கூகுள் பிறந்தது எப்படின்னு தெரியுமா?
‘கூகுள்’ – இந்த வார்த்தையை பயன்படுத்தாதவர்களையே காண முடியாது என்ற அளவுக்கு நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாகி இருக்கிறது. எந்த சந்தேகமாக இருந்தாலும் கூகுளை நாடலாம். ‘கூகுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்றும் கூறலாம். பல்வேறு சந்தேகங்களுடன் தன்னை தேடி வருபவர்களை கூகுள் ஒரு நாளும் ஏமாற்றியதில்லை. பல சமயங்களில் நமக்கு ஆசானாக இருக்கும் கூகுள் தேடுபொறி அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆகின்றன.
ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் 1998இல் ‘கூகுள்’ என்ற தேடுபொறியை அறிமுகம் செய்தபோது இந்த அளவு வளர்ச்சியடையும் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். லேரி பேஜூம், செர்ஜி பிரின்னும் இணையதளத்தில் குவிந்திருக்கும் தகவல்கள் ஓரிடத்தில் கிடைக்கும் வகையில் ஒரு தேடுதளத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை 1996ஆம் ஆண்டிலேயே தொடங்கினர். பின்னர் அப்படி ஒரு தளத்தை உருவாக்கி அதற்கு அவர்கள் சூட்டிய பெயர் ‘ஙிகிசிரிஸிஹிஙி’ – ஆம், ‘ஙிகிசிரிஸிஹிஙி’ என்ற பெயர் தான் பின்னாளில் கூகுள் என்றானது. எண் 1அய்த் தொடர்ந்து 100 பூஜ்யங்கள் வந்தால் அதற்கு பெயர் ‘நிளிளிநிலிணி’ இதனை அடிப்படையாகக் கொண்டே கூகுள் எனப் பெயர் சூட்டினர்.
டெல்லி பல்கலை பாடத் திட்டத்தில் நீக்கமும் ஜாதியும்!
டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத் திட்டத்திலிருந்த பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகள் திடீரென்று நீக்கப்பட்டிருக்கின்றன. மேற்கு வங்க எழுத்தாளரும், பழங்குடிகளுக்கான செயற்பாட்டாளருமான மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகளும், தமிழ்நாட்டு எழுத்தாளர்களான பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளும் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ‘பல்கலைக்கழகத் தேர்வுக்குழுவின் ஆலோசனைக்குப் பிறகுதான் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது’ என்று பல்கலைக்கழகத் தரப்பு விளக்கம் அளித்தாலும், பலரும் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. எழுத்தாளர் சுகிர்தராணி, “எனது படைப்புகள் நீக்கப்பட்டது அதிர்ச்சி தரவில்லை. ஆனால், பட்டியல் சமூக எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டு, உயர் வகுப்பினரின் படைப்புகள் சேர்க்கப்பட்டிருக் கின்றன. இதற்கு ஜாதியப் பின்புலம்தான் காரணமாக இருக்கக்கூடும்’’ என தனது கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.
எழுத்தாளர் விந்தன்
இரவுப் பள்ளியில் படிப்பறிவைப் பெருக்கிக் கொண்டவர். தமிழரசு அச்சகத்தில் என்.வி.நடராசன், ம.பொ.சி. போன்றவர்களுடன் அச்சுக் கோப்பவராகப் பணியாற்றி, பின்னர் ‘கல்கி’ இதழிலும் அதே பணியைச் செய்து, தம் அறிவுக் கூர்மையால் உதவி ஆசிரியராய் உயர்ந்தவர். அச்சு எழுத்துகளைப் பிடித்த விரல்கள் பேனா பிடித்தன. எழுத்தாளர் உலகில் எடுப்பாக தனக்கென தனி முத்திரை பதித்து, சிறுகதை (முல்லைக் கொடியாள்), நாவல் (பாலும் பாவையும்), வாழ்க்கை வரலாறு (எம்.ஆர்.ராதா), திரைக்கதை வசனம் (கூண்டுக்கிளி), திரைப்பாடல்கள் (மயக்கும் மாலை பொழுதே நீ போ போ) என்று எழுத்துலகில் சாதித்து புரட்சி எழுத்தாளராய் மிளிந்தவர். விந்தன் அவர்கள் ஒரு பன்முகத் திறனாளி!
(பிறந்த நாள்: 22.9.1916)
இலக்கியம்
நம் மக்களிடம் நிரம்பியிருக்கும் மடமை, மானமற்ற தன்மை, இழிநிலை, அறிவற்ற தன்மை இவைகளைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தின் மீதே ‘இலக்கிய மறுமலர்ச்சி’ பற்றிச் சிந்திக்க வேண்டும்.
(‘விடுதலை’, 20.4.1965)
திருமணத்துக்கு முன் கட்டாய ஆலோசனை
கோவாவில், திருமணமான ஆறு மாதம் முதல் ஓர் ஆண்டுக்குள் பல விவாகரத்துகள் நடப்பதால், இனி திருமணத்திற்கு முன் புது மணத் தம்பதிகளுக்கு கட்டாய திருமண ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளதாக சட்ட அமைச்சர் நிலேஷ் கப்ரால் தெரிவித்துள்ளார். மேலும், ஆலோசனையின் இறுதி வடிவமும் பிற தகவல்களும் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
43 இந்திய நகரங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு
வெரிஸ்க் மேப் லெக் ராஃப்ட் என்னும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, உலகளவில் 414 நகரங்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் அதிகம் தாக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் முதல் 100 நகரங்களில், 99 நகரங்கள் ஆசியாவைச் சேர்ந்தவை. மேலும், முதல் 100 நகரங்களில் 43 நகரங்கள் இந்தியாவிலும், 37 நகரங்கள் சீனாவிலும் உள்ளன. மாசுபாடு, நீர் பற்றாக்குறை, தீவிர வெப்பம், இயற்கைப் பேரிடர் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள் ஆகியவற்றால் அதிக ஆபத்தில் இருக்கும் இந்த 414 நகரங்களில் 1.5 பில்லியன் மக்கள் வாழுகின்றனர்.
உறுதிமொழி!
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் –
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும்
எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன்!
சுயமரியாதை ஆளுமைத் திறனும் – பகுத்தறிவுக் கூர்மைப் பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!
சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன்!
மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும்!
சமூகநீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதியேற்கிறேன்!’’