக் கூடாது என்பதிலே பாசிச சக்திகள் கவனமாக இருக்கின்றன. கீழடி ஆய்வு தடைபட்டதற்கும், அதன் அதிகாரி அந்த இடத்திலிருந்து வெகுதூரத்திற்கு மாற்றப் பட்டதற்கும் இதுதான் அடிப்படை என்றார்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி இம்மூன்றும்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்றி வருகிறது என்று மிகவும் சரியாகக் கணித்துச் சொன்னார்.
ஆசிரியர் அய்யா அவர்களும், கருஞ்சட்டைத் தோழர்களும் வலிமையுடன் கருத்துகளை விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.
ஆசிரியர் அவர்கள் எனக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்கள். வெற்றிக்குப் பிறகு இப்பொழுதுதான் அவர்களைச் சந்திக்கின்றேன்.
எனக்கு நான்கு இலட்சத்திற்குமேல் வாக்குகள் கிடைத்ததற்கு ஆசிரியர் அய்யா அவர்களின் பங்கும் உண்டு – அதற்காக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களால் எழுதப்பட்ட ‘’கற்போம் பெரியாரியம்’’ எனும் நூலை திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட்டு உரையாற்றுகையில்,
“தந்தை பெரியார் அவர்களை வேறு வழியில் குறை சொல்ல முடியாதவர்கள், பெரியாருக்கு இவ்வளவு உயரத்தில் சிலை தேவையா என்று சில குள்ள மனிதர்கள் சொல்லுகிறார்கள்.
நமது சமுதாயம் நமது தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது. தந்தை பெரியாரின் கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார்.
நமது ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட ‘’கற்போம் பெரியாரியம்’’ எனும் நூல் ஆய்வு நூல் அல்ல; அறிவு நூல்! ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். நமக்குப் பாடங்களைக் கற்றுத் தரும் நூல். அவரை ஆசிரியர் என்று சொல்லுவது ஏன் என்பது இப்பொழுது புரிகிறதா?
உலகில் மதத்தின் பெயரால் – ஜாதியின் பெயரால் கட்சிகள் உண்டு. சுயமரியாதை என்னும் பெயரில் கட்சி உண்டா _- அமைப்பு உண்டா என்ற ஆழமிகுந்த வினாவை பேராசிரியர் சுப.வீ. அவர்கள் எழுப்பியபோது அரங்கமே அதிர்ந்தது.
சிலர் இப்பொழுது கிளம்பி இருக்கிறார்கள். பெங்களூரு அய்யங்கார் பேக்கரி என்றால், பெங்களூரை எடுக்க வேண்டும் என்கிறார்கள் – ஆனால், அய்யங்கார் பேக்கரி அப்படியே இருக்கட்டும் என்கிறார்கள்.
இதுதான் இவர்களின் பிரச்சினை என்று குழப்ப வாதிகளை அம்பலப்படுத்தினார் பேராசிரியர் சுப.வீ.
உலகெங்கும் சமூகநீதி நாள்
தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் எழுச்சியுடன் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதேபோல் உலகம் முழுவதும் உள்ள பெரியார் பற்றாளர்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர், தமிழ் மக்கள் என அனைவரும் தமிழ்நாடு அரசு அறிவித்த சமூகநீதி நாளை முழுமையாக ஏற்று இன உணர்வோடு தந்தை பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கொண்டாடி உறுதிமொழி ஏற்றுச் சிறப்பித்தனர்.
(குறிப்பு: ஆசிரியர், சிறப்பு அழைப்பாளர்களின் உரை அடுத்தடுத்த இதழில்)